chandarsekar எழுதியவை | நவம்பர் 20, 2008

நிதர்ஸனம்

நான் வீட்டை அடையுமுன்னர் அம்மாவின் குரல் என்னை வரவேற்றது.

“வாடா சந்துரு, வாயைத் திற” என்று நீராவி எஞ்ஞினில் கரி அள்ளிக் கொட்டுவதைப்போல என் வாயில் சர்க்கதையை ஸ்பூனால் அள்ளிப் போட்டாள்.
“என்னம்மா விஷேஷம்” என்றேன் முகத்தில் இருந்த சர்க்கரையை துடைத்துக்கொண்டு.
“உங்கப்பாவுக்கு ஜியெம் அவார்ட் கிடைச்சிருக்குடா” அம்மாவின் குரல் இரயில்வே காலனியெங்கும் எதிரொலித்தது.

அம்மா எப்போதும் இப்படித்தான். எதையும் அடக்கி வாசிக்கத் தெரியாது. நான் போனவருடம் பத்தாவது வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றபோது அம்மா செய்த கலாட்டாவில் பக்கத்துவீட்டு தினேஷ் அண்ணன் IASல் தேர்வு பெற்றது சாதாரண நிகழ்ச்சியாகிப் போனது.

அப்பாவுக்கு ‘ஜியெம்’ அவார்ட்! அம்மாவின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது. அம்மாவின் கையைப் பிடித்துக் குலுக்கினேன்.
“அப்பா எங்கேம்மா?”
“உள்ளே தான் இருக்கார். ஏதோ ஆபீஸ் வேலை” என்றாள் சற்று சலிப்புடன்.
அப்பா எப்போதும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் ஏதோ ஆபீஸ் வேலைதான். நான் அவரை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

“ஏம்பா, உங்கள் ஆபீஸில் உங்களைவிட்டா வேலை செய்ய யாரும் இல்லையா?”
“நான் எனக்காக வேலை செய்யறேன்டா. எனக்கு வேலை செய்வது பிடிச்சிருக்கு”
“அது சரி. வீட்டுவேலையும் கொஞ்சம் பாருங்க” – இது அம்மா.
“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே” என்பார் அப்பா. அம்மா மோவாய்கட்டையை இடித்துக் கொண்டு போவாள்.

அப்பா அடிக்கடி ஏதாவது அவார்ட் வாங்கிக்கொண்டு வருவார். ஐம்பது, நூறு, அதிகபட்சமாக இருநூறு. இவையாவும் அப்பா வீட்டுக் இனிப்பாகத்தான் கொண்டு வருவார்.
“அம்மா என்னம்மா திடீரென்று ஸ்வீட்?”
“அப்பாவுக்கு ஏதோ அவார்ட் கொடுத்தாங்களாம். அந்த பணத்துக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தார்”

ஆனால் ‘ஜியெம்’ அவார்ட் அப்படியில்லை. மிகப் பெரிய கெளரவம். இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்பா சொல்லியிருக்கிறார். அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். அவருக்கு அவார்ட் கிடைத்தது பெரிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இது மிகப் பெரிய கெளரவம். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அப்பா உள் அறையில் – ஏதோ ஆபீஸ் வேலை.
“கங்ராஜூலேஷன்ஸ் அப்பா”
“தேங்ஸ்டா”
“நீங்க கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு பலன்” என்றேன் பெரிய மனுஷன் போல.
“அதிர்ஷ்டமும் கூட. என்னைவிட எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இன்னமும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சிருக்கு”.

அப்பாவிடம் இது தான் எனக்கு பிடிக்காத விஷயம். தான் ஒரு பெரிய ஆள் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டார். ஈகோவே இல்லாத மனுஷன்.

எனக்குத் தெரிந்து அப்பா போல யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக தெரியவில்லை. கோடி வீட்டில் இருக்கும் ராமநாதன் மாமா வேலைக்குப்போயே நான் பார்க்கவில்லை. அவரும் அப்பா போல ஒரு ஆய்வாளர் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் வீட்டில் தான் வாசம். இரயில்வேயில் இருக்கும் சலுகைகள், விடுப்புகள், வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி.

“என்ன மாமா, ஆபீஸ் போகலையா?”
“இல்லேடா சந்துரு. மாமி தூரம். ஆத்துல இல்ல. நான்தான் சமைக்கணும். அதான் சியெல் போட்டிருக்கேன்”.

இன்னொருநாள்.
“மாமா, நீங்க போகலையா? அப்பா ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு லைன்ல போயிருக்கார்”
“காலம்பர இருந்தே தலை கிர்ர்ருனு இருக்குடா சந்துரு. அதான் ‘ஸிக்’ பண்ணிட்டேன்”
“அது சரி. உடம்பு சரியில்லன்னு இப்ப எங்க போயிண்டிருக்கீங்க?”
“மதியம் முறுக்கு சுட்டுத் தரேன்னா மாமி. அது தான் மாவு அரைக்க போயிண்டிருக்கேன். துணி வேற ஏகப்பட்டது இருக்கு. ஊர வச்சிருக்கேன். வந்து தொவைக்கணும். தலைக்கு மேல வேல இருக்குடா. நான் வரேண்டா சந்துரு”

இந்த ராமநாதன் மாமாவுக்கு ஜன்மத்துக்கும் ‘ஜியெம்’ அவார்ட் கிடைக்காது.

ஜியெம் அவார்ட் ஃபங்ஷன். அப்பாவைப்போல நிறையப்பேர் அவார்ட் வாங்க வந்திருந்தார்கள். அவர்களுடன் கூட அவர்கள் நண்பர்கள்… உறவினர்கள்… பெண்கள் பட்டுச் ்சேலை அணிந்துக் கொண்டு ஒரு திருமண விழா போல… அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. அப்பாவைப் பார்க்கப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது. நிறையப் பேர் அப்பாவிடம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். கை குலுக்கினார்கள். அப்பா சற்று கூச்சப்படுவதாகத் தோன்றியது. அப்பாவும் எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அப்பாவின் பெயரை வாசித்ததும் விழாத் தலைவரிடம் இருந்து விருது பெற நடந்தபோது அவர் செய்த பணிகளைக் குறித்தும் அவருக்கு ஏன் விருது தரப்படுகிறது என்றும் வாசித்தார்கள். அனைவரும் கரகோஷம் செய்தார்கள். அப்பாவின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம். நான் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய சக்தியெல்லாம் திரட்டி கைதட்டினேன். அப்பா கரம் கூப்பி நன்றியுடன் விருது பெற்றுக் கொண்டார். என்னுடைய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்தது.

அப்போதுதான் அடுத்த விருது பெற ராமநாதன் ஆய்வாளர் என்று வாசித்ததும் என்னால் நம்ப முடியாமல் மேடையைப் பார்க்க சரிதான். கோடிவீட்டு ராமநாதன் மாமா தான். அவருடைய கணிகளைகுறித்து வாசித்ததை என்னால் கேட்க முடியவில்லை. என் காதில் ஏதும் விழவில்லை. என்னால் நம்பஇயலாமல் மேடையை பார்த்துக் கொண்டிருந்தேன். ராமநாதன் மாமா பரிசை பவ்யமாக பெற்றுக்கொண்டு நகர்ந்தார். நான் நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சந்தோஷம் வடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ‘ஜியெம் அவார்ட்’ ? ராமநாதன் மாமாவுக்கு?

வீட்டுக்கு திரும்பும்போது அடக்கமாட்டாமல் அப்பாவிடம் கேட்டேன்.
“அப்பா, ராமநாதன் மாமாவுக்குக்கூட ஜியெம் அவார்டா? எனக்குத் தெரிந்து அவர் வேலையே செய்யமாட்டாரே அப்பா”

“இது மூன்றாவது முறை” என்றார் அப்பா.


மறுவினைகள்

 1. Your impressive writing clearly shows how the great awards are decided by the ‘powers that be’. They are given more to ‘compensate’ someone for ‘something’. This has nothing to do with their performance. Best award one can get is ‘genuine’ appreciation given without expecting anything in return.

  Keep continuing your good work without expecting any award.
  The satisfaction you get by such writing is the best award.

  A.Hari
  —————————————————————–
  Visit my blog ‘Inspire Minds’ to read inspiring real llife success stories.

  http://changeminds.wordpress.com/


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: