chandarsekar எழுதியவை | ஓகஸ்ட் 8, 2008

நான்? அவனில்லை!

எனக்கு ஆனந்தராஜை நிறைய வருடங்களாகத் தெரியும். நானும் அவனும் ஒரே அலுவலகமாயினும் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள். எங்களை இணைத்தது இருவருக்குள்ளும் இருக்கும் கணிணி குறித்த ஆர்வம் தான். ஆனால் எனக்கு கணிணி மீது பிரியம் என்றால் ஆனந்தராஜுவுக்கு கணிணி மீது பைத்தியம். கணிணி குறித்து அவனுக்குத் தெரிந்தது நிறைய. இதனாலேயே என்னுடைய கணிணி குறித்த சந்தேகங்களுக்காக நான் ஆனந்தராஜை அடிக்கடி சந்திப்பது வழக்கம். எத்தனையோ முறை தெளிந்த எண்ணங்களுடன் போய் ஆனந்தராஜை சந்தித்து கேள்விகளுக்கு விடைபெற்று (?) குழம்பிய வண்ணம் திரும்பியிருக்கிறேன். இருப்பினும் எனக்கும் ஆனந்தராஜூவுக்கும் கணிணிக்கும் அப்பாற்பட்ட ஒரு பிரியம் இருப்பதென்னவோ நிஜம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கும் ஆனந்தராஜூவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம். ஓய்வுபெற வருடங்களை மாதங்களை எண்ணிவிட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவன் நான். ஆனந்தராஜோ 35 வயது ­ளைஞன். (இதனாலேயே ஆரம்பம் முதல் ‘அவன், இவன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்). அவனுடைய பரந்த நெற்றியும் (நெற்றி எங்கே முடிகிறது தலை எங்கே ஆரம்பிக்கிறது என்பதே தெரியாது) நீண்ட நாசியும் அறிவார்ந்த கண்களும் அவனை சற்றே வயதானவனாகக் காட்டியதால் எங்களுடைய சிநேகிதத்தை யாரும் வயது காரணமாக வித்தியாசமாகப் பார்த்ததில்லை. நானே கூட ஆரம்பத்தில் அவனுடைய உருவத்தைப் பாத்து வயதானவன் என்று நினைத்துக் கொண்டு,
“எப்ப சார் உங்க ரிடையர்மெண்டு?”
“அதுக்கென்ன சார், இப்பதானே 35 வயசாவுது”
“நிஜமாகவா? சார், சாரி தப்பா நினைச்சுக்காதிங்க”
“அதனாலென்ன சார். நீங்க வேணும்னா கேட்டிங்க?”
எனக்கு இன்னும் கூட ஆனந்தராஜூவின் வயது குறித்த சந்தேகம் இருக்கிறது.
ஒரு நாள் ஆனந்தராஜ் என்னைத்தேடி வந்தான்.
“என்ன ஆனந்து இந்தப் பக்கம்?”
“நம்ப ஆபீஸ்ல நடத்தற “சிறகு” பத்திரிக்கைகு எதாவது எழுதலாம்னு…” என்று இழுத்தான்.
“சரி. எழுது!” என்றேன்.
“அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு…”
எனக்கு உடனே சற்று தலைகனம் ஏற்பட்டது. என்னைப்போன்ற ஒரு எழுத்தாளனை அனைவரும் தேடி வருவது சகஜம் தான் என்று தோன்றியது. நானும் ஏதோ எழுதி தருகிறேன். சிறுகதை என்ற பெயரால் ­ இதே “சிறகு” பத்திரிக்கையில் வெளியாகியிருக்கிறது. போனால் போகிறது என்று வெளியிடுகிறாகள் போலும். (“சிறகு” தவிர வேறு எங்கும் என்னுடைய எழுத்தாற்றல் போணியாகுமா என்பதும் சந்தேகம் தான்!) இருந்தாலும் ‘பரவாயில்லை நன்றாகத்தான் எழுதுகிறேன் போல’ என்று நினைத்துக் கொண்டேன். என்னுடைய நண்பனுக்கு எழுதுவதில் இருக்கும் சந்தேகத்தை போக்குவது என் கடமை. அவனுக்கு என்னுடைய எழுத்தாற்றலை பிரஸ்தாபிக்க முற்பட்டேன்.
“அதாவது நீங்க எழுதற ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு…” என்று ஆரம்பித்தவனை அவன் இடைமறித்தான்.
“ஏன் சார் விஷயமே இல்லாமல் எழுத முடியாதா?”
அவன் அவ்வாறு கேட்டதும், நான் ஏதோ ஒரு மாயசுழலில் மாட்டிக்கொண்டிப்பது புரிந்தது. என்னை கிண்டல் பண்ணுகிறானா? “சிறகு” பத்திக்கையை கிண்டல் பண்ணுகிறானா?. இல்லை நிஜமாகவே கேட்கிறானா? என்று எனக்கு மிகுந்த சந்தேகம் ஏற்பட்டது.
“லாண்டரி கணக்கு, பால் கணக்கு இப்படி எழுதனும்னா கூட விஷயம் வேண்டும் ஆனந்து. விஷயமே இல்லாமல் எழுதனும்னா ஏதாவது கிறுக்கினால் தான் உண்டு” என்றேன் எரிச்சலில்.
அவனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். அவனுடைய முகம் தெளிவானது போல தோன்றியது. என்னிடம் இருந்து சரேலென விலகி வேகமாக நடந்தான்.
இந்த விஷயத்தை நான் மறந்தே போனேன் மீண்டும் என்னைத்தேடி ஆனந்தராஜ் வரும் வரையில்.
“சார், “சிறகு” படிச்சீங்களா?” என்றான் என் மேஜை மீதிருந்த “சிறகு” பத்திரிகையை காட்டி. சற்று முன்னர் தான் அந்த மாத “சிறகு” பத்திகையை நான் படிக்க கொடுத்துச் சென்றிருந்தார்கள். எனக்கும் இந்த வார குமுதம், விகடன், குங்குமம் படிக்க வேண்டியிருந்ததால் மெதுவாகப் படித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனந்தராஜ் “சிறகு” பற்றி கேட்டதும் எனக்கு முந்தைய நிகழ்ச்சி ஞாபகம் வர சற்று பயமாகக்கூட இருந்தது. நல்லவேளையாக ‘க்ளுக்கடளுக’ என்ற சத்தங்களுடன் காபேய்ய் என்ற குரல் கேட்க சட்டென்று கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு காபி வாங்கும் சாக்கில் விலகினேன். மீண்டும் எப்படி கதை எழுதுவது என்று சொல்லிக் கொடுத்து எரிச்சலடையத் தயாரில்லை.
நான் காபி சாப்பிட்டுவிட்டு காலார நடந்து செல்லலாம் என்று கழிவறை பக்கம் சென்றபோது மீண்டும் ஆனந்தராஜை பார்த்தேன். அங்கிருந்த கண்ணாடியைப் பாத்து ஏதோ கையை நீட்டி பேசுவது போலிருந்தது. அல்லது என்னுடைய பிரமையா? என்னைப் பாத்ததும் நீட்டிய கையை தலை கோதுவது போல செய்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவனை பார்த்து,
“காபி சாப்டாச்சா?” என்றேன் எதையாவது கேட்க வேண்டுமே என்ற நினைப்பில். பதிலுக்கு அவன் ஏதோ முணுமுணுத்தது எனக்கு சரியாகக் கேட்கவில்லை.

