chandarsekar எழுதியவை | நவம்பர் 24, 2008

வேலை

“சந்துரு, கொஞ்சம் கடைக்குப் போய் வா” அம்மா சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள். நான் – சந்துரு, வேலையில்லா பொறியியல் பட்டதாரி – தினமும் இப்படி நூறுமுறை கடைக்கும், ரேஷனுக்கும், மாவுமில்லுக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறேன். கூடவே, தினப்படி, walk-in interview, spot selection interview போல இன்னபிற நேர்முகத் தேர்வுகளுக்கும் எழுத்து தேர்வுகளுக்குமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

“சந்துரு, இன்னுமா நோக்கு வேலை கிடைக்கலை? உங்கப்பா சொன்னாறே, நீ First Class Graduate-னு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. நீ இன்னும் சிரத்தையா வேலைத் தேடணும். நான் உங்கப்பா எல்லாம் SSLC முடிச்சதும் TVS-ல கதறிட்டு எங்களுக்கு வேலை குடுத்தான் தெரியுமா?” என்றார் அப்பாவுடன் சேர்ந்து வேலைப்பபார்த்து சேர்ந்து ரிடையர் ஆன ஈஸ்வரைய்யர் ஒருநாள்.

“அது தெரியாது மாமா. வேலை குடுத்துட்டு கதறினான். அதுதான் எனக்குத் தெரியும்” என்றேன் எரிச்சலில்.

“இதுதான்… இந்த வாய்க்குத்தான் நோக்கு வேலை கிட்டமாட்டன்றது. ரொம்ப கஷ்டம்” என்று முணுமுணுத்துக்கொண்டே அவர் போய்விட்டார்.

ஈஸ்வரைய்யராவது பரவாயில்லை. இந்த அப்துல் கரீம் சாயபு இருக்காறே, அவர் என்றால் தான் ரொம்ப பயம். அப்பாவுடன் ஐந்தாவது வரைக்கும் படித்துவிட்டு கடைத்தெருவில் ஒரு செருப்புக்கடை வைத்திருக்கிறார். “சந்துரு பேட்டா… என்னா நீ எப்போ பாத்தாலும் ஊர் சுத்துது. உங்க வாப்பா கிட்ட சொல்லி என் ஷு கடையில் வேலை போட்டு தரேன். டெய்லி பேட்டா தரேன். என்னா சொல்றே?” என்பார் ஸ்பஷ்டமாக. அவர் டெய்லி பேட்டா தருவாரோ அல்லது காலில் இருக்கும் Bata-வால் தருவாரோ… அதனாலேயே அவரை தெருக்கோடியில் பார்த்தாலே அவர் கண்ணுக்குப் படாமல் வேறே சந்துக்கு திரும்பி விடுவேன்.

‘ஐயா, நான் என்ன வேலை செய்யமாட்டேன் என்றா சொல்கிறேன்? ஆனால் ஏதாவது ஒரு வேலைப்பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாரில்லை. கிடைக்கும் எனக்கும் ஒரு வேலை… எனக்குப் பிடித்த வேலை. அப்போது வைத்துக் கொள்கிறேன் உங்களையெல்லாம்…’

“எண்டா சந்துரு, கொஞ்சம் செட்டியார் கடைக்குப் போய் வாயேன்டா” என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் என் அம்மா.

சற்றுமுன்னர் தான் மாவுமில்லுக்குப் போய் வந்திருந்தேன். மீண்டும் கடைக்குப் போக எரிச்சலாக இருந்தது. “ஏம்மா, ரமேஷை அனுப்பேம்மா” என்றேன் படிப்பது போல பாவலா காட்டிக்கொண்டிருந்த என் தப்பியை பார்த்துக் கொண்டு. அவன் +1 படிக்கிறான். இப்போது study holidays. “டேய். உன்கிட்ட சொன்னா நீ செய். அவனுக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு. நீ சும்மாதானே இருக்க!”

இன்னமும் அம்மா வாயில் விழுந்து எழுந்திரிக்க திராணியில்லாமல் “சரி, சரி குடும்மா” என்று பையையும் பணத்தையும் அம்மா எழுதிவைத்திருந்த பெரிய லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது தம்பி நமுட்டு சிரிப்பு சிரித்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

வழியில் ப்ரதிமா. பெயருக்கேற்றது போல பொம்மை மாதிரி இருப்பாள். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள் போலும். சற்று பின்னிய அவளுடைய நடை அதை உணர்த்தியது.

“எங்கே” என்றேன்.
“college… Hall ticket” என்றாள் தந்தி பாஷையில். எப்போதும் வாயாடும் அவளின் தந்தி பாஷைக்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், பின்னால் அவள் அப்பா.

“என்னடா சந்துரு, எப்போ வேலைக்குப் போறதா உத்தேசம்?” என்றார் அவள் அப்பா.
“சீக்கிரம் போவேன், மாமா” என்றான் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு… மாமாவில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.
“என்னவோ போ! ஏதோ வேலையை தேடிண்டோமோ, அப்பனுக்கு பாரத்தை கொரைச்சோம்மோன்னு இல்லாம… இந்த காலத்ததுப் பசங்க” என்று முணுமுணுத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த நாட்டில் வேலையில்லா இளைஞனுக்குத்தான் எத்தனையெத்தனை தொல்லைகள்.

செட்டியார் கடையில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லாவில் calculator- ஐ காட்டிலும் அதி வேகமாக கணக்குப் போட்டுக் கொணடிருந்த போதிலும், செட்டியார் என்னைப் பார்த்து, “சந்துரு தம்பி, லிஸ்ட்டை கொடுத்துட்டுப் போங்க மதியம் அனுப்பி வைக்கிறேன்” என்று பையையும், லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டார்.

செட்டியார் கடையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு போகலாமா அல்லது லைப்ரரிக்குப் போகலாமா என்று யோசித்தக்கொண்டு நடந்தபோது, சற்றுத் தொலைவில் போஸ்ட்மேன் கந்தசாமி வருவது தெரிந்தது. இப்போதெல்லாம் என்னுடைய ஒரே ஆறுதல். நம்பிக்கை எல்லாம் அவர்தான்.

“கந்தசாமி அண்ணே, எனக்கு ஏதாச்சும் லெட்டர்…” என்று இழுத்தேன்.
“யாரு? சந்துரு தம்பியா?” கந்தசாமிக்கு கொஞ்சம் வெள்ளெழுத்து. அவர் ரிடையர் ஆகும் முந்தையமாதம் தான் கவர்மெண்ட்டில் ரிடையர் வயதை அறுபது ஆக்கிவிட்டார்கள். இன்னமும் ஆறுமாதம் இருக்கின்றதாம் அவருக்கு அறுபது வயதாக. என்னிடம் அடிக்கடி “தம்பி, ரிடையர் வயசு அறுபத்தைஞ்சு ஆக்கப் போறாங்களாமே நிஜமா?” என்று கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு கல்யாண வயசில் ஒரு பெண் இருப்பதாக கேள்வி!

“ஒரு லெட்டர் இருக்கு தம்பி” என்று தன் கையில் வைத்திருந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார். கவரைப் பார்த்ததும் என்நெஞ்சு சற்று படபடத்தது. கடந்த மாதம் நான் interview attend செய்த L&T நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. கடவுளை நேர்ந்துக் கொண்டு கவரைப் பிரித்தேன். மனசெல்லாம் பரபரக்க அங்கேயே கடிதத்தைப் படித்தேன்.

‘Congratulations…’ என்று ஆரம்பித்த கடிதம் எப்போது நான் வேலையில் சேர்ந்துக் கொள்ள இயலும் என்பதை தெரிவிக்கக்கோரி முடிந்திருந்தது… என்னுடைய சந்தோஷத்தில் போஸ்ட்மேன் கந்தசாமியை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றவேண்டும் போலிருந்தது. அதிவேகமாக அவர் கையைப் பிடித்து குலுக்கினேன். “ரொம்ப தேங்ஸ்ண்ணே” என்றேன்.

“என்ன தம்பி, நல்ல விஷயமா?”

“ஆமாண்ணே, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு!” அம்மா கடைக்கு கொடுத்திருந்த பணத்திலிருந்து பத்து ரூபாயை அவருக்கு தாராளமாகப் பரிசளித்தேன்.

வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது. பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது. என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர். காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது. ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது. கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள். திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.

ஓட்டமும் நடையுமாக நான் வீட்டை அடைந்தபோது, அப்பாவுடன் ஈஸ்வரைய்யரும் அப்துல கரீம் சாயபுவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். காலனி விஷயமாக இருக்கும் போலும்.

“அப்பா, எனக்கு வேலைகிடைச்சாச்சிப்பா” என்று L&T நிறுவனத்திலிருந்து வந்த கடிதத்தைக் கொடுத்தேன். அப்பாவின் முகம் அதுபோல மலர்ந்து நான் பார்த்ததில்லை. கடிதத்தைக் படித்துவிட்டு “very good” என்று என் கையை பிடித்துக் குலுக்கினார். “சந்துருவுக்கு L&T-ல Engineer வேலை கிடைச்சிருக்கு” என்று மற்ற இருவருக்கும் தெரிவித்தார்.

“நேக்கு எப்பவோ தெரியும். சந்துருவுக்கு பெரிய வேலை கிடைக்கும்னு. அவன்தான் first class graduate ஆச்சே!” என்றார் ஈஸ்வரைய்யர்.

“சந்துரு பேட்டா நல்ல புள்ள ஆச்சே. மத்த புள்ளைங்க மாதிரி அங்க இங்க போவாது. அது உண்டு அது படிப்பு உண்டுன்னு இருக்கும். அதுபடிப்புக்கு இன்னும் பெரிய இடத்துக்குப் போகும் பாருங்கோ” என்றார் அப்துல கரீம் சாயபு.
இருவரும் பேசியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

“சந்துரு, முதல்ல அம்மாகிட்டச் சொல்லுடா. ரொம்ப சந்தோஷப்படுவாள்” என்றார் அப்பா.

“அம்மா, எனக்கு L&T ல Engineer வேலை கிடைச்சிருக்கும்மா” என்றேன் சமையலறையில் வேலையாக இருந்த அம்மாவிடம். அம்மா அப்படியே பூரித்துப் போனாள். மாவு கையோடேயே எனக்கு திருஷ்டி கழித்தாள்.

“டேய் சந்துரு, எனக்கு சந்தோஷத்துல தலைக்கால் புரியலேடா” என்று பதட்டப்பட்டாள். “ஏதாவது ஸ்வீட் பண்ணனுமே, செட்டியார் எப்படா மளிகை சாமான் அனுப்பறதா சொன்னார்?”
“மதியம் அனுப்பறேன்னாருமா”
“அடடா, சர்க்கரை வேற தீர்ந்து போச்சே” என்றவள், “டேய் ரமேஷ், சீக்கிரம் செட்டியார் கடைக்குப் போய் சர்க்கரையை மட்டும் சீக்கிரம் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுவாடா” என்றாள் படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்.

“அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற. நான் போயிட்டு வரேன்மா. அவன் படிக்கட்டும். நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.

“அவன் படிச்சு கிழிச்சான். நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது. அவனே போகட்டும்” என்றாள் அம்மா.

எரிச்சலுடன் கடைக்குக் கிளம்பிய என் தம்பியை அனுதாபத்துடன் பார்த்தேன்.

***


மறுவினைகள்

  1. /// வீட்டை நோக்கி சென்றபோது, சென்னை நகரின் உச்சிவெயில் மிகவும் இரம்யமாக இருப்பதாகப் பட்டது. பஜாரில் கூட்டமாக இருந்தபோதிலும் எனக்கு எல்லோரும் வழிவிட்டது போலிருந்தது. என்னை நோக்கி அனைவரும் புன்னகைத்தனர். காலடியில் மார்க்கெட் சகதி பூக்களாக மாறிப் போனது. ஒற்றை காக்கை இனிமையாக கரைந்துக் கொண்டு பறந்தது. கறிக்கடை பாய் எறிந்த எலும்புக்காக இரண்டு நாய்கள் ‘அன்புடன்’ சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வேகமாக சைக்கிளில் மோத வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா கஸ்மாலம், வூட்ல சொல்லிகினு வந்திட்டியா” என்று ஒரு பெண்மணி ‘அக்கரையுடன்’ விசாரித்தாள். திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.
    ///
    வாழ்கையில் அனுபவித்த நிமிடங்களின் பிரதிபலிப்பு!!!

    ///“அவனை ஏம்மா டிஸ்டர்ப் பண்ற. நான் போயிட்டு வரேன்மா. அவன் படிக்கட்டும். நான் சும்மாதானே இருக்கேன்” என்றேன்.
    “அவன் படிச்சு கிழிச்சான். நீயெல்லாம் இனிமேல் கடைக்கெல்லாம் போகக்கூடாது. அவனே போகட்டும்” என்றாள் அம்மா.///
    ஆனா இந்த அளவுக்கு மாற்றமில்லை.. ஒருவேளை சிறுசும் இஞ்சினியராக நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாலோ என்னவோ??? 😉

  2. சந்துரு… இந்தப் பதிப்பு மிகவும் நன்றாக இருந்தது.. வேலை கிடைத்தவுடன் நீங்கள் வந்த அதே தெரு, மக்கள் சத்தம், சகதி உங்களுக்கு எவ்வளவு வித்யாசமாக இருந்ததை நன்றாக எழுதியிருக்குறீர்கள்…தொடர்ந்து எழுதவும்…

    – பாலா.
    என்னுடைய blog: http://balasrini.wordpress.com/

  3. எழுத்து நடை நல்லா இருக்குதுங்க.
    அதிலும் வேலை கிடைத்த பிறகு //திடீரென்று உலகம் உன்னதமாக மாறிப் போனது.
    // பற்றி ரெம்ப அழகா விவரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  4. கதையின் ஒரு முகம் எதார்தத்தை பிரதிபலித்தாலும். நம் சமுதாயத்தின் வர்க வேற்றுமை பளீர் என்று அடிக்கிறது.

    பிரமண குடும்பத்தில் எல்&டி என்சினியர். செட்டியார் வழக்கம் போல மளிகைக் கடையில். பாய் வழக்கம் போல கறிக் கடை.

    இதை தான் ஸ்டீரியோடைப் என்கின்றனரோ!

    நான் இப்படி சொல்வதால் நீங்கள் பொலிடிக்கலி கரெக்ட்டாக எழுத வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இருப்பினும் உங்கள் கதையில் பொதிந்துள்ளது வர்க வேற்றுமைகளை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்கிறேன்.

  5. //பிரமண குடும்பத்தில் எல்&டி என்சினியர்// கதையில் எங்குமே பிரதான பாத்திரம் பிராமண குடும்பத்தை சார்ந்ததாக குறிப்பிடபடவில்லையே. நீங்களாகவே நினைத்துக்கொண்டால் எப்படி? இப்போது “வர்க வேற்றுமைகள்” எங்கிருக்கிறது என்று தங்களுக்கு புரிந்திருக்கும்.

    உங்கள் வருகை எனக்கு உற்சாகம் அளிக்கிறது முரளி.

  6. சந்துரு,

    அம்பி கத கரு ரொம்ப பயஷ்ஷா இருக்கே. வேற புதுஷா ட்ரை பண்ணலாமே.

    நீங்க நெறைய கத எழுதரவாள் ஆச்சே ! நோக்கு தெரிய வேண்டாமோ?

    பாதி படிக்கும்போதே ஹேஷ்யம் பண்ணிண்டுடேன்.

    கோவிச்சுக்கப்படாது.

    ஷேமம்.

  7. //பாதி படிக்கும்போதே ஹேஷ்யம் பண்ணிண்டுடேன்.//
    இந்த கதையிலே என்ன சஸ்பென்ஸ் இருக்கு. அதுக்குமேலே நான் கோபித்துக்கொள்ள என்ன இருக்கிறது. நீங்க பேஷா என்னை பிச்சி ஒதரலாம். நன்றி ரவி.

  8. முதலில் தன்னிலை விளக்கம்:

    எனக்கும் என் பின்னால் பின்னூட்டம் இட்டவருக்கும் குறைந்தது நேப்பியர் பாலம் அளவிற்காவது கருந்துக்களில் இடைவெளி உண்டு. அது மட்டுமல்ல நான் இப்படி எழுதும் பொழுது ஒருவர் அவர் போலும் எழுதுவார் என்று முதலில் தயங்கினேன். அதே போல் நான் சொல்ல வந்த விமர்சனம் ஹைஜேக் ஆகிவிட்டது!

    ***

    ஒருவருக்கு வேலைக் கிடைத்தவுடன் ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் பொழுது கூடவா இவர்கள் வர்க்க நியாயங்கள் பார்க்கிறார்கள் என்று உங்களுக்கும் இந்தக் கதை மற்றும் பின்னூட்டம் படிப்பவர்களுக்கு வரலாம். அன்றாடம் நடக்கும் ஒரு விஷயத்தை இப்படி பூத கண்ணாடி வழியா பாக்கனுமா என்றும் தோன்றலாம்.

    நான் சொல்லவருவது இதுவே:

    ஸ்டீரியோடைப் செய்யப் பட்ட கதை மாந்தர்கள் கதையில் உங்களுக்குத் தெரிகிறார்களா.

    பிரதான பாத்திரம் பிரமணர் அல்ல எனில் மன்னிக்கவும், எனக்குத் தெரிந்தவரை கதையில் சொல்லப்பட்ட மொழி நடை மற்றும் சூழல் அவர் கண்டிப்பாக பிராமணர் என்றே எனக்குக் காட்டியது.

    இது கதையின் விமர்சனமே, கதையாசிரியர் மீதோ அல்ல அவரை சிறுமைப் படுத்த வேண்டும் என்பதோ என் எண்ணம் அல்ல.

    ***

    இனி நேரம் கிடைத்தால் உங்கள் கதையில் உள்ள வர்க்க வேற்றுமை உங்கள் கண்ணில் படுகிறதா இல்லையா என்று பதில் சொல்லுங்கள்.

    நன்றி!

  9. கதையில் சொல்லப்பட்ட மொழி நடை மற்றும் சூழல் அவர் கண்டிப்பாக பிராமணர் என்றே எனக்குக் காட்டியது

    இருக்கலாம் முரளி. இன்னொரு விஷயமும் தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்ககூடும். அது நான் பிறப்பால் பிராமணன் அல்ல என்பது. ஆயின் என்னை விமரிசனம் செய்ய தங்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு. முக்கியமான ஒன்று இந்த கதை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாமே தவிர அனைத்து கதாபாத்திரங்களும் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். நானும் செட்டியார் கடையில் மளிகையும் பாய் கடையில் கறியும் வாங்கியவன் தான்.

    கதையாசிரியர் மீதோ அல்ல அவரை சிறுமைப் படுத்த வேண்டும் என்பதோ என் எண்ணம் அல்ல.
    நான் அவ்வாறு நினைக்கவில்லை.

    உங்கள் கதையில் உள்ள வர்க்க வேற்றுமை உங்கள் கண்ணில் படுகிறதா இல்லையா என்று பதில் சொல்லுங்கள்.

    ஒத்துக்கொள்கிறேன். கூடுமானவரையில் தவிர்க்க முயற்சிக்கிறேன். நன்றி!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: