chandarsekar எழுதியவை | திசெம்பர் 3, 2008

மாற்றம்

“நான் நானாக இல்லை – நிஜம்தான்
நீ நீயாகத்தான் இருக்கின்றாயா?
மாறிவரும் இவ்வுலகில்
நிதமும் மாறும் எல்லாவற்றிலும்
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்…”

மாற்றம்

சந்துரு உட்காந்திருந்தது தூரத்தில் வரும்போதே தொpந்தது. நான் புடவை தடுக்க நடையை எட்டிப்போட்டேன். எவ்வளவு நேரமாக உட்காந்திருந்தானோ?
“ஸாரி சந்துரு கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
“கொஞ்சம் இல்லை. நிறையவே லேட். இருந்தாலும் பரவாயில்லை.”

என் சந்துருவிடம் பிடித்தது இது தான். எப்பவும் கோபமே வராது அவனுக்கு. என்னிடம் மட்டுமல்ல. யாடமும் அவன் கோபத்தோடு பேசி பாத்ததில்லை.
“ஏன் சந்துரு உனக்கு கோபமே வராதா?”
”ஏன் கோபப்படணும்? அட்த மோஸ்ட் வருத்தப் படலாம். கோபப்படும்போது அடுத்தவரை பாதிக்கிறோம். வருத்தம் நம்மை மட்டுமே பாதிக்கும. என்னைப் பொருத்தவரையில் அடுத்தவரை பாதிக்கிற உமை யாருக்கும் இல்லை. அவ்வளவுதான். ஆனால் எனக்கும் கோபம் வரும். அதை கத்தி தான் தெரியப்படுத்தனும்றது இல்லை.”

சந்துரு நன்றாகப் படித்தவன். அவன் பேசும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிவதில்லை. அவன் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் சினிமாக்கள் எதுவும் எனக்கு புரிவதில்லை. இருந்தாலும் எனக்கு அவன் பேசுவது ரொம்பவும் பிடிக்கும். அவனுடைய கவிதைகள் பிடிக்கும். சந்துருவுக்கு எல்லாமே கவிதைதான். இந்த கடலும் சரி கடலை விக்கிற பையனும் சரி. யோசித்துப்பார்த்தால் அவனிடம் எனக்குப் பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது. நாங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சந்திப்பதாக எங்களுக்குள் ஒப்பந்தம். அதுவும் என்னால் தான். நான் தினமும் சந்துருவை சந்தித்து விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போக முடியாது. என் அப்பா அண்ணனின் சந்தேகத்திற்கு ஆளாக முடியாது. சந்துருவை சந்திக்கும் என்னுடைய இந்த சின்ன சந்தோஷத்தையும் இழக்க நான் தயாராக இல்லை. என் வீட்டு சகதியை சந்துருவின் மேல் புச தைரியம் இல்லை. தெரியும் போது தெரியட்டும்.
நான் சந்துருவிடம் என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். சந்துருவுக்கு எல்லாம் தெரியும். என் சம்பளத்தை நம்பியிருக்கும் என் குடும்பத்தைப் பற்றி்… சொற்ப சம்பளம் வாங்கும் என் அப்பாவைப்பற்றி… சமையலறையே கதி என்றிருக்கும் என் அம்மாவைப் பற்றி… பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் என் அண்ணனைப் பற்றி… 10வது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி…