மற்றொரு நாள் சற்றேரக் குறைய ஒரு மாதம் கழித்து ஆபீஸ் வராண்டாவில் ஆனந்தராஜை பார்த்தேன். தனக்குத்தானே கையை நீட்டி மடக்கி ஏதோ பேசிக் கொண்டு போனவனை கூப்பிட்டு,
“என்ன ஆனந்து. ஏதோ கணக்கு போட்டுக் கொண்டு போற?” என்றேன்.
“ஒன்றுமில்லை சார். சும்மா..” என்று அவன் சொல்லிவிட்டு போய்விட்டான்.
நான் ஆனந்தராஜை கடைசியாகப் பாத்தது அப்போது தான்.
நான் ஓய்வு பெற்று ஒரு மாதம் கழித்து பாஸ் வேண்டி அலுவலகம் வர நோிட்டது. அலுவலகம் நுழைந்ததுமே ஒரு ஆள் என்மேல் சற்றேரக் குறைய மோதிக் கொண்டு போனான். சரியாக வாராத தலையுடனும் ஷேவ் செய்யாத முகத்துடனும் தாறுமாறாக சட்டை பேண்ட் அணிந்துக் கொண்டு தனக்குத்தானே சத்தமாக ஏதோ பேசிச்கொண்டு போன அவனை எனக்கு வந்த எரிச்சலில் அறைய வேண்டும் போலிருந்தது. என்ன அலுவலகம் இது?. வாசலில் நூறு பேர் காவலாளிகள் இருந்தும் இது போன்ற பைத்தியக்காரர்களை எப்படி அனுமதிக்கிறாகள் என்று கோபமாக இருந்தது.

“வணக்கம் சார். எப்படி இருக்கறீங்க?” என்று என் சிந்தனையை கலைத்தார் ஒருவர். ஆனந்தராஜூ வுடன் வேலைப்பாப்பவர் இவர்.
“நல்லாயிருக்கேன் சார். ஆனந்தராஜ் எப்படி இருக்கிறார்? அவரைப் பார்ப்பதற்குத்தான் போய் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“என்னது, ஆனந்தராஜா? இப்போது உங்கள் மேலே மோதிக் கொண்டு போனாரே. பாக்கலை?
நான் அதிர்ந்துப் போனேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: