chandarsekar எழுதியவை | ஓகஸ்ட் 11, 2008

காக்கைகள்

“மீனாட்சி… மீனாட்சி…”
பூஜையில் இருந்த சங்கரைய்யர் குரல் கொடுத்தார். மீனாட்சிக்கு அவர் அழைப்பதற்கான காரணம் தெரியும். பூஜை அறையும் சமையலரையும் பக்கம் பக்கத்தில். ஜன்னலின் வெளியே பார்த்தாள். எப்போதும்போல காக்கைகள் அருகில் இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்தது..
“மீனாட்சி… மீனாட்சி…” மீண்டும் சங்கரைய்யர் இரைந்தார்.
“இதோ வரேன்னா” மீனாட்சி பூஜை அறைக்கு விரைந்தாள்.
“பாத்தியா மீனாட்சி. எப்போதும்போல நான் பூஜை ஆரம்பிச்சதும் இந்த காக்கைகள் வந்துட்டது” சங்கரைய்யர் குரலில் ஒரு பரவசம் தெரிந்தது.
மீனாட்சி ஆமோதித்தாள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. தினம் பூஜை ஆரம்பித்ததும்
சங்கரைய்யர் காக்கைகளை பார்த்துவிட்டு குரல் கொடுப்பார். இது அவர் தினமும் சிலாகிக்கும் நிகழ்ச்சி. இந்த காக்கைகள் வருவது அவருடைய பூஜாபலன் என்கிற அசையாத நம்பிக்கை.
சில சமயம் சங்கரைய்யர் அழைக்கும் போது மீனாட்சி கைக்காரியமாக இருப்பாள். சட்டென வர இயலாமல் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் போச்சு. பிலுபிலுவென பிடித்துக்கொள்வார்.
“காக்கா தானேன்னு அலட்சியமா நினைக்காதேடி, மீனாட்சி. காக்காக்கள் எல்லாம் நம்மோட பித்ருக்கள். சனீஸ்வரன் வாகனம் மட்டுமில்லேடி, விநாயகனும் அதுதான். காக்கா இல்லேன்னா நமக்கு காவேரி ஏதுன்னேன்?”
இதற்குத்தான் என்ன கைக்காரியமாக இருந்தாலும் போட்டுவிட்டு மீனாட்சி ஓடிவருவாள்.
“எனக்கும் இந்த காக்காக்களுக்கும் ஏதோ பந்தம் இருக்குபோல. இப்படி ஒரு நாளா இரண்டு நாளா இத்தனை வருஷம் இந்த காக்காக்கள் வருதுன்னா, ஏதோ ஒரு விட்டகுறை தொட்டகுறை இருக்குடி”
இந்த காக்கைகள் மூலமாக தன்னுடைய ஜபங்கள் இறைவனை அடைவதாக நம்பினார். சில நாள் இந்த காக்கைகள் வர சற்று நேரமானாலும் மிகவும் நிலைக்கொள்ளாது போவார். பூஜைமீது நாட்டம் குறைந்து போகும்.
சிலசமயம் சங்கரைய்யர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்.
“என்னோட ஜன்மம் அடங்கினால் தான் இந்த காக்கா வரது நிக்கும்” என்றார் ஒருநாள். மீனாட்சிக்கு பகீலரன்றது.
“ஏன்னா இப்படி அச்சானியமா பேசறேள்?” என்றாள் அழமாட்டாகுறையாக.
“இவை வெறும் காக்காக்கள் இல்லேடி. நம்ப பந்துக்கள். நம்ப பந்துக்களைத் தேடி நான் போனா அவை ஏன் என்னத்தேடி இங்கே வரணும்?”
மீனாட்சி அவருடன் தர்க்கம் பண்ண தைரியம் இல்லாமல் விலகிப் போவாள். தர்க்கத்துக்கு சளைக்காதவர். இறுதியில் மனசை கலங்கடித்துவிடுவார்.
சங்கரைய்யருக்கும் இந்த காக்கைகளுக்கும் உள்ள உறவு சொல்லி மாளாது!
அன்று இரவு படுக்கும்போ சங்கரைய்யருக்கு கடும் காய்ச்சல்.. டாக்கரிடம் போவது மட்டும் அவருக்கு பிடிக்காத விஷயம். என்னதான் உடம்பு படுத்தினாலும் டாக்டரிடம் போவதற்குமட்டும் உடன்படமாட்டார். இத்தனைவருஷம் அவர் டாக்டரிடம் எதற்காகவும் போனதில்லை.

“ஏன்னா, டாக்டரை வரச்சொல்லட்டா?” மீனாட்சி விம்மினாள்.
“துளசி தீர்த்தத்துக்கு மிஞ்சிய டாக்டர் உண்டா என்ன? இந்த உடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆகாது பயப்படாதேடி, மினாட்சி”
“இல்லேன்னா, உடம்பு இந்த கொதி கொதிக்கிறதேன்னா”
“நன்னா படுத்து எழுந்தா சரியாயிடும்டி”
சரியாகவில்லை. ராத்திரி பூராவும் சங்கரைய்யர் அனத்திக்கொண்டே இருந்தார். ஜுரம் எந்த துளசி தீர்த்ததுக்கும் கட்டுப்படாமல், உடம்பு கொதித்துக்கொண்டே இருந்தது. மீனாட்சி அவர் படுக்கை பக்கத்திலேயே தூங்காமல் உட்கார்ந்து மிகவும் சோர்ந்துப் போனாள்.
விடிந்தும் விடியாததுமாக சங்கரைய்யர் எழுந்துக் கொண்டார். இன்னமும் உடம்பு சூடாகத் தான் இருந்தது.
“பூஜைக்கு எல்லாம் எடுத்து வையடி. நான் குளிச்சிட்டு வந்துடரேன்” அவரால் திடமாகக்கூட பேச இயலவில்லை. இடையிடையே இருமல் வேறு.
மீனாட்சி பயந்துப் போனாள். “வேணாம்னா. இன்னைக்கு பூஜை பண்ணலேன்னா பரவாயில்லைனா” என்ற அவளைப்பார்த்து அந்த ஜுரத்திலேயும் ஒரு முறை முறைத்தார்.
“குளிச்சிட்டு வரேன். எல்லாம் எடுத்து வை” என்றார் ஆணித்தரமாக.
“பச்சத் தண்ணிலேயா குளிக்கப்போறேள். உங்களுக்கு்தான் உடம்பு சரியில்லையே. நான் கொஞ்சம் வெண்ணி வெச்சுத்தரேன்னா” மீனாட்சி கெஞ்சினாள்.
“பிராமணனுக்கு பச்சதண்ணி ஆகாதுன்னு சொன்ன மொத ஆள் நீதான்” சங்கரைய்யர் குளிக்கச் சென்றுவிட்டார்.
சங்கரைய்யர் குளித்துவிட்டு வரும்போது உடம்பு அளவுக்கு அதிகமாக நடுக்கமாக இருந்தது. நடக்கக்கூட சற்று தள்ளாடினார். மீனாட்சி எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள்.
சங்கரைய்யர் பூஜை செய்துக்கொண்டிருக்க, அருகில் மீனாட்சி கண்களை மூடிக்கொண்டு அவருக்கு குணமாக பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.
சற்றேரக்குறைய அரைமணி நேரம் கழித்து சங்கரைய்யர் “ மீனாட்சி” என்று பலவீனமாக கூப்பிட்டார். அருகில் இருந்த மீனாட்சி மிகவும் பயத்தில் இருந்தாள். “என்னன்னா” என்றாள். அவள் குரல் மேலெழும்பவில்லை.
“இன்னிக்கு ஒரு காக்காகூட வரலை பாத்தியா?” சங்கரைய்யர் அப்படியே கண்கள் நிலைகுத்த தரையில் சரிந்தார்.
மீனாட்சிக்கு பகீரென்றது.
தினமும் காக்கைக்கு வைக்கும் கவளம் சாதம் சமையலறை ஜன்னலில் இன்றைக்கு வைக்காதது ஞாபகம் வர தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: