chandarsekar எழுதியவை | மே 6, 2010

திருட்டு பயம்

ஏறத்தாழ 100 கிலோ மீட்டர்கள், திண்டிவனம் தாண்டி விழுப்புரம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது தான் எனக்கு அந்த சந்தேகம் தோன்றியது, “வீட்டை சரியாகப் பூட்டினோமா” என்று. உடனே என்னை பதட்டம் தொற்றிக்கொண்டது.  காரில் எனது பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு பயணத்தை அநுபவித்துக்கொண்டிருந்த என் மனைவியைக் கேட்டேன். காத்துக் கொண்டிருந்தமாதிரி என் மனைவி என்னை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்.  “எந்தக்காலத்தில் நீங்கள் யாரை நம்பினீர்கள். நீங்களே எல்லாம் செய்யனும்னு நினைச்சா இப்படித்தான்” என்றாள். எனக்கு ‘ஏண்டா அவளிடம் கேட்டோம்’ என்று ஆகிவிட்டது. பின்னால் அமர்ந்திருந்த என் இரு மகன்களிடம் கேட்டேன். “யார் வீடு? ஏன் அதைப் பூட்டவேண்டும்? ஏன் பூட்டவில்லை? பூட்டாவிட்டால் என்ன?” என்ற ரீதியில் கேள்விகளை அடுக்க, இவர்களிடம் கேட்பதில் பயனில்லை என்று உணர்ந்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே வீட்டு சாவி என் சட்டை பேண்ட் பாக்கெட்டில் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. இப்போது என் முன்னால் இருந்த மிகப் பெரிய கேள்வி ‘காரை முன்னால் செலுத்துவதா இல்லை திரும்பிப் போய் வீட்டைப் பார்ப்பதா’ என்பது தான்.    போதாதகுறைக்கு முந்தையநாள் பில்டருக்கு கொடுப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்தேன். வாங்கிக்கொள்வதாகச் சொன்ன பில்டர் இன்று காலைவரை வரவில்லை.  அது வேறு ஞாபகத்துக்கு வந்தவுடன் பகீர் என்றது.  எங்கள் வீட்டில் பொதுவாகவே பீரோவைப் பூட்டுவதில்லை. இதை வேறு என் மனைவியிடம் சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்ள தயாரில்லை. மெளனமாக இருந்தாலும் என் மனது அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

வீடு பாதுகாப்பாக இல்லை என்ற மிகப் பெரிய உபாதையைத் தாங்கிக்கொண்டு மேலும் பயணப்பட முடியாது என்று தோன்றியது. திரும்ப வீட்டுக்குப் போய் நன்றாகப் பூட்டப்பட்டு பாதுகாப்பாக இருந்தால் என் மனைவியும் என் மகன்களும் என்னை கண்களால் எரித்தே கொன்று விடுவார்கள் என்று தோன்றியது.

கும்பகோணத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் போய் வரவேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் ஆறுமாத பிரார்த்தனை. ஒரு வீடு கட்டிக்கொண்டு குடியேறவேண்டும் என்பது எங்களின் வாழ்நாள் ஆசை. எவ்வளவு காலம் தான் வாடகை வீட்டில் இருப்பது? வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேமித்து, மனைவியின் நகைகளை விற்று….

“என்னங்க எல்லா நகையும் வித்துடப்போறீங்களா?”

“ஆமாமா, அப்பதான் கொஞ்சமாச்சும் தேறும்”

“இல்லீங்க இந்த நெக்லஸ் பரம்பரைபரம்பரையா எங்க குடும்பத்துல இருக்கு அதான்”

“நல்லா யோசனைப்பண்ணிப் பாரு. நாம இருக்கற நிலமையில நகையை விக்கலைனாலும் அடகு வைச்சாலும் பணம் பத்தாம போயிடும்”

“சரீங்க. அப்படியே பண்ணுங்க. ஆமா நிலம் எங்கன்னு சொன்னீங்க?

“தாம்பரம் தாண்டி படப்பை தாண்டி. அரை கிரவுண்டு நிலம். அதில 850 அடிக்கு வீடு கட்டித்தரதா பிரபோசல்”

“படப்பையா நீங்க ஏதோ கடப்பைன்னு சொன்னதா ஞாபகம்”

“கடப்பைன்னு எல்லாம் தமிழ்நாட்டுல இடம் கிடையாது.  ஆந்திராவுலதான் கடப்பான்னு ஒரு இடம் இருக்கு”

“மாப்பிள்ளே, கடப்பா கல்லு வேண்டாம் நல்ல மொசைக் தரை போடுங்க வீட்டுக்கு” என்றார் விடுமுறைக்கு வந்திருந்த மாமனார்.

“மீதி பணத்துக்கு என்ன பண்ண போறீங்க?”

“பேங்க்ல லோன் கேட்டு இருக்கேன்.  பாக்கலாம்”

“நீங்க எங்க வேலைல இருக்கிறீங்க?” என்றார் வங்கி அலுவலர்.  நான் சொன்னேன்.

“உங்க அலுவலகத்திலேயே உங்களுக்கு வீட்டு லோன் தருவாங்களே?” என்றார் மறுபடியும்.

“தருவாங்க சார், ஆனா அது பத்துமான்னு தெரியல. உங்க பேங்க் ஏஜண்ட்தான் 85 சதவீதம் வரைக்கும் லோன் கிடைக்கும்னு சொன்னாரு” என் குரலில் இருந்த தொய்வை என்னாலேயே உணர முடிந்தது.

பல்வேறு முடிவில்லா கேள்விகளும், கைகளில் அடங்காத காகிதங்களுக்கும் இடையே கணக்கில்லாத கையெழுத்துகளுக்கு பிறகு அறைகுறையாக ஒரு தொகை வங்கி லோன் ஸான்க்ஷன் ஆனது. அந்த வங்கிக் கடன் ஒப்புதலுக்காக  காத்திருந்த போது ஏற்பட்டது தான் இந்த கும்பகோணம் வேண்டுதல்.

அதற்கு பிறகு வீடு உருவானது ஒரு தனிக்கதை.  பக்கத்தில் ஒரு வீடு. கொஞ்சம் தள்ளி 2 வீடுகள். கடைக்காலுடன் நின்று போன ஒரு வீடு.  கட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீடு. பாதி கட்டப்பட்ட நிலையில் நின்றுப் போன ஒரு வீடு.  இவ்வளவு தான்.

“என்னங்க அக்கம் பக்கம் அதிகமாக வீடு எதுவும் இல்லையே” என்றாள் என் மனைவி சற்று கவலையுடனும் அதிக பயத்துடனும்.

எனக்கும் அந்த கவலை இருந்தது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இன்னும் கொஞ்சம் நாளில் நிறையப்பேர் வீடு கட்டி குடிவந்து விடுவார்கள் பாரு” என்றேன். இன்னும் சில வருடங்களுக்கு இப்படியேத்தான் இருக்கப்போகிறது என்று என் மனதுக்குள் நிச்சயமாகத் தெரிந்தது.

எனது பக்கத்து வீட்டுக்காரர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.  நேற்றுக் காலைத்தான் அவர் சொந்த ஊருக்கு ஏதோ விஷேஷம் என்று புறப்பட்டுச் சென்றார்.  போவதற்கு முன்னர்,

“சார் எங்க ஊர் குலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்கல் வைக்கப் போறோம்.  இன்னிக்கு சாயந்தரம் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல எல்லோரும் புறப்படறோம்.  வீட்டை நல்லா பூட்டிடுவோம் இருந்தாலும் போவ வர ஒரு கண் வைச்சிகிடுங்க!”

“நல்லபடியா போய்வாங்க. நாங்களும் ஒரு இரண்டு நாள் கழிச்சி கும்பகோணம் வரை போய்வரதா ப்ளான். சும்மா இரண்டு நாள் தான். வந்துடுவோம்”

“அப்படியா சார்.” அவர் முகத்தில் யோசனை தெரிந்தது.  “இருக்கட்டும் சார். பெரிய திண்டுக்கல்  பூட்டு போட்டு பூட்டிடுவேன். இங்க எல்லாம் திருட்டு பயம் கிடையாது.  நானும் அஞ்சி வருஷமா இங்க இருக்கேன்.  வரேன் சார்”  அவர் போய்விட்டார்.

சரி. பக்கத்துவீட்டுக்காரர் வந்த பிறகு எங்களுடைய கும்பகோணம் பயணத்தை வைத்துக்கொள்ள எண்ணினேன். என் மனைவியிடம் சொன்ன போது,

“பசங்களுக்கு நாளன்னிலேர்ந்து 3 நாளுக்கு லீவாம்.  நாம அந்த லீவுல கும்பகோணம் போயிட்டு வந்திரலாம்.  ஒரு இரண்டு நாளுக்கெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. அதுவும் நாம் கிளம்பற அன்னிக்கு மறுநாள் காலைல பக்கத்துவீட்டுக்காரர் வந்துடறார்.  ஓரு ராத்திரி தானே” என்றாள்.

அதுவும் சரியென பட்டது எனக்கு. ஆணால் இப்படி கதவைப் பூட்டினேனா என்பதே சந்தேகத்திற்கு இடமாகும் படி…

ஆக பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் பண்ணினாலும் உபயோகம் இல்லை. சட்டென்று ஒரு ப்ளாஷ் அடித்தால் போல, என்னுடைய நண்பன் கிருஷ்ணனுக்கு போன் செய்தால் என்ன என்று தோன்றியது.

கிருஷ்ணன் என் குரலை கேட்டதும் உற்சாகமானான்.  “எப்படிடா இருக்கே” என்றான் அதீத மகிழ்ச்சியுடன்.

நான் சுருக்கமாக வீட்டை பூட்டினேனா இல்லையா என்கிற என் சந்தேகத்தை விவரித்தேன்.

சட்டென மெளனமானான் என் நண்பன்.  “ரொம்ப சாரிடா.  நான் இப்ப டெல்லியில் இருந்து உன் கிட்ட பேசிட்டு இருக்கேன்.  இன்னிக்கு காலைல ஃஃபிளைட்ல தான் ஆபீஸ் விஷயமா வந்தேன்.  என் வேலை முடியறத்துக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்.  ரொம்ப சாரிடா”.  அவன் குரலில் உண்மையான கரிசனம் தெரிந்தது.

என்னுடைய முக்கியமான நண்பர்கள் நாலைந்து பேருக்கு போன் செய்தேன். என்னுடைய போதாத காலம் அனைவரும் வெவ்வேறு இடத்திலும் வெவ்வேறு வேலைகளிலும் இருந்தார்கள்.

வேறு வழிதோன்றாமல் ஆண்டவன் விட்ட வழி என்று காரை முன்னோக்கி செலுத்தியபடி இருந்தேன்.  ஆபத்பாந்தவனாக அப்போதுதான் ஒரு போலீஸ் ஸ்டேஷனை பார்த்தேன்.  பேசாமல் போலீஸில் ரிபோர்ட் செய்தால் நல்லது.  அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காரை நிறுத்தினேன்.  வாசலில் நடிகர் வடிவேலு போன்று ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் தன் கண்ணாலேயே ‘என்ன?’ என்று விசாரித்தார்.

“ஒரு கம்ளைண்ட் குடுக்கணும்” என்றேன்.

“உள்ளே ரைட்ல ரைட்டர் சார் இருப்பார் அவர்கிட்ட குடுங்க” என்றார் எந்த ஒரு ஸ்வாரஸ்யமும் காட்டாமல்.

“உள்ளே ஒரு போலீஸ்காரர் இடது கையில் சிகரெட்டும் வலது கையில் பேனாவுமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்தான் ரைட்டராக இருக்க வேண்டும்.

“சார்.. சார்…” என்ற என் குரலைக் கேட்டதும் இடது கையில் இருந்த சிரரெட்டை அப்படியே உள்ளங்கையில் மறைக்க முயன்று, என்னைப் பார்த்ததும் ‘இவனுக்கெல்லாம் சிகரெட்டை மறைப்பது அனாவசியம்’ என்ற பார்வையுடன், “என்ன வேணும்” என்றார்.

“சார் என் வீட்டுக்கு செக்யூரிட்டி வேணும்”

“அப்படியா ரைட்டிங்ல குடுங்க.  எந்த ஏரியா?” என்றார் ‘எங்கேயும் இந்த ஆளைப் பார்த்ததில்லையே’ என்பது அவரது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“படப்பை சார்”

“படப்பையா அது எங்க இருக்கு?”

“தாம்பரம் பக்கத்துல சார்”

“சரி, அதுக்கு எதுக்கு இங்க வந்தீங்க?”

“இல்ல சார் வந்து…” என்று இழுத்துவிட்டு கதையைச் சொல்வதற்குள் என் உற்சாகம் வடிந்து விட்டதை உணர்ந்தேன்.  என் கதையை கேட்டதும் என்னை ஒரு பூச்சியைப் பார்ப்பது போல பார்த்தார் அந்த ரைட்டர்.  பிறகு, என்னைப் பார்த்து,   ” ஏன் சார் நீங்க எல்லாம் படிச்சவங்கதானே.  நீங்களே இப்படியெல்லாம் பண்ணா படிக்காதவனை என்ன சொல்றது? வீட்டப் பூட்டாம வந்துடறது. அப்பறம் திருடு போயிடிச்சி கொள்ளை அடிச்சிட்டான்னு எங்ககிட்ட வந்து உயிரை எடுக்கறது.  போலீஸ்னா என்னானு தான் நினைச்சிட்டு இருக்கிறீங்க?” என்று ஆரம்பித்து ஒரு அரை மணி நேரம் என்னை பின்னி எடுத்தார்.  நான் ‘ஏண்டா போணோம்’ என்றாகிப் போனேன். என் நல்ல காலம் எங்கேயோ போயிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வரவே, என்னைவிட்டு விலகினார்.  நானும் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வெளியே ஓடிவந்துவிட்டேன்.

இதற்குப் பிறகு, ஆனது ஆகட்டும் என்று என் கும்பகோணம் பயணத்தை தொடர முடிவுசெய்தேன்.  கும்பகோணத்தை அடையும் போது மாலை மணி மூன்றாகிவிட்டது.  ஒரு ஹோட்டலுக்கு சென்று பசியாறிவிட்டு உடனே கோவில்களுக்கு சென்று வருவது என்று தீர்மானித்தேன்.  மனைவியும் மகன்களும் நீண்ட பயணத்தால் களைப்புற்றிருந்தாலும் எனக்காக வர முடிவு செய்தார்கள்.

சாரங்கபாணியிடமும் சக்ரபாணியிடமும் நான் நன்றிசொல்ல வந்தது மறந்துபோய் வீட்டைப் பாதுகாக்க வேண்டிக்கொண்டேன்.  பிறகு இராமசாமி கோவிலுக்கும் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் போய் வருவதற்குள் இரவு 8 மணி ஆகிவிட்டது.

என் மனைவி இன்றிரவு தங்கிவிட்டு நாளைக்கு திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், மன்னார்குடி என்று பெரிய லிஸ்ட் வைத்திருந்தாள்.  நான் அவளிடம் தீர்மானமாச் சொல்லிவிட்டேன்.

“கும்பகோணம் வந்தோம். சில கோவில்களைப் பார்த்துவிட்டோம்.  அடுத்தமுறை மீண்டும் வந்து நிதானமாக எல்லா கோவில்களையும் பார்த்துக் கொள்வோம்.  இப்போது நாம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினா விடிவதற்குள் வீடு போய் சேர்ந்து விடுவோம்” என்றேன்.  என் மனைவியும் என் மகன்களும் என்னைப் பார்த்த பார்வையில் அதீத எரிச்சல் தெரிந்தது.  இருப்பினும் நான் விடுவதாக இல்லை.

சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்டோம். இரவு பயணமாதலால் மிகுந்த எச்சரிக்கையோடும் நிதானமாகவும் காரைச் செலுத்தினேன்.  வேகமாக எதிரே வந்த லாரிகளும் பஸ்களும் என்னை முந்திச் சென்ற வாகனங்களும் என்னை மிகவும் பயமுறுத்தின.  இருப்பினும் நான் மிகுந்த கவனத்தோடு காரை ஓட்டினேன்.  எனக்கு ஏற்பட்ட களைப்பை போக்கிக் கொள்ள இரண்டு இடங்களில் காரை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.  மனைவியும் என் மகன்களும் களைப்பால் தூங்கிப் போயிருந்தார்கள்.

நான் செங்கல்பட்டைத் தாண்டியதும் ஒருவித உற்சாகம் என்னை தொற்றிக் கொண்டது.  வண்டலூர் லெவல் கிராஸிங் கேட்டில் சிறிது நேரம் காத்திருந்த போது ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக கடந்து போனது. நான் படப்பையை அடைந்து என் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினேன்.  என் கார் வீட்டு வாசலை அடைந்த போது பொழுது  புலரத் தொடங்கியிருந்தது.

ஒரு வித படபடப்புடன் வாசல் கதவை தொட்டவுடன் திறந்துக் கொண்டது.  ஹாலில் விளக்கெரிந்துக்கொண்டிருந்தது. ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.  எனக்கு யாரோ உள்ளே இருக்கிறார்களோ என்று பயமாக இருந்தது. உள்ரூமிலும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எல்லா ரூமிலும் போய் பார்த்தேன்.  யாரும் இல்லை.  பீரோவைத் திறந்துப் பார்த்தேன்.  நான் வைத்திருந்த பணம் ஐம்பதாயிரமும் இருந்த ஒன்றிடண்டு வெள்ளி பாத்திரங்களும்  பத்திரமாக இருந்தது.  ஆக கவனமறதியாக விளக்குகளையும் ஃபேனையும் நான் அணைக்காமல் போனது யாரோ ஆள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது.

ஏறத்தாழ பொழுது விடிந்து விட்டிருந்தது. பக்கத்து வீட்டில் டாக்ஸி நிற்கும் சத்தம் கேட்டது.  நாகர்கோவில் போயிருந்த பக்கத்துவீட்டுக்காரர் வந்துவிட்டார் போலும். எனக்கு நடந்ததை அவரிடம் கூறினால் சிரிப்பார் என்று தோன்றியது. எனக்கே நடந்ததை நினைக்கத் தமாஷாக இருந்தது. நான் சிரித்துக் கொள்ளவும் பக்கத்து வீட்டிலிருந்து “ ஐயோ திருடன்.. திருடன்..” என்று சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்கு ஓடினேன்.

பூட்டும் தாழ்ப்பாளும் உடைந்து கிடக்க, வீடெல்லாம் அனைத்து பொருட்களும் இரைந்துக் கிடக்க, அவருடைய பீரோ அகலமாக திறந்து கிடந்தது.  அவருடைய விலையுயர்ந்த பொருட்கள் களவாடப் பட்டிருந்தது தெள்ளத் தெளிவாக புரிந்தது. நாகர்கோவில்காரர் கீழே விழுந்து புலம்பிக்கொண்டிருக்க அவருடைய  மனைவிபெருங்குரலெடுத்து அழ அவருடைய பெண்குழந்தைகள் விஷயம் தெரியாமல் தேம்பிக்கொண்டிருந்தார்கள்.

நான் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.

chandarsekar எழுதியவை | திசெம்பர் 29, 2008

காதல் போயின்… (கடைசி பகுதி)

மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலர்கள். பெற்றோர்களின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானிக்கிறாகள். தத்தம் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறார்கள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேருகிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ். போலீஸ் ஸ்டேஷனில் கவிதா. இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி என்கிறார். லாயர் அங்கிளின் உதவியோடு விளக்கம் எழுதிகொடுத்துவிட்டு குழப்பத்தோடு வீடு வந்து சேருகிறான் ஆனந்த். தூங்கி எழுந்தால் போனில் கவிதா!

***

போனில் கவிதா! விதி துரத்துகிறதா? பயமாக இருந்தது ஆனந்துக்கு. எதற்கு இவள் மறுபடியும் போன் செய்கிறாள்? எச்சரிக்கையாகத்தான் இவளை கையாளவேண்டும்.
“என்ன கவிதா? என்ன விஷயம்?”
“இத்தனை அமளியிலும் என்ன விஷயம்னு எப்படி கேட்க முடியுது ஆனந்த்?”
“கவிதா என்னை நம்பு. எனக்கு என்ன நடந்ததுனே தெரியலை. நான் வேண்டும்ன்னே பண்ணலை. எனக்கு உயிர் பிழைக்கணும்னு தோணிண உடனே உன்னைத்தான் தேடினேன் கவிதா. Please என்னை நம்பு.”
“என்னை இதெல்லாம் நம்பச் சொல்றியா ஆனந்த்?”
“God promise, கவிதா. உனக்கு எப்படி புரியவைக்கறதுனு எனக்குத் தெரியலை”
நாம இன்னிக்கு சாயந்திரம் 6 மணிக்கு வழக்கமா சந்திக்கிற restaurant -ல meet பண்ணலாம். நீ தவறாம வந்தா உன்னை நம்பறத்துக்கு try பண்றேன்.” கவிதா போனை வைத்துவிட்டாள்.
ஆனந்த் என்ன செய்வது என்று யோசித்தான். வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் complaint -ஐ வாபஸ் வாங்க வைக்க வேண்டும். கொஞ்சம் நடிப்புத்திறமையை காட்டினால் கவிதா நம்பிவிடுவாள். எத்தனை பேரை நம்ப வைத்திருக்கிறேன். ஆண் அழுதால் தாங்குவாகளா பெண்கள்? Sentimental -ஆ பேசினா கவுந்திடமாட்டாகளா? எத்தனைப் பேரை கவுத்திருக்கிறேன். கவிதாவை இன்றைக்கு அழுது ஒழித்துவிட வேண்டியது தான். ஆனந்த் மாலை 6 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
மாலை 6:10க்கு restaurant -க்கு கவிதா வந்தபோது ஆனந்த் முன்னதாகவே வந்து காத்திருந்தான். ஒரு மூலையில் டேபிள் பிடித்திருந்தான். கவிதாவை கண்டதும் கையசைத்தான். டேபிள் மீது அவனது mobile phone.
கவிதா மௌனமாக போய் அவனருகில் உட்காந்தாள். வந்த சர்வரிடம் இரண்டு coca-cola ஆடர் செய்தாள். சற்று நேரம் இருவரும் அமைதியாக உட்காந்திருந்தாகள்.
பிறகு கவிதா ஆனந்தின் கண்களைப் பார்த்துக் கொண்டு “ஏன் ஆனந்த்? ஏன் இப்படி பண்ணினே?”

“அது தான் சொன்னேனே கவிதா. இப்படி ஆகும்னு நானே நினைக்கலை. என்னோட கட்டு அவிழ்ந்ததும் எனக்கு பயமாயிடுச்சு. வாழணும்னு நினைப்பு வந்துடுச்சு. உடனே உன்னைத் தேடினேன். நீ கிடைக்காமல் நான் அழுத அழுகை எனக்குத்தான் தெரியும்.”
“So, உனக்கு நீச்சல் தெரியும் இல்லையா?”
இந்தக் கேள்வியை ஆனந்த் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. “வந்து ஏதோ கொஞ்சம் தெரியும். அதனால தானே நான் நம்ப இரண்டுபேரையும் கயிற்றால கட்டிவிடச் சொன்னேன். தப்பித்தவறி நான் பிழச்சி நீ போயிடக்கூடாதுன்னு தான் கயிற்றால கட்டிக்கிட்டு… அது சரி. நீ எப்படி?”
“நான் S.I.E.T college ல படிச்சப் பொண்ணு”
“So?” என்றான் ஒன்றும் புரியாமல்
‘சென்னையிலேயே swimming pool இருக்கிற women’s college என்னோடது. எங்க காலேஜ்ல swimming compulsory’. என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் “பச்” என்றாள் சுவாரசியம் இல்லாமல். “எப்படியோ பிழைச்சேன்” என்னும் போது ஆனந்தின் mobile phone சிணுங்கியது. நம்பரைப் பாத்த ஆனந்த் திடுக்கிட்டான். ஷீலா!. மனதில் bulb எரிந்தது.
“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சற்றுதூரம் கவிதாவுக்கு கேட்காத தூரம் சென்றான். அவன் திரும்ப வந்தபோது இருவருக்கும் coca-cola காத்திருந்தது. கவிதா அந்த coca-cola வையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“sorry கவிதா என்னுடைய old friend” என்று சொல்லிவிட்டு coca-cola ஒரே மூச்சில் குடித்தபின் கேட்டான் இப்போ எங்கேயாவது போலாமா கவிதா? சினிமா ஏதாவது…”
“எனக்கு அந்த முட்டுக்காடு பாலத்துக்கு மறுபடியும் போகணும்னு ஆசையா இருக்கு ஆனந்த். போலாமா?” ஆனந்துக்கு சற்று சந்தேகம் வந்தது.
“முட்டுக்காடுக்கா எதற்கு?”
“இல்ல ஆனந்த் நீங்க என்னைவிட்டு பிரிய முயற்சி பண்றீங்களோன்னு நினைச்சுத்தான் போலீஸ் கேஸ் எல்லாம் கொடுத்தேன். இப்போ நல்லா தெரிஞ்சிபோச்சு எல்லாம் என் தப்புதான்னு. அதான் கொஞ்ச நேரம் முட்டுக்காடு பாலத்துக்குப்போய் பேசிட்டு அப்படியே வழியில் போலீஸ் ஸ்டேஷன் போய் என்னுடைய complaintயும் வாபஸ் வாங்கிட்டு வந்துடலாம்னு..”
ஆனந்துக்கு இது நல்லதாகப் பட்டது. இந்தப் பொண்ணை இப்போது விட்டால் மனசு மாறி நமக்கும் காலம் கடத்துவது நல்லதல்ல என்று நினைத்துக்கொண்டான்..
“முட்டுக்காடுக்கா சரி நீ ஆசைபடற. அப்படியே நம்ப கல்யாணம் எங்கேன்னு அங்கேயே பேசிக்கலாம்” என்றான் சற்று உற்சாகத்துடன்.
அவர்கள் முட்டுக்காடு வந்தபோது இரவு மணி 8 ஆகிவிட்டிருந்தது. வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல் இருந்தது. நேற்று நிறுத்திய அதே இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான் ஆனந்த். கவிதா நினைத்துக் கொண்டாள். ‘நேற்றைக்கும் இன்றைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?’
“என்ன கவிதா என்ன யோசனை”
“ஒன்னுமில்ல. நேத்தைக்கும் இன்னிக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். நேத்து சாகத்துடிச்சோம். இன்னிக்கு வாழ ஆசைப் படறோம். சரி. கல்யாணத்தை எங்க வைச்சுக்கலாம் எப்ப வைச்சுக்கலாம்?”
“கவிதா போலீஸ் ஸ்டேஷன்ல complaintஐ வாபஸ் வாங்கிட்டு அப்படியே நேரா கோவிலுக்குப் போய்..”
“அது சரி எந்த கோவில் இந்த நேரத்தில் கல்யாணத்துக்கு திறந்து இருக்கும்? நேரம் காலம் எல்லாம் பார்க்க வேண்டாமா?”
“இல்ல கவிதா நான் முடிவு பண்ணிட்டேன். இப்பவே நீ தாலி கட்டுன்னா கூட நான் ரெடி” என்ற ஆனந்த் என்னவோ தெரியலை கொஞ்ச நேரமா தலை வலிக்கிறா மாதி இருக்கு. நெஞ்ச கரிக்குது” என்றான்.
அவன் நிற்கவே சற்று தடுமாறுவது தெரிந்தது. கவிதா அதை கண்டுக் கொள்ளாமல், “ஆனந்த் அந்த நிலா வெளிச்சம் பாலத்துக்கடியிலே எவ்வளவு நல்லா இருக்கு பாரேன்!” என்றாள்.
ஆனந்த் மிகுந்த பிரயாசைப்பட்டு பாலத்திலிருந்து எட்டிப்பார்க்க முயலும்போது அப்படியே தடுமாறி மேலிருந்து தண்ணீரில் விழுந்தான். விழுந்தவன் மிகவும் பிரயாசைப்பட்டு நீச்சலடிக்க முயல முடியாமல் சோர்ந்துப் போய் மூழ்குவது தெரிந்தது. அவன் மூழ்கிய இடத்திலிருந்து வட்டவட்டமாய் நீரலைகள் பரவி கடல் அலைகளோடு கலந்தது. நிலா வெளிச்சம் பார்க்க ரம்யமாகத் தெரிந்தது. கடலில் நிலா தீற்றலாகத் தெரிந்தது. கடலலைகள தட்..தட்டென்று பாலத்தடியில் மோதும் சத்தம் சற்று சங்கீதமாகக்கூட இருந்தது. கடல் காற்று சற்று ஈரப்பசையுடன் இனம்புரியாத மணத்துடன்.. இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இந்த கடல் தான் எவ்வளவு அழகு.. எத்தனை கம்பீரம்.. எவ்வளவு பிரம்மாண்டம்!
கவிதா அவன் மூழ்குவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து விஷம் என்று சிகப்பு எழுத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த சிறிய குப்பியை எடுத்தாள். ‘thank you coca-cola’ என்று தண்ணீரில் வீசியடித்தாள். அது யாருக்கும் அதிக சத்தம் கேட்காமல் ‘க்ளக்’ என்று முழ்கியது. கைப்பையில் இருந்த கடிதங்களை எடுத்தாள். அவளும் ஆனந்தும் அவர்கள் பெற்றோர்களுக்கு எழுதிய, அவள் தபாலில் சேர்க்காத கடிதங்கள். தன்னுடைய கடிதத்தை மட்டும் சுக்கு நூறாகக் கிழித்து தண்ணீல் வீசியெறிந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் வழியில் ஆனந்துடைய கடிதத்தை தபால் பெட்டியில் சேர்த்தாள். “sorryடா ஆனந்த். என் வழி தனி வழி”.
வழியில் எதிர்பட்ட ஆட்டோவில் ஏறி வீட்டை அடைந்தபோது மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீட்டு வாசலில் அம்மா “எங்கடி போயிட்ட?” என்றாள் பதறிப் போய்.
“முக்கியமான உயிர் போற வேலை” என்று முணுமுணுத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கப் போணாள். நாளைக்காலை ‘marie stoppes clinic’ போகவேண்டும் என்று நினைத்தவாறே தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை பத்து மணிக்குமுட்டுக்காடு படகுத் துறையில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திலிருந்த ஒருவன் ‘பாவம் சின்ன வயசுப்பா’ என்று பரிதாபப்பட்டான். “போலீஸ்க்கு சொல்லியாச்சு. இப்போ வந்திருவாங்க” என்றான் இன்னொருவன்.
அந்த சிறு கூட்டத்தின் நடுவில் ஒரு கால் மடங்கி முகமெல்லாம் வீங்கி வாயில் நுரை தள்ளி திறந்த கண்களில் ஈ மொய்க்க யாரோ ஒரு பரோபகாரி தன்னிடம் இருந்த துண்டால் பிணத்தை மூடினான். மறுநாள் தினமலர் பத்திரிக்கையில் எட்டாம்பக்கம் மூலையில் சின்னதாக ஒரு செய்தி வந்திருந்தது.

*****
வாலிபர்  தற்கொலை
சென்னை: முட்டுக்காடு பாலத்திலிருந்து ஒரு வாலிபர் கடலில் குதித்து நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். கடலில் குதிக்கும் முன்னர் அவர் விஷம் அருந்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞன் பெயர் ஆனந்த் என்பதும் அவர் ஒரு பிரபல தொழிலதிபரின் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய தந்தைக்கு இறக்கும் முன்னர் எழுதிய கடிதத்தில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த இளைஞர் ஏற்கனவே ஒருமுறை தன்னுடைய கைகால்களைக் கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார்.

*****

– : முற்றும் : –

chandarsekar எழுதியவை | திசெம்பர் 22, 2008

காதல் போயின்… (பகுதி 2)

மு.க.சு: ஆனந்தும் கவிதாவும் காதலகள். பெற்றோகளின் அனுமதி கிடைக்காது என்று தற்கொலை செய்துக் கொள்ள தீமானிக்கிறாகள். தத்தம் பெற்றோகளுக்கு கடிதம் எழுதிவிட்டு முட்டுக்காடு பாலத்தின் மீதிருந்து கால்களை இணைத்து கட்டிக்கொண்டு கடலில் குதிக்கிறாகள். ஆனந்த் தன்னிடம் இருந்த கத்தியால் கட்டை அறுத்துக் கொண்டு உயிருடன் அவன் வீடு வந்து சேகிறான். சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ் …

ஆனந்த் உணர்வுக்குவர சற்று நேரம் பிடித்தது. “இங்கே ஆனந்த்ன்றது யாரு?” சாியான போலீஸ் தோரணை.
“நா.. நான் தான்…”
“இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டியாரச் சொன்னார்”
“ஏன்? எதுக்கு?”
“அதெல்லாம் எனக்குத்தெரியாது. ஸ்டேஷனுக்கு வந்து  தெரிஞ்சிக்குங்க…”
“விடிஞ்சதும் வரேன்…”
போலீஸ்காரா குரல் மாறியது. “யோவ். முதல்ல ஜீப்ல ஏறுயா…”
ஆனந்த் ஆடிப்போனான்.
“டிரெஸ் மாத்திகிட்டு வந்துடரேன்” என்றான் கீழ் ஸ்தாயிலில்.
“சீக்கரம் ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார் போலீஸ்.
ஆனந்துக்கு என்ன ஏதுவென்று புரியவில்லை. கவிதாவுடைய dead-body யை இதற்குள் கண்டுபிடிப்பது அதற்குள் சாத்தியமில்லை. ஒருவேளை தப்பி பிழைத்திருப்பாளோ? இல்லையே! அவள் உள்ளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தொிந்ததே. அவளுக்கு நீச்சல்வேறு தெரியாது. வந்து காப்பாத்தக்கூட யாரும் அருகில் இல்லையே!
அந்தக் குழப்பத்தோடு family லாயர் தினேஷூக்கு போன் செய்தான். ஐந்து ரிங் அடித்தப்பின்பு லாயர் தினேஷ் அரைகுறையான தூக்கத்துடன் “ஹலோவ்” என்றார்.
ஆனந்த் அவரிடம் போலீஸ் தன்னை அழைத்துக்கொண்டு போக வந்திருப்பதை அழாதகுறையாக தெரிவித்தான்.
“என்ன விஷயம்? தப்புதண்டாஏதாவது செஞ்சியா என்ன? சிங்கப்பூல் இருக்கிற உங்கப்பன் கேள்விபட்டா என்னை கொன்னுடுவான்”
“இல்லை அங்கிள். நான் எதுவும் பண்ணலை”
“சரி …சரி… நீ அவங்களோட போ. எந்த போலீஸ் ஸ்டேஷன்? சரி.. சரி நான் அந்த போலீஸ் ஸ்டேஷன் வரேன்.”
ஆனந்த் டீசர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வீட்டு வாசலை அடைந்தபோது போலீஸ் கடுகடுவென்று இருந்தார். “எவ்ளோ நேரம்யா. அப்படியே டிமிக்கி குடுக்கலாம்னு பாக்கறியா?” ஆனந்துக்கு என்ன ஏது என்று யூகிக்க முடியாவிடினும் ஏதோ விபரீதம் என்று உ.கை.நெ.கனியாக புரிந்தது. லாயர் அங்கிள் சீக்கிரமாக வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டு ஜீப்பில் ஏறினான்.
ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது அதிகாலை மணி 3 ஆகிவிட்டிருந்தது.

வானம் குளிருக்கு மேகத்தை இழுத்துப் போர்த்துக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளி பனிபடுகைஊடே சன்னமாகத் தொிந்தது. விழித்திருந்த யாவிலும் இரவுப் பணி செய்த களைப்பு. போலீஸ் ஸ்டேஷனை ஒட்டிய டியூப்லைட்டின் வெளிச்சம் அதன் கம்பத்துக்கே போதுமானதாக இல்லை. அருகில் இருந்த டீ கடையை திறக்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த நாயர் அநியாயத்திற்கு பாலில் தண்ணீரை விளாவிக் கொண்டிருந்தார். சைக்கிளில் சென்ற நைட் ஷிப்ட் முடித்த இருவர் தங்கள் சூபர்வைசரை கெட்ட வாத்தையில் சத்தமாகத் திட்டிக்கொண்டு சென்றார்கள் ஒதுங்கிய ஒற்றை நாய் ஜீப் அருகில் வந்துவிட்டு போலீஸ் லட்டி பயத்தில் வேகமாக எட்டிச் சென்றது.
“உள்ள போய்யா” என்றார் போலீஸ். கொஞ்சம் விட்டால் கழுத்தை நெட்டித் தள்ளுவார் போலிருந்தது. உள்ளே நுழையும்போது லாயர் தினேஷ் எதிர்பட்டார்.
“எதுவும் கவலைப்படாதே. எல்லாத்தையும் இன்ஸ்பெக்டாிடம் பேசிட்டேன்.  அந்த பொண்ணை ஏண்டா கொலை பண்ற லெவலுக்குப் போனே?
ஆடிப்போணான ஆனந்த். “எந்தப் பொண்ணு?”
“அது சரி. ஒண்ணு ரெண்டுன்னா ஞாபகம் வைச்சுப்பே!”

“உள்ள போய்யா” என்றார் போலீஸ் மறுபடியும். உள்ளே அவன் நுழைந்ததும்,
“வாய்யா மன்மதா” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. “பயங்கரமான ஆளய்யா நீ. உன்னையெல்லாம் straight ஆ encounter- ல போட்டுத் தள்ளணும்”
“இன்ஸ்பெக்டர். நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்ற லாயரைப் பார்த்து, “மொதல்ல இந்த லாயரை போட்டுத் தள்ளணும்” என்று முணுமுணுத்தவாறே “ஏம்மா லட்சுமி அந்தப் பொண்ணை இட்டாமா” என்றார் வெறுப்புடன்.
‘அந்தப் பொண்ணு’ என்றதும் ஆனந்த் நிஜமாகவே அதிர்ந்துப் போனான். என்ன? எப்படி? என்று யோசிப்பதற்குள் உள்ளிருந்து கவிதா பெண் போலீஸ் துணையுடன் சற்றே ஈரத்தலையுடன் ஈர உடையுடன் உள்ளிருந்து வெளியே வந்தாள். ஆனந்தை கண்ணுக்குள் பார்க்க முற்பட்டாள். ஆனந்த் தலையை தாழ்த்திக் கொண்டான்.
“இந்தப் பொண்ணை நீ கொலை செய்ய முயற்சி செய்ததாக complain செய்திருக்காங்க. இதுக்கு நீ என்னா சொல்ற?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“இன்ஸ்பெக்ட சார், இந்தப் பையனும் அந்தப் பொண்ணும் தற்கொலை பண்ணிக்க பாத்திருக்காங்க. அதுல இவன் முதல்ல பொழச்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு அப்புறம் பொழச்சு எழுந்து பாத்திருக்கிறாங்க. இவன் இல்லாததனால கொலை அது இதுன்னு…”
“லாயர் சார். பையனை enquiry பண்ணும்போது நீங்க கொஞ்சம் சும்மா இருங்க”
“பையன் சார்பாத்தான் பேசறேன்”
“அதெல்லாம் கோர்ட்ல வைச்சுகங்க. நீங்க இது போல பேச ஆரம்பிச்சா பையனை இப்பயே கொலை முயற்சி அது இதுன்னு உள்ளத் தள்ள வேண்டி வரும். நான் இப்போதைக்கு 309ல விசாச்சிக்கிட்டு இருக்கேன். அநாவசியமா என்னை 120, 307ல எல்லாம் கேஸ் போட வைச்சிராதிங்க. 10 வருஷம். non-bailable வேற. தெரியுமில்ல? தம்பி நீ சொல்லு இன்னா நடந்துச்சு?”

************************************************************************************************
IPC 309. ATTEMPT TO COMMIT SUICIDE: whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, shall he punished with simple imprisonment for a term which may extend to one year 151[or with fine, or with both].
IPC 307. ATTEMPT TO MURDER : whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty or murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 104[imprisonment for life], or to such punishment as is here in before mentioned.

**************************************************************************************************
ஆனந்துக்கு எங்கு ஆரம்பிப்பது எப்படி கோர்வையாகச் சொல்வது என்று புரியாமல் சற்று மௌனமாக இருந்தான். பிறகு நிதானப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தான்.
“சார், நானும் கவிதாவும் lovers சார். வெவ்வேற ஜாதி. எங்கப்பாவும் சரி அவள் அப்பாவும் சரி ரொம்பவும் prestige பாக்கறவங்க. அடுத்த ஜன்மத்திலாவது சேரலாம்னு தற்கொலைப் பண்ணிக்க முடிவு பண்ணி கைகாலை கட்டிக்கிட்டு பாலத்து மேல இருந்து விழுந்தோம். விழுந்ததில் என்னோட கட்டு அவுத்துகிச்சி. அதே நேரம் நாம செத்துப் போப்போறோம்னு பயமாயிடுச்சு. அப்பிடிஇப்படின்னு நீச்சல் அடிச்சு கவிதாவை தேடினேன். கிடைக்கல. சரின்னு வீட்டுக்கு வந்துட்டேன்.”
“கல்யாணத்துல பிரச்சனைனா பேசாம ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தானே. இப்பதான் போலீஸ் ஸ்டேஷன்லேயே கல்யாணம் கருமாதி எல்லாம் பண்ணி வைக்கறாங்களே. அது சரி உனக்கு போலீஸ்ல சொல்லணும்னு தோணலையா?”
“பயந்துட்டேன் சார். கொஞ்சம் நிதானப் படுத்திகிட்டு கிளம்பும்போது போலீஸ் வந்துட்டாங்க”
“கொஞ்சநேரம் கழிச்சி வந்திருந்தா சவாரி உட்டுருப்பே!” என்ற இன்ஸ்பெக்டர் head constable பக்கம் திரும்பி, “சரி சரி.. ஏகாம்பரம் இவன் கிட்ட எழுதி வாங்கிக்க. லாயர் கிட்டயும் கையெழுத்து வாங்கிக்க.” என்றார். பிறகு லாயரைப் பார்த்து, “லாயர் சார். நான் ஏதும் FIR போடலை. திருப்பியும் enquiry ஏதும் கூப்பிட்டா வரணும். நான் totalஆ release பண்ற வரைக்கும் பையன் எங்கும் ஊர் கீர் போகக்கூடாது” என்ற இன்ஸ்பெக்ட நாற்காலியில் சாய்ந்து உட்காந்தார். “சே! என்ன கேஸ்டா இது. காலங்காத்தால” என்றார் அலுப்புடன்.
“ஏம்மா. புடிச்சப்பொண்ணுதான நீ. இவனைமாதிரி காவாலிபசங்க கூப்பிட்டா உடனே போயிடுவியா? உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்ல. உன்னோட அப்பன்காரனைச் சொல்லணும்”. என்ற இன்ஸ்பெக்டர், “யோவ் டிரைவர் ராமசாமிகிட்டச் சொல்லி ஜீப்ல இந்தப் பொண்ணை அவ வூட்டாண்ட உட்டுட்டுவரச் சொல்லுயா. விடியறத்துக்குள்ள பொண்ணு வூடுபோய் சேரட்டும். ராவு பூரா பொண்ணு வரலேன்னு அவ அப்பனாத்தா என்னாபாடு படராங்களோ! கண்டவன் கஷ்டமெல்லாம் நாம பட வேண்டியிருக்கு” என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைபேசியில் விடுவிடுவென பட்டனை அழுத்தினார். எதிர்பக்கம் attend பண்ண சற்று நேரம் ஆயிற்று போலும். “சே! இந்த காலத்துப் பொம்பளைங்க என்னா தூக்கம் தூங்கறாங்கப்பா” என்று அலுத்துக் கொள்ளும்போது எதிபக்கம் ஒரு பெண் குரல் “அலோ யாருங்க பேசறது?” என்றது தூக்கக் கலக்கத்துடன்.
“ஜானகி நான்தான் பேசறேன். நம்ப பொண்ணு கல்யாணி எங்கே?” என்றார் சற்று பதட்டத்துடன்.
“உள்ரூம்ல தூங்கறா. என்ன விஷயம்ங்க? எழுபட்டுங்களா?”
“ஒன்னுமில்ல..  ஒன்னுமில்ல… தூங்கட்டும் எழுப்பாதே” என்றார் சற்று நிம்மதியுடன்.
ஆனந்த் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவழியாக கிளம்பி லாயர் அங்கிளின் தொணதொணப்பிலிருந்து தப்பித்து வீடு வந்து சேந்த போது மணி 5¾ ஆகிவிட்டிருந்தது.

ஆனந்துக்கு எதுவுமே புரியவில்லை. சே! எப்படி ஆச்சு! எங்கே தப்பு செய்தோம்? என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கிப் போணான்.
தூக்கம் கலைந்து எழுந்த போது mobile போன் மணி கிணுகிணுத்துக் கொண்டிருந்தது. மணி காலை 10¼ ஆகிவிட்டிருந்தது. ‘ஒரு வேளை மறுபடியும் போலீஸா?’ என்ற பதட்டத்தோடு mobile போனை எடுத்தான். எதிர்முனையில்.. கவிதா!

– தொடரும்

chandarsekar எழுதியவை | திசெம்பர் 18, 2008

காதல் போயின்…

சாதல் என்பது பிறர்க்குறியதாதலால்
அன்பே வா! காதல் செய்வோம்!!

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு,
பரிதாபத்துக்குரிய உங்கள் மகள் எழுதிக் கொள்வது. இந்த உலகத்தில் காதலிப்பது என்பது ஏழேழு ஜன்மத்துக்கும் பாவம் என்பது தெரியாமல் காதலித்த பாவத்திற்காக உயிரைவிட தீர்மானித்து விட்டேன். உலகத்தில் உள்ள எல்லா பெற்றோர்களைப் போல கௌரவத்தையும் இறந்து விட்ட பின் என் உடலையும் கட்டிக் கொண்டு அழுங்கள். நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் பொறுப்பல்ல.
பரிதாபத்துக்குறிய அபலை.
“இது போதுமா ஆனந்த். வேற எதுனா எழுதணுமா?”
“போதும் கவிதா. கையெழுத்துப் போட்டுக் கொடு. போஸ்ட் பண்ணலாம்.”
இதேபோல ஆனந்தும் எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினான். ஏறத்தாழ இதே போல அவன் பெற்றோருக்கு. கவிதாவுக்கு திடீரென்று வேர்த்தது. ஆனந்தையே வெறிக்கப் பார்த்தாள். அவனிடம் சாகப்போகிற பயமே ஏதும் இல்லை. அனைத்துக்கும் துணிந்தவன் போல முற்றும் துறந்த முனிவன் போல ஏதொரு பதட்டமும் இல்லாமல்.

*******

“நாம எப்போ கல்யாணம் செஞ்சிக்கப்போறோம் ஆனந்த்?”
“நாம கொஞ்சம் different இல்லையா அதனால..”
“அதனால?”
“நாம குழந்தை பிறந்தபிறகு கல்யாணம் பண்ணிக்கிலாம்னு..அதனால..”
“அதனால?”
“அதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பிக்கலாமா?”
சற்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சற்று லேட்டாக புரிந்துக் கொண்டு
“செருப்பு பிஞ்சிடும்” என்றாள் செல்லக் கோபத்தோடு.
“அதுக்குத்தான் படுக்கையில் செருப்பு போடக்கூடாது” என்றான் விடாமல்.

******

“என்ன கவிதா பயமாக இருக்குதா?”
“நாம தற்கொலை செய்துக் கொள்ளத்தான் வேண்டுமா ஆனந்த்? உயிரோட போராடி பார்த்தால் என்ன?”
“பைத்தியம் போல உளராத கவிதா. உன்னை விடு. நாம காதலித்தப் பாவத்துக்காக உன்னோட குடும்பம் நாசமா போகணுமா? என்னோட அப்பாவைப் பத்தி உன்கிட்ட எவ்வளவு சொல்லியிருக்கேன். பணம் பத்தும் செய்யும் கவிதா. கொலைகூட. உங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிடுவார் என் அப்பா. உனக்கு அவருடைய வேரொரு முகத்தை பற்றித் தெரியாது. இவ்வளவு நேரம் இதெல்லாம் பேசிதானே இந்த முடிவுக்கு வந்தோம். சரி விடு. உனக்கு பிடிக்கலைனா வேணாம். ஆனா நாம இந்த ஜன்மத்துலே ஒன்னு சேறது முடியாத விஷயம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறது முடியாததுனால சேர்ந்து சாக முடிவெடுத்தோம். இப்போ நான் மட்டும் தான் தனியா சாகணும் போல…”
“இல்ல ஆனந்த். நானும் நீயும் சேந்து சாகலாம். வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதபோது சாகும்போதாவது நம்மோட காதலின் அர்த்தம் புரியட்டும்.”

*****
“நம்ப கல்யாணம் ரொம்ப simpleஆ இருக்கணும் ஆனந்த். just a register marriage and a reception”
“ஏன் பிரம்மாண்டமான கல்யாணம்னா வேணாமா?”
“வேணும்தான். ஆனா எங்க வீட்டையும் உங்க வீட்டையும் நினைச்சாதான் பயமா இருக்கு!”
“அதெல்லாம் கவலைப்படாதே. ஒரு குழந்தையோட போய் நின்னா எல்லாம் சாியாப் போகும்!”
“உன்கிட்ட எனக்கு பிடிக்காததே அதுதான். உன்கிட்ட எதுபத்தி பேசினாலும் – குழந்தை பிறக்கறதுலே தான் போய் முடியும்”
“உன்கிட்ட எனக்கு பிடித்ததே அதுதான்” என்றான் ஆனந்த்.

*****

“சரி வா! சாகலாம்!!”
“எங்கே?”
“முட்டுக்காடு பக்கத்தில் ஒரு பாலம் இருக்கு. அடியில் கடல் தண்ணீர். ஒரு பத்தாள் ஆழம் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு ஈ காக்கா இருக்காது”
“ஈ காக்கா எல்லாம் தான் நாம செத்துட்டப்புறம் வருமே” என்றாள் சோகமாக.
“அது சரி உனக்கு நீச்சல் தெரியுமா?” என்றான் ஆனந்த் திடீரென.
“உங்களுக்கு?”
“நீச்சல்னு எழுதினா படிக்கத் தெரியும்”
“உங்களுக்கே தெரியாது. எனக்கு எப்படித் தெரியும்?”
“சரிதான். city girl. சென்னை ரோடுல மழைகாலத்துல நீச்சல் அடித்தால் தான் உண்டு”
ஆனந்த் அவனுடைய கடிதத்தை ஒரு கவரில் வைத்து ஒட்டி அவனுடைய வீட்டு விலாசம் எழுதினான். அவளும் அஃதே. அங்கே பக்கத்தில் ஒரு தபால் பெட்டி இருந்தது. ‘அடுத்த தபால் எடுக்கும் நேரம் காலை 8 மணி’ என்று இருட்டில் கஷ்டப்பட்டு படித்தான் ஆனந்த். இரவு மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீதியில் இரெண்டொருவர். இவர்களை யாரும் சட்டை செய்யவில்லை.
“இன்னமும் 10 மணி நேரம் கழித்துத் தான் நம்முடைய விதி எல்லோருக்கும்  தெரியும். கவிதா இந்த கடிதங்களை நீயே தபால் பெட்டியில் போட்டுவிடு” என்று இரண்டு கடிதங்களையும் கவிதாவிடம் கொடுத்தான் ஆனந்த்.

*****
“நம்ப கல்யாணப் பத்திக்கை ரொம்ப grandஆ இருக்கணும் ஆனந்த்”
“கல்யாண பத்திகையில் எதுக்கு grand?”
“என்னோட friends எல்லாம் invitationஐ பாத்து அசந்துடணும்
“அவங்க அசந்து போறத்துக்கு வேற விஷயம் வைச்சுருக்கேன்”
“என்னது?” என்றவள் சற்று நேரம் கழித்து புரிந்தவுடன் “சீ!” என்றாள்.

*****

கவிதாவுக்கு மனம் கனத்தது. அவளால் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுகையாக வந்தது. சுரிதார் துப்பட்டாவில் கண்களை துடைத்துக் கொண்டாள். கையை தபால் பெட்டிக்குள் நுழைத்து அப்படியே சற்று நேரம் நின்றுக் கொண்டிருந்தாள்.
“என்ன கடிதங்களை போட்டுவிட்டாயா?”
துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டு தன்னுடைய கைகளை விரித்துக் காட்டினாள்.
“ஆச்சு! எல்லாம் ஆச்சு” என்றாள் சற்று அழுகுரலுடன்.

ஆனந்துடன் மோட்டார்பைக்கில் போனபோது அந்த நேரத்தில்கூட ஆனந்தமாக இருந்தது. அவனின் அருகாமையும் manlyயான அவனின் deodrant வாசனையும் அவளை அந்த நேரத்திலும் மிகவும் ஈர்த்தது. ஏதோ கதை சொல்வாகளே சாகும்போது தேன்துளியை ருசித்தவனைப் பற்றி. அதுபோல.

அந்த பதினொருமணி ராத்திரிவேளையில் அந்த பாலம் அம்போ என்று அனாதையாக யாருமில்லாமல் இருந்தது. பாலத்துக்கடியில் நீர் மோதுவது digital stereo effectல் பிரம்மாண்டமாக சற்று பயமாகக் கூட இருந்தது. ஆனந்த் சற்று நேரம் கவிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

*****
“நம்ப குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் ஆனந்த்?”
“என்ன? என்ன சொன்ன?” என்றான் ஆனந்த் அதிர்ந்துப் போய்.
“ஆமா. ஆனந்த். இன்னும் 8 மாசத்துல நீங்க அப்பா ஆகப் போறீங்க”
“அப்படீங்கற?”
“நம்ப கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல நடந்தாத்தான் நல்லது ஆனந்த். இல்லேன்னா நமக்கு அசிங்கமாயிடும்”
“என்ன அசிங்கம்?”
“அது சரி. கல்யாணப் பொண்ணு  pregnant ஆ இருந்தா பாக்றவங்க என்ன சொல்வாங்க?”
“அதுவும் சரிதான்”

*****

“என்ன ஆனந்த் என்னையே பாத்துக்கிட்டிருக்கே?”
“ஒன்னுமில்லை கவிதா. இன்னும் கொஞ்சநேரத்தில் நாம அவ்வளவுதான்”
“நாம பிரியப் போறோம் இல்லை… அதுதான் எனக்கு கவலையா இருக்கு”
“என்ன சொல்ற கவிதா?”
“ஆமா! நாம கடல்ல விழுந்தவுடன் உங்களுக்கு ஒரு அலை எனக்கு இன்னொரு அலை”
“நாம பிரியப் போறதில்லை கவிதா. சேர்ந்தேதான் சாகப்போறோம்” என்றவன் மோட்டாபைக்கின் side-box ஐ திறந்து ஒரு நைலான்கயிறை எடுத்தான். கவிதா அவனை ஆச்சாியம் + கேள்விக்குறி கலந்த முகபாவனையோடு அவனை நெருங்கினாள்.
“இந்த கயிற்றால் நம்மை நாம் கட்டிக்கொள்ளப் போகிறோம். இரண்டுபேரும் சேர்ந்தேதான் சாகப்போகிறோம்”
கவிதா முகத்தில் ஆச்சாயம்+குழப்பம்+பயம் அனைத்தும் அந்த இருட்டிலும் டாலடித்தது.
“நான் ரெடி. நீ ரெடியா?” என்றான் ஆனந்த்
கவிதாவுக்கு அந்த இரவு நேரத்திலும் வேர்த்தது. மனதுக்குள் ஆண்டவனை ப்ராத்தித்துக் கொண்டாள். அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டாள். மனம் மிகவும் கனமாகிப் போனது. எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் அழுதாள். ஆனந்த் அவளை அணைத்துக் கொள்ள வந்தாள். வேண்டாம் என்று விலகினாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக
“சரி. நான் ரெடி”
“இந்த கயிற்றால் நீயே நம்மிருவரையும் கட்டிவிடு கவிதா”

கவிதா குழப்பத்தோடு ஆத்திரத்தோடு +கவலையோடு+ பயத்தோடு கயிற்றால் தன்னையும் அவனையும் சேர்த்துக் கட்டினாள். ஆனந்தோடு பழகிய நாட்கள் சுற்றிய இடங்கள் எல்லாம் நினைவுக்கு வர இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருவரும் மெல்ல நகர்ந்து பாலத்தின் விளிம்புக்கு வந்தார்கள். மேலே இருந்து கீழே குதித்தார்கள்.

குதித்த அவர்கள் அந்த 27 அடி உயரத்திலிருந்து கடலின் மேல் மட்டத்தில் ‘தட்’ என்று மோத சரியாக 1.3 வினாடிகள் பிடித்தது. அவகள் விழுந்ததன் ஒலிஅலைகள் 79 அடி சுற்றளவு தூரத்துக்கு பரவியது. கீழே விழுந்ததும் கடலடியில் 12 அடி செங்குத்தாக சென்றார்கள். விழுந்த இடத்தில் இருந்து நீர்வட்டங்கள் தோண்றி 23 அடி ஆரம் அளவு பொிதானபின் காணாமல் போக ஏறத்தாழ 16 வினாடிகள் ஆயிற்று.
கவிதாவின் தலைமுடி தண்ணீர் அடியில் பரவி அலைந்தது. சற்று மூச்சு திணறுவது போல தோன்றியது. கவிதா கட்டியிருந்த கயிறு மிகவும் பலவீனமாக இருந்தது. அவள் தன்னை விடுவித்துக் கொள்ள ஏதும் பிரயத்தனம் செய்யாதது ஆனந்துக்கு சற்று வியப்பாகக்கூட இருந்தது. கடலில் குதித்தவுடன் அற்பாயுசில் போய்விட்டாளா? அவள் உடல் கனமடைந்து அவனையும் இழுத்துக் கொள்ளும் முன்ன தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். சற்று சிரமப்பட்டாலும் ஆனந்துக்கு தனது கைகளை விடுவித்துக் கொள்ள முடிந்தது. விடுவித்துக்கொண்ட கைகளை தன்னுடைய பாண்ட் பாக்கட்டில் நுழைத்து சிறிய கத்தியை எடுத்தான். சற்று உடலை வளைத்து ஒரு தேர்ந்த gymnast போல கால்கட்டை வெட்டினான். கவிதாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு மெல்ல மேலெழும்பி கடல் மேல் மட்டத்துக்கு வந்து காற்றை சுவாசித்தபோது அப்பாடா என்றிருந்தது ஆனந்துக்கு. இந்நேரம் கவிதா கடலடியில் போயிருப்பாளா? திரும்பிக்கூட பார்க்கத் தோணவில்லை ஆனந்துக்கு. காயம் ஆனதும் கழட்டிவிட என்னவெல்லாம் நாடகம் ஆட வேண்டியிருக்கிறது!!!
கவிதாவுடைய friend யாரது? ஆங்… ஷீலா முதலில் வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் rest. காலையில் முதல் வேலையாக போஸ்ட்மேனைப் பாத்து லெட்டரை வாங்கணும். முதலில் வீடு. கொஞ்சம் நேரம் தூக்கம். ஆனந்த் பாலத்தின் மேலிருந்த மோட்டார் சைக்கிளை உதைத்து start செய்தபோது சற்று உற்சாகமாக உணந்தான். என்ன ஒரு planning. என்ன ஒரு execution!
ஈர உடம்பில் காற்று வருடியது சற்று சுகமாக இருந்தது. இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கக்கூட இல்லை. நாளைக் காலையில் தினத்தந்தியில் ஒரு பத்தி செய்தி. பிறகு ஒரு மாதம் தாடியுடன் திரிந்துவிட்டு அதையே french cut ஆக மாற்றிவிட்டு… ஆங் ஷீலா!

ஆனந்துக்கு சற்று சந்தோஷமாக இருந்தது. விசிலடித்த படி வீடு போய் சேர்ந்தபோது மணி 1 ஆகி விட்டிருந்தது. தலையை துவட்டிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தவுடன் ஆனந்தை தூக்கம் தழுவிக் கொண்டது. கனவில் கவிதா தோன்றி அது..! படத்தில் வரும் பேய் ஸ்நேகாவைத் துரத்துவது போல முட்டைக் கண்களுடன் விரட்டிக்கொண்டு வந்தாள். ஆனந்த் வேகமாகப் ஓடிப்போய் மூச்சு வாங்க வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான். கவிதா விடாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்க திடீரென முழித்துக் கொண்டான். கதவை தட்டும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. கனவா இல்லை நிஜமா என்று புயாமல் சற்றுநேரம் இருந்தான். கதவு தட்டும் சத்தம் வலுக்கவே மெதுவே எழுந்துப் போய் கதவை திறக்க வெளியே போலீஸ்…

chandarsekar எழுதியவை | திசெம்பர் 11, 2008

விறகு

“காலம்பர ஒருக்கா.. மதியம் ஒருக்கா அட்டனென்ஸ்ல கையெழுத்த சுத்தனமுனா முடிஞ்சது சோலி. அப்புறம் கேக்கறத்துக்கு நாதியில்ல. சென்ட்ரல் இல்ல மூர்மாக்கட்ட காலம்பர சுத்திட்டு வந்து சாப்டுட்டு பர்மா பஜார் பாரீஸ்கார்னரை சாயந்தரம்னு சுத்திட்டு வந்தோம்னா பையை தூக்கிட்டு கிளம்பிறவேண்டியது தான். சமயத்துல போன் பில்லு, கரண்டு பில்லு கட்றதுனு, பேங்க் போறதுன்னு ஏதுனா சொந்த வேலை இருக்கும் அதை முடிச்சுக்க வேண்டியது. கறிகாய் வாங்கறது துணிமணி எடுக்கறதுனு எல்லாம் நேரத்தோட முடிச்சி வைச்சிகினும்னா சாயந்தரம் 5க்கு ‘டாண்’ணு கிளம்ப சௌகர்யமா இருக்கும். பசங்க இந்த பேப்பரை பாத்துக்குடு அந்த பேப்பரை எழுதிக்கொடுன்னு ஃபைலை நீட்னா மாட்டிக்கிட கூடாது. அதுக்கு வெவரமான பசங்க இருக்காங்க. அவுங்ககிட்ட தள்ளி உட்டுடனும். மாட்டிக்கிட்டோம் அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு நீண்டுகிட்டே போயிடும். சாக்கிரதையா இருக்கணும். அதுக்குத்தான் முதல்லே பேப்பரை கொண்டுவரச்சேயே ‘அதா கிஸ்டன் பாக்கரான்னு நினைக்கேன்.. என்னா அவருது இல்லையாம்மா அப்போ ராமனை கேட்டுபாத்தியா’ன்னு சுத்தல்ல வுட்டோம்னா நாம்ப ஊரைச்சுத்த நேரம் கிடைக்கும் இல்ல அவ்வளவுதான் ஃபைலைத்தான் சுத்திசுத்தி வரணும். வாரத்துல அஞ்சி நாள் இப்படி அப்படி சோலி. சனி ஞாயிறு லீவு. எப்பனா ‘டர்ன்னு டூட்டி’ன்னு எழவெடுப்பானுக. ஒரு ரெண்டு மணிநேரம் இருந்துட்டு கடைய கட்டிட வேண்டியதுதான். ஆனா தவறாம ஒரு சிஆர் க்ளெய்ம் பண்ணிடணும்”.
நான் இந்த அலுவலகத்தில் புதிதாக அலுவலக உதவியாளனாக சேர்ந்தபோது சந்துரு சாரிடம் வேலை கற்றுக்கொள்ள பணித்தார்கள். சந்துரு சாருக்கு முப்பது வருட சர்வீஸ். அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது தான் முதல் பாராவில். ஓன்று மட்டும் புரிந்தது. வேலை கிடைப்பதுதான் கடினம் பார்ப்பது அல்ல என்பது. சந்துரு சார் சொன்னது ஏதும் புரியாமல் மலைப்பாக இருந்தாலும் ஒன்று மட்டும் புரிந்தது. இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் செத்தான்.
“என்னா பாக்குற இந்த நாலு ஃபைலை எடுத்து உன் டேபிள்ள வைச்சுக்கோ. டேபிள் வெத்தா இருக்கக் கூடாது.”
“என்ன ஃபைல் சார்் இது? நான் என்ன பண்ணனும்?” என்றேன்.
“யாருக்குத் தெர்ியும். ரொம்ப நாளா என் டேபிள்ள இருந்தது. பாத்தியா இதுக்குத்தான் புதுசா வர பசங்களுக்கு வேலை சொல்லி தரதில்லை” என்று சத்தமாக சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டார்.
நான் ஆவல் மிகுதியால் ஒரு ஃபைலின் நாடாவை பிரித்ததுதான் தாமதம் கிளம்பிய தூசியில் அடுக்கடுக்காக தும்பல்கள். என் வரிசை ஓரமாக கண்களை மூடிக்கொண்டு இருந்த ஒருவர் என்னை எரிச்சலுடன் பார்த்தவுடன் ஃபைலை மூடி வைத்துவிட்டேன். மணி 10 ஆகிவிட்டிருந்தது. சாயந்தரம் 5 வரை எப்படி நேரத்தைக் கடத்த போகிறோம் என்று கவலையாகக் கூட இருந்தது. என்ன செய்வதென அறியாமல் பையில் வைத்திருந்த குமுதம் இதழை மேஜைக்கு அடியில் மறைத்து வைத்து குற்ற உணர்வு குறுகுறுக்க மனம் லயிக்காமல் படிக்க ஆரம்பித்தேன். அவ்வபோது திருட்டுத்தனமாய் யாரும் என்னை கவனிக்கிறாகளா என்று வேறு பார்த்துக் கொண்டேன். யாரும் என்னை சட்டைசெய்யவில்லை. ஒரு வழியாக நான் அந்த குமுதம் இதழை படித்து முடிக்கவும் சந்துரு சார் வரவும் மணி சரியாக ஒன்று பத்தாகியிருந்தது. அதுவரையில் காலியாக இருந்த அலுவலக அறை உணவு இடைவேளையின் போது மட்டும் நிரம்பியது எனக்கு வினோதமாக இருந்தது. சந்துரு சார் என்னை அவர் இருக்கைக்கு கூப்பிட்டார். சந்துரு சாருடன் ஒருவர் இருந்தார் சின்னவயது SPB போல.
“சார் பேரு. சங்கர் நல்லா பாட்டு படிப்பார். TMS படிக்கறது போலவே இருக்கும். ஒருக்கா TMS தான் படிச்ச பாட்டைத்தான் ரேடியோவுல போடறான்னு நினைச்சாருன்னா பாத்துக்கோயேன். என்னா ஒன்னுஅவர் TMS ன்னா இவரு OMS” நான் விழிப்பதைப் பாத்துவிட்டு அதான்பா old Monk என்றார்.
அந்த மதிய இடைவேளைக்குள் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தினார் சந்துரு சார். அடிக்கடி இரத்ததானம் கொடுக்கும் சிவமணி, கவிதைகள் எழுதும் கோவை கவிக்கோ, துக்ககதைகளாக எழுதி அனைவரையும் கண்ணீர் கடலில் தள்ளும் ஞானசெல்வம், கதையா அல்லது கட்டுரையா என்பது யாருக்கும் புரியாமல், ஏன் அவருக்கே புரியாமல் எழுதும் அருமைராஜ், தான் எழுதுவது தான் கதை மற்றவகளுக்குகெல்லாம் உதை என்று நினைக்கும் சுந்தர், தான் எழுதியதை அனைவரும் படித்தே ஆகவேண்டும் என்று கடுப்படிக்கும் உமா, இந்தக் காலத்தில் கூட பாட்டிக்கதை எழுதும் முனிரா என்கிற முனிர்… நான் அசந்தே போனேன். இத்தனை அசமஞ்சமான அலுவலகத்தில் இவ்வளவு திறமையா! அன்று முழவதும் எனக்கு பிரமிப்பாகவே இருந்தது. ‘இத்தனை திறமை வீணாகப் போய்க்கொண்டிருக்கிறதா’ என்று மீண்டும் மீண்டும் எனக்குள் மறுகிப்போணேன்.
மறுநாள் முதல்வேலையாக அலுவலகம் வந்ததும் வராததுமாக சந்துரு சாரிடம் போணேன்.
“சார், எனக்கு ஒரு சின்ன யோசனை” என்று இழுத்தேன்.
“என்ன?” என்றார் வெற்றிலையை மடித்து வாயில் திணித்தபடி. “ஷீக்ரம் ஷொள்ளு நா வெழிய போவணும்” என்றார் வெற்றிலை எச்சிலை வழியவிட்டபடி.
“சார் நேற்று எனக்கு அறிமுகப்படுத்திய அத்தனை பேரும் ஏதாவது ஒருவிதத்தில் திறமைசாலிகளாக இருக்கிறாகள். ஆனால் அவகள் திறமையெல்லாம் வீணாகப் போகிறது” என்றேன் ஏக்கத்துடன்.
சந்துரு சார் பார்த்த பார்வையில் இவன் என்ன சொல்ல வருகிறான் என்ற ஆர்வம் தெரிந்தது. நான் மேலும் தொடர்ந்தேன். “ஆகையால் ஒரு கையெழுத்துப் பிரத்ி ஆரம்பித்து எல்லோருடைய படைப்பையும் அடக்கி நம் அலுவலகத்தில் சுற்று விடலாம்” என்று முடித்தேன்.
சந்துரு சாருக்கு கொஞ்சம் ஸ்வாரஸ்யம் ஏற்பட்டது அவர் முகத்தில் தெரிந்தது. அவசரமாகச் சென்று வெளியே எச்சிலை துப்பிவிட்டு வந்து, “என்ன சொன்ன சொல்லு சொல்லு” என்றார். அவருடைய உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. “சார், நீங்க தான் இந்த பத்திரிகைக்கு ஆசிரியர்.” என்றதும் ஏக குஷி ஆகிவிட்டார். “எல்லோரையும் வரச்சொல்றேன் மதியம் நாம் இதுபற்றி விளக்கமாகப் பேசலாம்” என்று போய்விட்டார்.
எனக்கு மனதுக்குள் மிகவும் உற்சாகமாக இருந்தது. பத்திரிக்கையை எப்படியெப்படி வடிவமைக்கலாம் என்னென்ன விதமாக வெளியிடலாம் என்று மனதுக்குள் உருவகப்படுத்திக் கொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாட்டு தட்டு, டிபன்பாக்ஸ் சத்தம் கேட்டதும் தான் மதிய உணவு இடைவேளையானதை உணந்தேன். நான் சாப்பிட்டுவிட்டு என் இருக்கைக்குத் திரும்பும்போது என்னுடைய இருக்கையைச் சுற்றி அநேகர் அமர்ந்திருந்தது எனக்கு ஆச்சாியமாக இருந்தது. திடீரென எனக்கு ஒரு ‘கதாநாயக அந்தஸ்து’ ஏற்பட்டதாக உணந்தேன். சத்தியமாக இந்த உற்சாகத்தை இத்தனை போிடம் நான் எதிர்பார்க்கவில்லை. “முதலில் நாம் நம்முடைய பத்திரிகைக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பெயாிலேயே தீ பறக்க வேண்டும்” என்றேன்.
சற்றும் தாமதிக்காமல் பெட்ரோல் என்றார் அருமைராஜ். அவரைத்தொடந்து ATFவில் ஆரம்பித்து napthaவரை எல்லோரும் சொல்ல முற்பட நான் அவசரமாய் தலையிட்டேன். “நான் சொன்னது ஜ்வாலை… பெயர் சொல்லும்போதே மண்டையில் பொடேர் என்று தாக்குவது போல இருக்கவேண்டும்” எப்படி சொல்வது என்று எனக்கே புரியவில்லை.
மீண்டும் அருமைராஜ் ‘விறகு’ என்றார். எனக்கு அந்த தலைப்பு சாியானதாகவும் அதே நேரத்தில் குழப்பமாகவும் இருந்தது. அதற்குள் உமா, “ஹா.. ஹா. தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு ஒவ்வொரு இதழுக்கும் நாம கட்டு 1 சுள்ளி 1..2..3.. ன்னு போட்டுக்கலாம்” என்றவுடன் அனைவரும் ஒருமித்து ஆமோதிக்கவே என்னால் எதுவும் சொல்ல இயலாமல் போய்விட்டது. ஆக பத்திரிகை தலைப்பு ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவுடன் மற்றபடி உள்ளே என்னென்ன எழுதுவது என்று தீமானிக்கக் கோரினேன்.
“ஒரு நாளைஞ்சி கதையை போட்டுக்கலாம். கோவை கவிக்கோ கிட்ட சொன்னா சும்மா கவிதையை வரைஞ்சி தள்ளிடமாட்டாரு? அதை போட்டுக்கலாம். நாமகிரி என். சுரேஷ்னு ஒருத்தர் பக்கத்து செக்க்ஷன்ல இருக்கார். அந்தகாலத்துல விகடன் குமுத்துல வந்த ஜோக்கெல்லாம் நிறைய சேர்த்து வைச்சிருக்கார். அத அங்கங்க அவரோட சொந்த ஜோக்குன்னு போட்டுக்கலாம்” என்றார் ஞானசெல்வம்.
“ஒரு முப்பது பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றேன் நான். “இதெல்லாம் செஞ்சியும் பக்கத்துல இடம் இருந்தா என்ன பண்றது?”
“அதனால என்ன இப்ப. சின்ன சின்ன சந்துல படித்ததில் பிடித்தது அப்படி ஏதுனா போட்டுக்கலாம்” – இது உமா.
“படிச்சதுல புடிச்சது புடிச்சதுல இடிச்சது ன்னு என்னென்னவோ சொல்றீங்களே அப்படினா என்னபா?” என்றார் சந்துருசார். “அப்படினா நீங்க நிறைய படிக்கிறீங்க…” என்று சொல்ல முற்பட்டவனை இடைமறித்து, “இல்லையே நான் ஏதும் படிக்கறதில்லையே” என்றார் சந்துரு சார். “இல்ல சார் ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம். அப்படி நீங்க படிச்சதுல ஏதுனா புடிச்ச விஷயம் இருந்தா அதை போட்டு இடத்தை ரொப்பிடுவோம். உங்களுக்குப் புடிச்சதுனா எல்லோருக்கும் புடிக்கணும் புடிச்சி ஆவணும்” என்றேன்.
சந்துரு சாருக்கு உற்சாகம் பிறந்தது. “நான் சின்ன வயசுல கல்கியோட சிவகாமியின் சபதம் படிச்சேன் அதை போட்டுக்கலாமா” என எனக்கு தூக்கிவாரி போட்டது.
“சார் நீங்க என்னதான் எடிட்டராக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகத் தொியல? சிவகாமின் சபதம் நாலு வால்யூம் சார்” என்றேன் பதறிப் போய்.
“ஏதோ அரை பக்கம்னா பரவாயில்லை. ஒரு பக்கமே கொஞ்சம் அதிகம்”
“நான் படிச்சதுல புடிச்சது அதுதான்பா” என்றார் சந்துருசார் நிராகரிக்கப்பட்டதில் சோகமாக.
“இதெல்லாம் சார். இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஓடும்? அடுத்த இதழுக்கு கதை கவிதை கட்டுரைக்கு என்ன பண்றது?” என்றார் அருமைராஜ் உண்மையான காசனத்துடன்.
“இதென்ன பொிய விஷயம். ஒரு கதை போட்டி வெச்சிடலாம். நிறைய பேர் கதை எழுதுவாங்க. நாளைஞ்சி இதழுக்கு போட்டு ஒப்பேத்திடலாம்” என்றேன் நான். இது எல்லோருக்கும் நல்ல யோசனையாக பட்டது போலும். “என்ன தலைப்பு கொடுக்கலாம்?” என்றேன் மேலும்.
“கணிதம்-னு வெச்சுக்கலாம்” என்றார் சிவமணி.
எனக்கு ஏதும் புரியாமல் “அப்படினா?” என்றேன்
“டெய்லி பக்கத்து ஸெக்ஷன்ல ஒரு பொண்ணை கணக்குப் பண்றாரே அதை சொல்றார்” என்றார் சந்துரு சார்.
“அட நீங்க சும்மா இருங்க சார். தினம் தினம் ஆபீஸர் வீட்டுக்கு கறிகாய் வாங்கிட்டுப் போய் கணக்கு பண்ணுவாரே அதைச் சொல்றா போல” என்றார் இன்னொருவர். சிவமணி ஒரு எரிச்சலான பார்வை பார்த்துவிட்டு மௌனமானார்.
“கணிதம்-னு ஒரு தலைப்பா?” என்று நான் மீண்டும் இழுத்தேன். “இருந்தாலும் தலைப்பு நல்லா இருக்கிறாமாதித்தான் இருக்கு…” என்று முடிக்கும் முன்னர், உமா “நான் ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்” என்றார். “கதை பேரு ஆறாம் பிரிவு”
“என்னது ஆறாம் பிரிவா? கதையைச் சொல்லுங்களேன்” என்றேன் ஆவலுடன்.
“ஒரு விதவை அம்மா. அவங்களுக்கு ஆறாம் வகுப்பு வரை படித்து பள்ளியை தொலைத்த மகன். அம்மாவிடம் ஒருநாள் மசால்தோசை சாப்பிட வேண்டும் என்று சொல்கிறான். விதவை தாய்க்கு மனது கஷ்டமாக இருக்கிறது. மகனுக்கு சொல்கிறார் நாளைக்கு தான் வீட்டுவேலை பார்க்கும் எஜமானியின் கணவர் ஒரு ஓட்டல் திறக்கிறார். அங்கு எல்லாம் கிடைக்கும். என்கிறார்.
“அம்மா இட்லி கிடைக்குமா?”
“கிடைக்கும் ராஜா”
“தோசை?”
“ம்..ம்..”
“பூரி?”
“உண்டு..உண்டு..”
“வடை…பொங்கல் எல்லாம் கிடைக்கும் நான் கேட்டு வாங்கித் தரேன் என்று சொல்கிறார் அந்த விதவைத் தாய். அப்போது வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது. யாரென்று பார்த்தால் ஓட்டல் திறக்கப்போகும் எஜமானியின் கணவர். அந்த விதவைத்தாய் பதைபதைத்துப்போய் ‘வாங்க எஜமான் வாங்க. எங்கே இவ்வளவு தூரம். நீங்கள் அழைத்திருந்தால் நானே ஓடோடி வந்திருப்பேனே’ என்கிறார். ‘நாளைக்கு திறப்புவிழா நடக்கிற நம்ப ஓட்டலை கழுவித் தள்ளணும் அதுக்காக உங்களை கூப்பிட வந்தேன். வந்தபோது உங்க பையன் ஓட்டல் பலகார பேரையெல்லாம் வாிசையா சொல்றதை கேட்டேன். அதனால அவனை நம்ப ஓட்டலிலேயே சர்வரா சேத்துகலாம்னு முடிவு செஞ்சிட்டேன்’ அப்படின்றார்” என்று சொல்லிவிட்டு, “கதை எப்படி இருக்கு?” என்றார் உமா.
“அது சாி. இதுல கணிதம் எங்க வந்தது? அதென்ன ஆறாம் பிரிவு?” என்று கேள்விகளை அடுக்கினேன்.
“அந்த பையன் ஆறாம் வகுப்புவரை படித்தவன்னு தான் முதல்லேயே சொன்னேனே அவன் படித்த ஆறாம் வகுப்பில் கணிதம் ஒரு பாடம்” என்றார் உமா கேள்வி கேட்ட என்னை எரிச்சலுடன் பார்த்தபடி.
“கதை நல்லாஇருக்கு உமா. உங்களுக்குத் தான் முதல் பாிசு” என்றார் சந்துரு சார்.
“என்ன சந்துரு சார் போட்டின்னா நிறைய கதையை படிச்சி தேர்ந்தெடுத்து தானே ஒரு கதைக்கு பாிசு குடுக்கணும். ஒரே கதையை கேட்டுட்டு எப்படி பாிசு கொடுக்கலாம்?” என்றேன் நான்
அப்படி கேட்டவுடன் சந்துரு சாருக்கு கோபம் வந்துவிட்டது.
“கதை கட்டுரை பத்தின ஞானம் எல்லாம் எனக்கு இருக்கு. எனக்கு நீ சொல்லித் தராதே. நான் சுஜாதா கதையெல்லாம் படிச்சவுடன் சொல்லிடுவேனாக்கும்” என்றார். ‘எக்கேடு கெட்டுப் போங்கள்’ என்று விட்டுவிட்டேன்.
உமாவுக்கு முதல் பரிசு என்றதும் முனிர், “நான்கூட நல்லா கதை எழுதுவேன். என்னோட கதையை கேட்கறீங்களா?”
“சாி”. என்றார் சந்துரு சாருக்கு அனைவரும் அவாடம் கதை சொல்லவே ஏக குஷியாகிவிட்டது.
“சொல்லுங்க..சொல்லுங்க. உங்களுக்குத்தான் இரண்டாம் பாிசு” என்றார் கதையை கேட்காமலேயே. எனக்கு மேலும் துணுக்குற்றது. பேசாமல் வேடிக்கை பார்க்கலானேன். முனீரா கதை சொல்ல ஆரம்பித்தார். “ஒரு கூலி வேல செய்யற அம்மா சார். அன்னிக்கு கூலி அம்பது ரூபா கிடைக்கிது. அப்போ வரும்போது சிக்கன் சாப்ஸ் தயார்னு ஒரு போர்ட் பாக்கராங்க. ஒரு சாப்ஸ் வாங்கினா ஒரு சாப்ஸ் இனாம்னு எழுதியிருக்கு. அம்பது ரூபா கொடுத்து ஒரு சிக்கன் சாப்ஸ் சாப்டுட்டு இன்னொன்னு பார்ஸல் கட்டிகினு வீட்டுக்கு வந்து பாத்தா வூட்ல பொண்ணு சிக்கன் பாக்ஸ் வந்து படுத்துக்குனு இருக்கா. அடக்கமுடியாத அழுகையோடு இந்த சிக்கன் சாப்ஸையும் அந்த அம்மாவே சாப்டுராங்க” என்று சொல்லிவிட்டு “எப்படிசார் என் கதை” என்றார் சந்துரு சாரைப் பார்த்து.
சந்துரு சார் “கதை நல்லா இருக்குமா. ஆனா சிக்கன் சாப்ஸ் க்கு பதில் மட்டன் கபாப்னு போட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்றார் நாக்கு சப்பு கொட்டியபடி.
“நான் ஏன் சிக்கன் சாப்ஸ்னு போட்டேனா சிக்கன் சாப்ஸ் கேட்ட பொண்ணுக்கு சிக்கன் பாக்ஸ் வந்த கொடுமையை இந்த உலகத்துக்குச் சொல்லனும்னு தான்” என்றார் முனீரா விஸ்தாரமாக. “நான் சிக்கன் சாப்ஸ்ஸின் அருமையும் சிக்கன் பாக்ஸ்ஸின் கொடுமையும்னு இலக்கிய மன்றத்துல கூட பேசி இரண்டாம் பாிசு வாங்கியிருக்கேன் சார்” என்றார்.
“ஏம்மா இரண்டாம் பாிசு?”
“அதுல கலந்துக்கிட்டவங்களே இரண்டு பேர் தான் சார்”
நான் யாருக்கும் தொியாமல் தலையில் அடித்துக் கொண்டேன். “சாி.. சாி.. யாரெல்லாம் கதை எழுதரீங்களோ சீக்கிரம் எழுதி கொடுங்க. நானும் முதல் பக்கம் ‘துவாரம்’னு எழுதனும்” என்றேன்.
“என்னது ‘துவாரம்’னு நீங்க எழுதாங்களா? அதென்னது தலையங்கமா?” என்றார் சந்துருசார்.
“தலையங்கம்னு சொல்லலாம். அப்பப்ப நடக்கற நடப்பை பத்தி சுனாமி கும்பகோணம் மஹாமகம் அப்படீனு எதாச்சும்” என்றேன்.
“தலையங்கம் எல்லாம் நான்தானே எழுதனும்? நான் தானே எடிட்ட? இதெல்லாம் சாிவராது. நீங்களே பத்திகை நடத்துங்கோ” என்று சொல்லியபடி வெற்றிலைபாக்கு பெட்டியுடன் கிளம்பிவிட்டார் சந்துரு சார்.
நான் சற்றும் மனம் தளரவில்லை. என்னை சுற்றி இருப்பவகளுக்கும் சந்துரு சார் போனது பொிய இழப்பாகத் தொியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் கதை வெளியாகும் ஆர்வம். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக கதை கட்டுரை கவிதை என்று எழுதி குவித்து விட்டார்கள். அவற்றை தொகுத்து முதல் இதழை படப்பிரதி செய்த போது மிகவும் மலைப்பாக இருந்தது. எல்லோரும் “விறகு எப்போது சார் ரீலீஸ்” என்று கேட்டது மிகவும் உன்னதமாக இருந்தது. அட்டைப் படத்தை வடிவமைத்தேன். “கட்டு 1 சுள்ளி 1” என்று எழுதியபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. படப்பிரதி செய்து வந்ததும் முதல் பிரதியை சந்துரு சாருக்குத்தான் கொடுத்தேன். வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டவர் முதல் பக்கத்தில் ஆலோசகர்: சந்துரு சார் என்று எழுதியிருந்ததை பார்த்து மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். பத்திரிகையை புரட்டிப் பாத்தவர் “நல்லா வந்திருக்குப்பா” என்று மனம் திறந்து பாராட்டியது மனதுக்கு நிறைவாக இருந்தது.

chandarsekar எழுதியவை | திசெம்பர் 8, 2008

அப்பா

ஊனும் உதிரமுமாய் உயிரும் உணர்வுமாய் கலந்திட்ட என் தந்தைக்கு.

தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது. வீட்டு வாசலில் செருப்பை கழட்டிவிட்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். ஹாலில் படித்துக் கொண்டிருந்த தங்கை உள் அறையை காட்டி, “அப்பா” என்றாள் சன்னமாக.
உள்அறையில் அப்பா சாய்வு நாற்காலியில் அமந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். சமையலறையில் அம்மா. “கைகாலை அலம்பிண்டு வாடா சாப்பிடுவே” என்றாள்.
“அப்பா”
“எல்லோரும் சாப்பிட்டாச்சு. நீயும் சாப்பிட்டு முடிச்சியானா சமையல்கட்டை ஏறக்கட்டணும்” என்றாள்.
சாப்பிடும்போது கேட்டான். “அப்பாகிட்ட சொல்லிட்டியாம்மா?”
“அவர் வந்தபோதே சொல்லிட்டேன். சரியின்னார். நீயும் அவர்கிட்ட சொல்லிடு” என்றாள் அம்மா. தலையாட்டினான். மௌனமாக சாப்பிட்டுவிட்டு தட்டை அலம்பி வைத்துவிட்டு அப்பா இருந்த அறைக்குள் வந்தான். அப்பா இன்னமும் படித்துக் கொண்டிருந்தார்.
“அப்பா” என்று மெதுவாகக்கூப்பிட்டான். அவர் படிப்பதை நிறுத்திவிட்டு ஏறிட்டுப் பாத்தார்.
“நாளைக்கு ஒரு இன்டர்வியூ போகனும்பா” என்றான் மெதுவாக.
அப்பா ‘சரி’ என்பது போல ஆமோதித்துவிட்டு புத்தகம் படிப்பதைத் தொடந்தார். மெல்ல அங்கிருந்து நகர்ந்தான். ஹாலில் தங்கை படித்துக்கொண்டிருந்தாள். நாளைக்கு ஏதோ பரீட்சை போல. சமையலறையில் அம்மா அலம்பிவிட்டுக் கொண்டிருந்தாள். மறுநாள் வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வந்தது.
மெதுவாக பின்கட்டுக்கு வந்து துவைக்கிற கல் மேல் உட்கார்ந்துக்கொண்டான். யோசித்துப் பார்த்ததில் நாளைக்குப் போவது ஒன்பதாவது இன்டர்வியு. முதல் இன்டர்வியூவில் இருந்த பரபரப்போ அல்லது நம்பிக்கையோ துளியும் இப்போது இல்லாமல் இருந்தது. அம்மாதான் பாவம். ஒவ்வொரு முறையும் எத்தனை நம்பிக்கையோடு இன்டர்வியூக்கு அனுப்புவாள். அதே போல தேறாமல் போனாலும் அதே வாத்சல்யத்தோடு ஆறுதல் சொல்வாள்.
“இது போனா போறதுடா. உனக்கு பகவான் நல்ல வேலையா நினைச்சுண்டிருக்கார். அதுதான் இதெல்லாம் தள்ளி போறது” என்பாள். நன்றாகவே தெரியும். சில சமயம் இதுபோல எத்தனைமுறை இன்னமும் சொல்லப் போகிறாள் என்றுகூட நினைத்துக் கொள்வான்.
அப்பா. அவர் எப்போது வேலைக்குப் போவார்? எப்போது வருவார்? என்று தெரியாது. அவர் இரயில்வேயில் கார்டு. ஆனால் ஒன்று கவனித்திருக்கிறான். தேவையானபோது அவர் எப்போதும் வீட்டில் இருந்திருக்கிறார். வேலைக்குப் போய் வந்தாரென்றால் இந்த சாய்வு நாற்காலியும் புத்தகங்களும் தான்.

ஒவ்வொருமுறை இன்டர்வியு போகுமுன்னரும் அப்பாவிடம் இதுபோலத் தான். அவருக்கு எல்லாம் முன்னமே தெரிந்திருக்கும். அம்மா சொல்லியிருப்பாள். இவன் சொல்லும்போதும் பேசாமல் கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான். மறுநாள் அம்மா இவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அப்பா கொடுக்கச் சொன்னாருடா என்பாள். இன்டர்வியூ போவதற்கு சட்டைபேண்ட் எல்லாம் அயர்ன் செய்து வைத்திருப்பாள். ‘இந்த தடவை உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கப்போறது பாரேன்’ என்பாள். இந்த தடவை… இந்த தடவை… என்று எத்தனை தடவை?

யோசித்துப் பார்க்கையில் அப்பா இவனிடம் பேசியதுண்டா என்று ஆச்சரியமாக இருந்தது. +2வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறியபோதுகூட அவர் ஏதும் பேசாமல் இவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவ்வளவுதான். பள்ளியில் ப்ரேயர் ஹாலில் வைத்து சகமாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் பாராட்டியபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி அப்பா தட்டிக் கொடுத்தபோது ஏற்பட்டது. அப்பா இவனிடம் பேசியதில்லையே தவிர அவரது எண்ணங்கள் எல்லாவற்றையும் அறிந்தே இருந்தான். அம்மாவிடம் கூட அப்பா பற்றி விவாதித்திருக்கிறான். “ஏம்மா அப்பா என்னிடம் ஏதும் பேசமாட்டேங்கிறார்?” அம்மா சிரித்தாள். அப்பாவைப்பற்றி அறிந்துக் கொள்ள இவனுக்கு வயது போதாதென்றாள். “உங்கப்பா ஒரு ஞானிடா” என்றாள்.
“இல்லேமா அவர் என்னோட பேசினால் எத்தனையோ விஷயங்களை நான் தெரிந்துக்கலாம் இல்லையா?” என்று வாதிட்டிருக்கிறான்.
“ஏன்டா வாய்வாத்தையாய் பேசினால் தானா? அவரைப்பற்றி உனக்கு எதுடா தெரியாது?”என்று சிரித்திருக்கிறாள்.
உண்மைதான். அப்பாவிடம் வார்த்தையாய் பேசவில்லையே தவிர அப்பாவைப் பற்றி எல்லாமே தெரிந்திருந்தது. அவர் பழக்க வழக்கங்கள்… அவர் படிக்கும் புத்தகங்கள்… அவரது எண்ணங்கள். அம்மாகூட ஞானி என்று தோன்றியது. அப்பாவுக்கு வெளியில் நல்ல மரியாதை. சிடுமூஞ்சியாக எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் ஸ்டேஷன் மாஸ்டர் கந்தசாமிகூட ஒருமுறை “நீங்க கேவி சாரோட ஸன்னுங்களா?” என்று மாயாதையோடு கேட்டது ஞாபகம் வந்தது. அம்மா எப்போதும் சொல்வாள். ‘அப்பாவோட பழக்க வழக்கங்கள் பிள்ளைகள் மீது பாயும்’ என்பாள். உண்மைதான். சிலசமயம் தனக்கு அப்பா போல குணநலன்கள் வந்து விட்டதாகத் தோன்றும். யாராவது பித்துக்குளிபோல பேசினால் சிரிப்பு வரும். யோசித்துப் பார்த்தால் அப்பா மேல் இருப்பது பயமில்லை மரியாதை. அதையும் தாண்டி பக்தி என்பதாகப் பட்டது.
வெளியே மிகவும் சில்லென்றிருந்தது. இரவு மழை பெய்யும் போல.
“சீக்கிரம் வந்து படேன்டா. நாளைக்கு இன்டவியு போகனும்னு சொன்னீயே” என்று அம்மா குரல் கொடுத்தாள். பின்கதவை அடைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.

ஒருமுறை இப்படி வேலைக்கிடைக்காத விரக்தியில் ஓட்டல் ஒன்றில் க்ளீனர் வேலைக் காவது போக முடிவெடுத்து அப்பாவிடம் சொன்னான். “அப்பா நம்ப ராமசுப்பைய்யர் மெஸ்ஸில் வேலைக்குச்சொல்லியிருந்தேன். நாளைக்கு வரச்சொன்னார்” அப்பா சரேலென்று ஒரு அடிபட்ட பார்வைப் பாத்தார். வேறு எதுவும் பேசவில்லை. சற்றுநேரம் அங்கேயே மௌனமாக நின்றுவிட்டு நகந்தான். எதுவும் தோன்றாமல் வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்ததும் அம்மா பிடித்துக் கொண்டாள். “ஏண்டா அப்பாவிடம் ஏதோ ஓட்டல் வேலைக்கு போறேன்னியாமே?” என்றாள்.
“ஆமாம்மா” என்றான் சன்ன குரலில்.
“அப்பா எவ்வளவு மனசொடிந்து போய்விட்டா தொயுமா? உன்னை எதுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்” என்றாள் அம்மா.
“ஏம்மா அதை அவரே என்னிடம் சொல்லிருக்கலாமே அம்மா” என்றான் உடைந்த குரலில்.
“நானே அப்பாகிட்ட சொன்னேன்டா. நீங்களே அவன்கிட்ட ஓரு வார்த்தை ஆறுதலா சொல்லக்கூடாதான்னு கேட்டேன்டா. அப்பா சொன்னார் ‘நான் பேசினால் குழந்தை இன்னும் மனசொடிந்து போயிடுவான்’னு சொன்னாருடா” என்றாள் அம்மா.
உண்மைதான். அப்பா நோடையாக ஆறுதல் சொல்லியிருந்தால் அவனால் தாங்கியிருக்க முடிந்திருக்காது என்று பட்டது. ஆனால் அப்பா மனதை காயப்படுத்தியிருப்பது புரிந்தது. மனசுக்குள் ‘ஸாரிப்பா’ என்று சொல்லிக்கொண்டான்.
நாளைக்கு போவது ஒன்பதாவது இன்டர்வியூ. ஒன்பதாம் நம்பர் எல்லோருக்கும் ராசியாமே? சீக்கிரம் வேலை கிடைக்கவேண்டும். தங்கைக்கு தானே கல்யாணம் பண்ணவேண்டும். அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும்.. கனவுகள்.. கனவுகள். அப்படியே தூங்கிப்போனான்.
காலையில் எழுந்தபோது அம்மா குளித்துவிட்டு சமையலறையில் வேலையாக இருந்தாள். தங்கை படித்துக்கொண்டிருந்தாள். மெதுவாக அப்பாவைத் தேடினான். இல்லை. வேலைக்குப் போய்விட்டார் போல. இத்தனை காலம் தாழ்த்தி எழுந்ததில் சற்று வெட்கமாகக்கூட இருந்தது. முகம் கழுவிக்கொண்டு அம்மாவிடம் போய் அம்மா கொடுத்த காபியை குடித்துக்கொண்டே மெதுவாகக் கேட்டான் , “அப்பா எங்கேம்மா?”
“அவ காலம்பர அஞ்சு மணிக்கே கிளம்பி போயிட்டாருடா” என்றாள் அம்மா. “சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகனுமில்ல. இன்னிக்கு இன்டவியு இருக்குன்னியே?” என்று ஞாபகப் படுத்தினாள்.

குளித்துமுடித்து புஜை செய்து ரெடியானபோது தங்கை வழக்கம் போல கோவிலுக்குப் போய் வந்திருந்தாள். “அண்ணா இன்றைக்கு கண்டிப்பாக வேலைக் கிடைக்கும் பாரேன்” என்றாள் விபூதி பிரசாதத்தை நீட்டியபடி. விபூதி இட்டுக்கொண்டு பேசாமல் புன்னகைத்தான்.
அம்மா உள்ளிருந்து வந்து, “அப்பா குடுக்கச் சொன்னாருடா” என்று வழக்கம் போல பணத்தைக் கொடுத்தாள். “இந்த வேலை கண்டிப்பாகக் கிடைக்கப்போறது பாரேன்” என்றாள். இப்போது இந்த வாசகங்கள் எல்லாமும் பழகிவிட்டது. இவர்களுக்காவது வேலை கிடைக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
நேற்றிரவு மழை பெய்த மழையில் தெருவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. சீராக நடப்பதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. உடைகள் அழுக்காகாமல் இன்டர்வியூ போகமுடியுமா என்று நினைத்துக்கொண்டான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சென்னைக் கிளையில் வேலைக்கான இன்டர்வியூ. வேலை கிடைத்தால் நிஜமாகவே அதிர்ஷ்டம் தான். வேலைக் கிடைத்தால்?
நிறுவனத்தை அடைந்தபோது ஏற்கனவே நிறையபேர் அங்கு காத்திருந்தார்கள். அங்கிருந்த இருக்கையில் அமந்துக் கொண்டான். பக்கதிலிருந்தவன் “ஹலோ” என்று கைநீட்டினான். “இது எனக்கு 13வது. உங்களுக்கு?” என்றான். மெதுவாக “ஒன்பதாவது” என்று சொல்லிவிட்டு மௌனமானான் மேற்கொண்டு பேசவிரும்பாதவனாக. அவன் விடவில்லை. “மொத்தம் 3 வேகன்ஸின்னு சொன்னாங்க. இப்ப என்னடானா 2 போஸ்ட் ஏற்கனவே முடிஞ்சிபோச்சாம். ஓரு போஸ்ட்க்கு எத்தனை பேர் பாருங்க” என்றான். “இந்த போஸ்ட்டும் ஏற்கனவே ரிசர்வ் ஆகியிருக்கும். நமக்கு வெட்டி வேலை” என்று அலுத்துக் கொண்டான். இவனுக்கு பகீரென்றது. அம்மா, அப்பா, தங்கை எல்லோரும் கண்ணெதிரே வந்து போனார்கள். மிகவும் சோர்ந்துப்போய் பேச்சற்று இருந்தபோது இவனைக் கூப்பிட்டார்கள்.
இன்டாவியூ முடிந்து வெளியே வந்தபோது எல்லோரும் இவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரிடமும் பேசத்தோன்றாமல் மெதுவாக வெளியே நடந்தான். கேள்விகள்கேள்விகள் கேள்வியின் முடிவில் மீண்டும் கேள்விகள் இதற்கெல்லாம் முடிவே இல்லையா என்று தோன்றியது. இந்த வேலை கிடைக்கும் என்ற எதிபாப்பு பொய்த்துவிட்டதாக உணர்ந்தான்.

தெருவில் நடந்தபோது மிகவும் ஈரமாக இருந்தது. மெதுவாக நடந்தவன் ஊர்க்கோடியில் இருந்த கோவிலில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். கோவில் நடை அடைத்து இருந்தது. யாரும் இல்லை. ஒவ்வொரு இன்டர்வியூ சென்றதும் ஏனோ ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது. ஒவ்வொரு இன்டர்வியூவுக்கும் ஏக நம்பிக்கையாக அனுப்பும் அம்மா, வாழ்த்துச் சொல்லும் தங்கை, எதிர்பார்ப்புடன் அப்பா. ‘இதெற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?’ ஏனோ நெஞ்சில் துக்கம் அடைத்தது. எத்தனை நம்பிக்கைகள்? எத்தனை எதிர்பார்ப்புகள்? மீண்டும் .. மீண்டும் … எத்தனை முறை எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு… தன்னையும் ஏமாற்றிக் கொண்டு…
திடீரென முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். தன்னுடைய சான்றிதழ் ஃபைலை கீழே வைத்து அதன்மேல் ஓரு கல்லை வைத்தான். மெதுவாக குளக்கரைக்குச் சென்று ஒவ்வொரு படியாக இறங்கி காணாமல் போனான்.

மூன்று நாட்களாகியும் வீடு சோகத்தில் இருந்தது. வேலைக்குப் போகாத அப்பா. வீட்டு வேலை செய்யத்தோன்றாத அம்மா. பள்ளிக்குச் செல்லாத தங்கை. அழுது அழுது அனைவரின் கண்களும் வீங்கியிருந்தன. யாரும் யாரோடும் பேசத் தோன்றாமல் ஒவ்வொரு இடத்தில் உட்காந்திருந்தாகள்.

வெளியே “சார், போஸ்ட்” என்று போஸ்ட்மேன் குரல் கொடுத்தார். அப்பா மெதுவாகப் போய் கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தார். ஏதும் தோன்றாதவராக சற்றுநேரம் சும்மா இருந்தவர் கவரை மெதுவாகப் பிரித்து படிக்கத்தொடங்கினார். திடீரென்று “ஹோ” என்று பெருங்குரலில் ஆரம்பித்தவர், “ஏமாந்துட்டேயேடா கடைசியில்” என்றார் சத்தமாக. பிறகு முகத்தை மூடிக்கொண்டு உடம்புகுலுங்க அழ ஆரம்பித்தார் அப்பா.

chandarsekar எழுதியவை | திசெம்பர் 5, 2008

நீயும்…நானும்…

கலைந்த கனவிலும்
கவிதையாய் எந்தன்
கண்ணில் என்றும்
கலையாத
நீ…

தொலைந்த என்னை
தேடி எடுக்கையில்
மீண்டும் என்னில்
சேராத
நான்…

chandarsekar எழுதியவை | திசெம்பர் 4, 2008

கடிதம்

கவிதைகள் ஏதும்
கைவசம் இல்லை.
கிணற்றில் போட்ட கல்லாய்
மனதை அழுத்தும்
கவலையைக் கிள்ளி
அனுப்பட்டுமா?

chandarsekar எழுதியவை | திசெம்பர் 3, 2008

மாற்றம்

“நான் நானாக இல்லை – நிஜம்தான்
நீ நீயாகத்தான் இருக்கின்றாயா?
மாறிவரும் இவ்வுலகில்
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்…”

மாற்றம்

சந்துரு உட்காந்திருந்தது தூரத்தில் வரும்போதே தொpந்தது. நான் புடவை தடுக்க நடையை எட்டிப்போட்டேன். எவ்வளவு நேரமாக உட்காந்திருந்தானோ?
“ஸாரி சந்துரு கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
“கொஞ்சம் இல்லை. நிறையவே லேட். இருந்தாலும் பரவாயில்லை.”

என் சந்துருவிடம் பிடித்தது இது தான். எப்பவும் கோபமே வராது அவனுக்கு. என்னிடம் மட்டுமல்ல. யாடமும் அவன் கோபத்தோடு பேசி பாத்ததில்லை.
“ஏன் சந்துரு உனக்கு கோபமே வராதா?”
”ஏன் கோபப்படணும்? அட்த மோஸ்ட் வருத்தப் படலாம். கோபப்படும்போது அடுத்தவரை பாதிக்கிறோம். வருத்தம் நம்மை மட்டுமே பாதிக்கும. என்னைப் பொருத்தவரையில் அடுத்தவரை பாதிக்கிற உமை யாருக்கும் இல்லை. அவ்வளவுதான். ஆனால் எனக்கும் கோபம் வரும். அதை கத்தி தான் தெரியப்படுத்தனும்றது இல்லை.”

சந்துரு நன்றாகப் படித்தவன். அவன் பேசும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிவதில்லை. அவன் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் சினிமாக்கள் எதுவும் எனக்கு புரிவதில்லை. இருந்தாலும் எனக்கு அவன் பேசுவது ரொம்பவும் பிடிக்கும். அவனுடைய கவிதைகள் பிடிக்கும். சந்துருவுக்கு எல்லாமே கவிதைதான். இந்த கடலும் சரி கடலை விக்கிற பையனும் சரி. யோசித்துப்பார்த்தால் அவனிடம் எனக்குப் பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது. நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சந்திப்பதாக எங்களுக்குள் ஒப்பந்தம். அதுவும் என்னால் தான். நான் தினமும் சந்துருவை சந்தித்து விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போக முடியாது. என் அப்பா அண்ணனின் சந்தேகத்திற்கு ஆளாக முடியாது. சந்துருவை சந்திக்கும் என்னுடைய இந்த சின்ன சந்தோஷத்தையும் இழக்க நான் தயாராக இல்லை. என் வீட்டு சகதியை சந்துருவின் மேல் புச தைரியம் இல்லை. தெரியும் போது தெரியட்டும்.
நான் சந்துருவிடம் என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். சந்துருவுக்கு எல்லாம் தெரியும். என் சம்பளத்தை நம்பியிருக்கும் என் குடும்பத்தைப் பற்றி்… சொற்ப சம்பளம் வாங்கும் என் அப்பாவைப்பற்றி… சமையலறையே கதி என்றிருக்கும் என் அம்மாவைப் பற்றி… பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் என் அண்ணனைப் பற்றி… 10வது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி…

சந்துரு ரொம்பவும் நல்லவன். அவனுக்கு என்னைப் பற்றிய கவலை நிறைய உண்டு. ஆனால் வெளிக்காட்ட மாட்டான். நாங்கள் சந்திக்கும்போதுகூட நேரமாகிவிட்டால் எனக்கு நினைவுட்டுவான். என் மேல் தன் விரல்நுனிகூட படாமல்தான் பழகுவான். சில சமயம் நானே அவன் என்னை தொடமாட்டானா என்றுகூட வெட்கத்தைவிட்டு ஏங்கியிருக்கிறேன். ஊர்உலகத்தில் இருக்கும் காதலர்கள் போல் ஒரு சினிமா இல்லை! பார்க் இல்லை! இந்த கடற்கரை கூட என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்பதால் தான். நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். சந்துருவுக்கு ஆசைகள் அதிகம் இல்லை. ஒரு வீடு வேலைக்குப் போகாத நான். இரண்டு குழந்தைகள். (ஒரே குழந்தை என்றால் மிகவும் பிடிவாதமாக வளரும். இரண்டு குழந்தைகள் என்றால் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இருக்கும் என்பான்). காலையில் வேலைக்குப் போய் சாயுங்காலம் வரும் சந்துரு. இரவு தூக்கம் வரும்வரையில் மொட்டைமாடியில் பேச்சு. (ஏதாவது பேசணும். உன்னுடைய உணர்வுகள்… என்னோட கவிதைகள்… குழந்தைகள் வளப்பு… இப்படி எதாவது பேசணும். பேச்சு முக்கியமில்லை. நானும் நீயும் அருகருகே இருக்கணும். நம் மனங்கள் மட்டும் பேசணும். அதுதான் முக்கியம்.)

“என்ன வந்ததிலிருந்து ஏதோ யோசனை?”
“ஒன்றுமில்லை. நம்மைப் பற்றி யோசித்தேன்”
“எப்படி இதெல்லாம் முடியப்போகிறதோ என்றா?”
நான் பேசாமல் தலையாட்டினேன்.
“கவலைப்படாதே. நாம் கவலைப்பட்டு ஏதும் ஆகப்போறதில்லை. அதது நடக்கும்போது நடக்கட்டும்.”
நான் ஏன் லேட்டாக வந்தேன் என்பதை அவன் கேட்காமலே கூறினேன்.
“கடங்கார ஆபீஸர். கிளம்பும் போதுதான் போன வருஷ டீடெய்ல் வேண்டும்னார். அவசரஅவசரமாக எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”
“சரி விடு. அவருக்கு என்ன ப்ரஷரோ!”

அப்புறம் சந்துரு அவன் படித்த புத்தகத்தைப் பற்றி… வாசித்த கவிதைகளைப் பற்றி… சந்துருக்கு பேச நிறைய விஷயம் இருந்தது. நான் எப்போதும் போல மக்குப் பண்டாரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சந்துரு பேசும்போது அவனை பார்த்துக் கொண்டிருப்பது என்னை பொருத்தவரையில் மிகவும் சுவாரசியமான விஷயம்.
“உனக்கு நேரமாகல்லே?”

மணியைப் பார்த்தேன். நேரமாகிவிட்டது தான்.
“சரி, சந்துரு நான் கிளம்பறேன். புதன் கிழமை பார்க்கிறேன்.” அவனைவிட்டு பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

திடீரென்று மறுநாள் சந்துருவிடம் இருந்து போன். சந்துரு எப்போதாவது தான் இப்படி போன் பண்ணுவான். கேட்டால் பேசவேண்டும் போல இருந்தது என்பான்.
“என்ன சந்துரு?”
“இன்றைக்கு பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?
“என்ன சந்துரு என்ன விஷயம்?
“நீ வாயேன். சொல்றேன்.”

வழக்கம்போல நான் போகும் முன்னர் சந்துரு காத்திருந்தான்.
“என்ன சந்துரு என்ன விஷயம்?”
“பிரிட்டிஷ் கௌன்ஸிலில் ரோமன் போலன்ஸ்கி படம். பிரத்தியேக காட்சி. ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்தப் படம். ரொம்ப கஷ்டப் பட்டு அலைந்து திரிந்து இரண்டு டிக்கட் வாங்கினேன். எனக்கு உன்னோட அந்தப் படத்தை பாக்கணும்னு ஆசை. உன்னிடம் இந்த கதையை விளக்கணும். விவாதிக்கணும். டைரக்ஷனைப் பற்றி பேசணும். நான் ரொம்ப எதிர்பார்த்தப் படம்பா. ப்ளீஸ்…”

சந்துரு எப்போதும் இப்படி என்னை கெஞ்சியதில்லை. எதற்காகவும். எப்போதும்.
ஆணால் என்னால் சந்துருவுடன் சினிமா போக முடியாது. போய்விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போய் எல்லோருக்கும் பதில் சொல்ல என்னால் முடியாது. பத்தாவது படிக்கும் தம்பி கூட என்னை கேள்வி கேட்பான். எங்கள் வீடு ஒரு ஆண்கள் கூடாரம். பெண்களுக்கு என்று தனித்த உணர்வுகள், உரிமைகள் இல்லை.

“இல்லை சந்துரு. என்னால் வர முடியாது.”
சந்துருவின் முகம் வாடிவிட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆணாலும் என்னால் அவனுடன் போக முடியாது. என் மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. என்ன செய்ய?

“இந்தப் படம் உன்னுடன் பார்க்க வேண்டும் என்பது என் கனவு தெரியுமா? இங்கிலீஷ் படம் சீக்கிரம் முடிந்துவிடும்.”
“எத்தனை மணிக்கு?”
“ஒன்பதரை மணிக்கு…” என்று சொல்லும் போதே சந்துருவுக்கு நான் வரஇயலாது என்பது புரிந்துவிட்டது.
“சரி, நீ வீட்டுக்கு கிளம்பு.”
“இல்ல சந்துரு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்”
“வேணாம்டா. எனக்கு மனசு சரியில்லைடா. நீ கிளம்பு. உன்னை பஸ் ஏற்றிவிட்டு நானும் கிளம்புகிறேன்.”
எனக்கு என் மீதே எரிச்சல் வந்தது. என்ன ஜென்மம் நான். ஒருவரையும் சந்தோஷப் படுத்தாத சந்தோஷப் படாத ஜென்மம். சந்துரு என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். நான் நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தேன். சந்துருவின் வாடின முகம் என்னை மிகவும் ஹிம்ஸை படுத்தியது. அன்று இரவு நான் தூங்கவில்லை. சந்துரு தனியாகவாவது அந்த சினிமா போயிருப்பானா? என்னையே நான் வெறுத்தேன்.
மறுநாள் புதனகிழமை. காலையில் இருந்தே மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. பார்த்தவுடன் சந்துருவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சாயுங்காலம் எப்போது வரும் என்று மனம் ஏங்கியது. சந்துரு அவனுக்குப் பிடித்த அந்தப் படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவன் சிறிதளவாவது சந்தோஷம் பெற்றால் எனக்கும் சந்தோஷம். மாலையானவுடன் அரக்க பரக்க கடற்கரைக்கு ஓடினேன். எனக்கு முன்னால் சந்துரு வழக்கம் போல வந்து காத்திருந்தான்.

“ஸாரி, சந்துரு” என்றேன் குற்ற மனப்பான்மையுடன்.
“எதுக்கு ஸாரி?”
“நேற்று என்னால் வரமுடியாததற்கு. அந்த படம் எப்படி இருந்தது?”
“நான் போகலைடா. தனியா படம் பாக்கத் தோணலை.”
“ரொம்ப நாளா காத்திருந்த படம்னு சொன்னியே சந்துரு” எனக்குள் அழுகை வெடித்தது.
“இல்லடா தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலை” என்றான் என்னை இதமாய் பாத்துக்கொண்டு.
எனக்குள் குற்ற மனப்பான்மை குறுகுறுத்தது.

திடீரென முடிவெடுத்தேன். நான் இனிமேல் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன ஆனாலும் சரி. நான் என் சந்துருவுக்காகவே வாழப் போகிறேன்.
“இனிமேல் இது போல படம் பாக்கணும்னா சொல்லு சந்துரு. நான் வரேன். இரவு காட்சியானாலும் சரி”

***

chandarsekar எழுதியவை | நவம்பர் 24, 2008

வேலை

“சந்துரு, கொஞ்சம் கடைக்குப் போய் வா” அம்மா சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள். நான் – சந்துரு, வேலையில்லா பொறியியல் பட்டதாரி – தினமும் இப்படி நூறுமுறை கடைக்கும், ரேஷனுக்கும், மாவுமில்லுக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறேன். கூடவே, தினப்படி, walk-in interview, spot selection interview போல இன்னபிற நேர்முகத் தேர்வுகளுக்கும் எழுத்து தேர்வுகளுக்குமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

“சந்துரு, இன்னுமா நோக்கு வேலை கிடைக்கலை? உங்கப்பா சொன்னாறே, நீ First Class Graduate-னு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. நீ இன்னும் சிரத்தையா வேலைத் தேடணும். நான் உங்கப்பா எல்லாம் SSLC முடிச்சதும் TVS-ல கதறிட்டு எங்களுக்கு வேலை குடுத்தான் தெரியுமா?” என்றார் அப்பாவுடன் சேர்ந்து வேலைப்பபார்த்து சேர்ந்து ரிடையர் ஆன ஈஸ்வரைய்யர் ஒருநாள்.

“அது தெரியாது மாமா. வேலை குடுத்துட்டு கதறினான். அதுதான் எனக்குத் தெரியும்” என்றேன் எரிச்சலில்.

“இதுதான்… இந்த வாய்க்குத்தான் நோக்கு வேலை கிட்டமாட்டன்றது. ரொம்ப கஷ்டம்” என்று முணுமுணுத்துக்கொண்டே அவர் போய்விட்டார்.

ஈஸ்வரைய்யராவது பரவாயில்லை. இந்த அப்துல் கரீம் சாயபு இருக்காறே, அவர் என்றால் தான் ரொம்ப பயம். அப்பாவுடன் ஐந்தாவது வரைக்கும் படித்துவிட்டு கடைத்தெருவில் ஒரு செருப்புக்கடை வைத்திருக்கிறார். “சந்துரு பேட்டா… என்னா நீ எப்போ பாத்தாலும் ஊர் சுத்துது. உங்க வாப்பா கிட்ட சொல்லி என் ஷு கடையில் வேலை போட்டு தரேன். டெய்லி பேட்டா தரேன். என்னா சொல்றே?” என்பார் ஸ்பஷ்டமாக. அவர் டெய்லி பேட்டா தருவாரோ அல்லது காலில் இருக்கும் Bata-வால் தருவாரோ… அதனாலேயே அவரை தெருக்கோடியில் பார்த்தாலே அவர் கண்ணுக்குப் படாமல் வேறே சந்துக்கு திரும்பி விடுவேன்.

‘ஐயா, நான் என்ன வேலை செய்யமாட்டேன் என்றா சொல்கிறேன்? ஆனால் ஏதாவது ஒரு வேலைப்பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாரில்லை. கிடைக்கும் எனக்கும் ஒரு வேலை… எனக்குப் பிடித்த வேலை. அப்போது வைத்துக் கொள்கிறேன் உங்களையெல்லாம்…’

“எண்டா சந்துரு, கொஞ்சம் செட்டியார் கடைக்குப் போய் வாயேன்டா” என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் என் அம்மா.

சற்றுமுன்னர் தான் மாவுமில்லுக்குப் போய் வந்திருந்தேன். மீண்டும் கடைக்குப் போக எரிச்சலாக இருந்தது. “ஏம்மா, ரமேஷை அனுப்பேம்மா” என்றேன் படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டிருந்த என் தப்பியை பார்த்துக் கொண்டு. அவன் +1 படிக்கிறான். இப்போது study holidays. “டேய். உன்கிட்ட சொன்னா நீ செய். அவனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு. நீ சும்மாதானே இருக்க!”

இன்னமும் அம்மா வாயில் விழுந்து எழுந்திரிக்க திராணியில்லாமல் “சரி, சரி குடும்மா” என்று பையையும் பணத்தையும் அம்மா எழுதிவைத்திருந்த பெரிய லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது தம்பி நமுட்டு சிரிப்பு சிரித்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

வழியில் ப்ரதிமா. பெயருக்கேற்றது போல பொம்மை மாதிரி இருப்பாள். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள் போலும். சற்று பின்னிய அவளுடைய நடை அதை உணர்த்தியது.

“எங்கே” என்றேன்.
“college… Hall ticket” என்றாள் தந்தி பாஷையில். எப்போதும் வாயாடும் அவளின் தந்தி பாஷைக்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், பின்னால் அவள் அப்பா.

“என்னடா சந்துரு, எப்போ வேலைக்குப் போறதா உத்தேசம்?” என்றார் அவள் அப்பா.
“சீக்கிரம் போவேன், மாமா” என்றான் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு… மாமாவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.
“என்னவோ போ! ஏதோ வேலையை தேடிண்டோமோ, அப்பனுக்கு பாரத்தை கொரைச்சோம்மோன்னு இல்லாம… இந்த காலத்ததுப் பசங்க” என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த நாட்டில் வேலையில்லா இளைஞனுக்குத்தான் எத்தனையெத்தனை தொல்லைகள்.

செட்டியார் கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லாவில் calculator- ஐ காட்டிலும் அதி வேகமாக கணக்குப் போட்டுக் கொணடிருந்த போதிலும், செட்டியார் என்னைப் பார்த்து, “சந்துரு தம்பி, லிஸ்ட்டை கொடுத்துட்டுப் போங்க மதியம் அனுப்பி வைக்கிறேன்” என்று பையையும், லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டார்.

செட்டியார் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாமா அல்லது லைப்ரரிக்குப் போகலாமா என்று யோசித்தக்கொண்டு நடந்தபோது, சற்றுத் தொலைவில் போஸ்ட்மேன் கந்தசாமி வருவது தெரிந்தது. இப்போதெல்லாம் என்னுடைய ஒரே ஆறுதல். நம்பிக்கை எல்லாம் அவர்தான்.

“கந்தசாமி அண்ணே, எனக்கு ஏதாச்சும் லெட்டர்…” என்று இழுத்தேன்.
“யாரு? சந்துரு தம்பியா?” கந்தசாமிக்கு கொஞ்சம் வெள்ளெழுத்து. அவர் ரிடையர் ஆகும் முந்தையமாதம் தான் கவர்மெண்ட்டில் ரிடையர் வயதை அறுபது ஆக்கிவிட்டார்கள். இன்னமும் ஆறுமாதம் இருக்கின்றதாம் அவருக்கு அறுபது வயதாக. என்னிடம் அடிக்கடி “தம்பி, ரிடையர் வயசு அறுபத்தைஞ்சு ஆக்கப் போறாங்களாமே நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு கல்யாண வயசில் ஒரு பெண் இருப்பதாக கேள்வி!

“ஒரு லெட்டர் இருக்கு தம்பி” என்று தன் கையில் வைத்திருந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார். கவரைப் பார்த்ததும் என்நெஞ்சு சற்று படபடத்தது. கடந்த மாதம் நான் interview attend செய்த L&T நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. கடவுளை நேர்ந்துக் கொண்டு கவரைப் பிரித்தேன். மனசெல்லாம் பரபரக்க அங்கேயே கடிதத்தைப் படித்தேன்.

‘Congratulations…’ என்று ஆரம்பித்த கடிதம் எப்போது நான் வேலையில் சேர்ந்துக் கொள்ள இயலும் என்பதை தெரிவிக்கக்கோரி முடிந்திருந்தது… என்னுடைய சந்தோஷத்தில் போஸ்ட்மேன் கந்தசாமியை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் போலிருந்தது. அதிவேகமாக அவர் கையைப் பிடித்து குலுக்கினேன். “ரொம்ப தேங்ஸ்ண்ணே” என்றேன்.

“என்ன தம்பி, நல்ல விஷயமா?”

“ஆமாண்ணே, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அம்மா கடைக்கு கொடுத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை அவருக்கு தாராளமாகப் பரிசளித்தேன்.

வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது. பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது. என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர். காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது. ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது. கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள். திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.

ஓட்டமும் நடையுமாக நான் வீட்டை அடைந்தபோது, அப்பாவுடன் ஈஸ்வரைய்யரும் அப்துல கரீம் சாயபுவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். காலனி விஷயமாக இருக்கும் போலும்.

“அப்பா, எனக்கு வேலைகிடைச்சாச்சிப்பா” என்று L&T நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தேன். அப்பாவின் முகம் அதுபோல மலர்ந்து நான் பார்த்ததில்லை. கடிதத்தைக் படித்துவிட்டு “very good” என்று என் கையை பிடித்துக் குலுக்கினார். “சந்துருவுக்கு L&T-ல Engineer வேலை கிடைச்சிருக்கு” என்று மற்ற இருவருக்கும் தெரிவித்தார்.

“நேக்கு எப்பவோ தெரியும். சந்துருவுக்கு பெரிய வேலை கிடைக்கும்னு. அவன்தான் first class graduate ஆச்சே!” என்றார் ஈஸ்வரைய்யர்.

“சந்துரு பேட்டா நல்ல புள்ள ஆச்சே. மத்த புள்ளைங்க மாதிரி அங்க இங்க போவாது. அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருக்கும். அதுபடிப்புக்கு இன்னும் பெரிய இடத்துக்குப் போகும் பாருங்கோ” என்றார் அப்துல கரீம் சாயபு.
இருவரும் பேசியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

“சந்துரு, முதல்ல அம்மாகிட்டச் சொல்லுடா. ரொம்ப சந்தோஷப்படுவாள்” என்றார் அப்பா.

“அம்மா, எனக்கு L&T ல Engineer வேலை கிடைச்சிருக்கும்மா” என்றேன் சமையலறையில் வேலையாக இருந்த அம்மாவிடம். அம்மா அப்படியே பூரித்துப் போனாள். மாவு கையோடேயே எனக்கு திருஷ்டி கழித்தாள்.

“டேய் சந்துரு, எனக்கு சந்தோஷத்துல தலைக்கால் புரியலேடா” என்று பதட்டப்பட்டாள். “ஏதாவது ஸ்வீட் பண்ணனுமே, செட்டியார் எப்படா மளிகை சாமான் அனுப்பறதா சொன்னார்?”
“மதியம் அனுப்பறேன்னாருமா”
“அடடா, சர்க்கரை வேற தீர்ந்து போச்சே” என்றவள், “டேய் ரமேஷ், சீக்கிரம் செட்டியார் கடைக்குப் போய் சர்க்கரையை மட்டும் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுவாடா” என்றாள் படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்.

“அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற. நான் போயிட்டு வரேன்மா. அவன் படிக்கட்டும். நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.

“அவன் படிச்சு கிழிச்சான். நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது. அவனே போகட்டும்” என்றாள் அம்மா.

எரிச்சலுடன் கடைக்குக் கிளம்பிய என் தம்பியை அனுதாபத்துடன் பார்த்தேன்.

***

Older Posts »

பிரிவுகள்