சந்துரு ரொம்பவும் நல்லவன். அவனுக்கு என்னைப் பற்றிய கவலை நிறைய உண்டு. ஆனால் வெளிக்காட்ட மாட்டான். நாங்கள் சந்திக்கும்போதுகூட நேரமாகிவிட்டால் எனக்கு நினைவுட்டுவான். என் மேல் தன் விரல்நுனிகூட படாமல்தான் பழகுவான். சில சமயம் நானே அவன் என்னை தொடமாட்டானா என்றுகூட வெட்கத்தைவிட்டு ஏங்கியிருக்கிறேன். ஊர்உலகத்தில் இருக்கும் காதலர்கள் போல் ஒரு சினிமா இல்லை! பார்க் இல்லை! இந்த கடற்கரை கூட என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்பதால் தான். நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்து நிறைய பேசியிருக்கிறோம். சந்துருவுக்கு ஆசைகள் அதிகம் இல்லை. ஒரு வீடு வேலைக்குப் போகாத நான். இரண்டு குழந்தைகள். (ஒரே குழந்தை என்றால் மிகவும் பிடிவாதமாக வளரும். இரண்டு குழந்தைகள் என்றால் விட்டுக் கொடுக்கும் மனோபாவம் இருக்கும் என்பான்). காலையில் வேலைக்குப் போய் சாயுங்காலம் வரும் சந்துரு. இரவு தூக்கம் வரும்வரையில் மொட்டைமாடியில் பேச்சு. (ஏதாவது பேசணும். உன்னுடைய உணர்வுகள்… என்னோட கவிதைகள்… குழந்தைகள் வளப்பு… இப்படி எதாவது பேசணும். பேச்சு முக்கியமில்லை. நானும் நீயும் அருகருகே இருக்கணும். நம் மனங்கள் மட்டும் பேசணும். அதுதான் முக்கியம்.)

“என்ன வந்ததிலிருந்து ஏதோ யோசனை?”
“ஒன்றுமில்லை. நம்மைப் பற்றி யோசித்தேன்”
“எப்படி இதெல்லாம் முடியப்போகிறதோ என்றா?”
நான் பேசாமல் தலையாட்டினேன்.
“கவலைப்படாதே. நாம் கவலைப்பட்டு ஏதும் ஆகப்போறதில்லை. அதது நடக்கும்போது நடக்கட்டும்.”
நான் ஏன் லேட்டாக வந்தேன் என்பதை அவன் கேட்காமலே கூறினேன்.
“கடங்கார ஆபீஸர். கிளம்பும் போதுதான் போன வருஷ டீடெய்ல் வேண்டும்னார். அவசரஅவசரமாக எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.”
“சரி விடு. அவருக்கு என்ன ப்ரஷரோ!”

அப்புறம் சந்துரு அவன் படித்த புத்தகத்தைப் பற்றி… வாசித்த கவிதைகளைப் பற்றி… சந்துருக்கு பேச நிறைய விஷயம் இருந்தது. நான் எப்போதும் போல மக்குப் பண்டாரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சந்துரு பேசும்போது அவனை பார்த்துக் கொண்டிருப்பது என்னை பொருத்தவரையில் மிகவும் சுவாரசியமான விஷயம்.
“உனக்கு நேரமாகல்லே?”

மணியைப் பார்த்தேன். நேரமாகிவிட்டது தான்.
“சரி, சந்துரு நான் கிளம்பறேன். புதன் கிழமை பார்க்கிறேன்.” அவனைவிட்டு பிரிவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

திடீரென்று மறுநாள் சந்துருவிடம் இருந்து போன். சந்துரு எப்போதாவது தான் இப்படி போன் பண்ணுவான். கேட்டால் பேசவேண்டும் போல இருந்தது என்பான்.
“என்ன சந்துரு?”
“இன்றைக்கு பர்மிஷன் போட்டுட்டு வரமுடியுமா?
“என்ன சந்துரு என்ன விஷயம்?
“நீ வாயேன். சொல்றேன்.”

வழக்கம்போல நான் போகும் முன்னர் சந்துரு காத்திருந்தான்.
“என்ன சந்துரு என்ன விஷயம்?”
“பிரிட்டிஷ் கௌன்ஸிலில் ரோமன் போலன்ஸ்கி படம். பிரத்தியேக காட்சி. ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்தப் படம். ரொம்ப கஷ்டப் பட்டு அலைந்து திரிந்து இரண்டு டிக்கட் வாங்கினேன். எனக்கு உன்னோட அந்தப் படத்தை பாக்கணும்னு ஆசை. உன்னிடம் இந்த கதையை விளக்கணும். விவாதிக்கணும். டைரக்ஷனைப் பற்றி பேசணும். நான் ரொம்ப எதிர்பார்த்தப் படம்பா. ப்ளீஸ்…”

சந்துரு எப்போதும் இப்படி என்னை கெஞ்சியதில்லை. எதற்காகவும். எப்போதும்.
ஆணால் என்னால் சந்துருவுடன் சினிமா போக முடியாது. போய்விட்டு வீட்டுக்கு லேட்டாகப் போய் எல்லோருக்கும் பதில் சொல்ல என்னால் முடியாது. பத்தாவது படிக்கும் தம்பி கூட என்னை கேள்வி கேட்பான். எங்கள் வீடு ஒரு ஆண்கள் கூடாரம். பெண்களுக்கு என்று தனித்த உணர்வுகள், உரிமைகள் இல்லை.

“இல்லை சந்துரு. என்னால் வர முடியாது.”
சந்துருவின் முகம் வாடிவிட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆணாலும் என்னால் அவனுடன் போக முடியாது. என் மேல் எனக்கே வெறுப்பாக இருந்தது. என்ன செய்ய?

“இந்தப் படம் உன்னுடன் பார்க்க வேண்டும் என்பது என் கனவு தெரியுமா? இங்கிலீஷ் படம் சீக்கிரம் முடிந்துவிடும்.”
“எத்தனை மணிக்கு?”
“ஒன்பதரை மணிக்கு…” என்று சொல்லும் போதே சந்துருவுக்கு நான் வரஇயலாது என்பது புரிந்துவிட்டது.
“சரி, நீ வீட்டுக்கு கிளம்பு.”
“இல்ல சந்துரு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்”
“வேணாம்டா. எனக்கு மனசு சரியில்லைடா. நீ கிளம்பு. உன்னை பஸ் ஏற்றிவிட்டு நானும் கிளம்புகிறேன்.”
எனக்கு என் மீதே எரிச்சல் வந்தது. என்ன ஜென்மம் நான். ஒருவரையும் சந்தோஷப் படுத்தாத சந்தோஷப் படாத ஜென்மம். சந்துரு என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். நான் நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தேன். சந்துருவின் வாடின முகம் என்னை மிகவும் ஹிம்ஸை படுத்தியது. அன்று இரவு நான் தூங்கவில்லை. சந்துரு தனியாகவாவது அந்த சினிமா போயிருப்பானா? என்னையே நான் வெறுத்தேன்.
மறுநாள் புதனகிழமை. காலையில் இருந்தே மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. பார்த்தவுடன் சந்துருவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சாயுங்காலம் எப்போது வரும் என்று மனம் ஏங்கியது. சந்துரு அவனுக்குப் பிடித்த அந்தப் படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவன் சிறிதளவாவது சந்தோஷம் பெற்றால் எனக்கும் சந்தோஷம். மாலையானவுடன் அரக்க பரக்க கடற்கரைக்கு ஓடினேன். எனக்கு முன்னால் சந்துரு வழக்கம் போல வந்து காத்திருந்தான்.

“ஸாரி, சந்துரு” என்றேன் குற்ற மனப்பான்மையுடன்.
“எதுக்கு ஸாரி?”
“நேற்று என்னால் வரமுடியாததற்கு. அந்த படம் எப்படி இருந்தது?”
“நான் போகலைடா. தனியா படம் பாக்கத் தோணலை.”
“ரொம்ப நாளா காத்திருந்த படம்னு சொன்னியே சந்துரு” எனக்குள் அழுகை வெடித்தது.
“இல்லடா தனியா அந்தப் படம் பார்க்கத் தோணலை” என்றான் என்னை இதமாய் பாத்துக்கொண்டு.
எனக்குள் குற்ற மனப்பான்மை குறுகுறுத்தது.

திடீரென முடிவெடுத்தேன். நான் இனிமேல் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன ஆனாலும் சரி. நான் என் சந்துருவுக்காகவே வாழப் போகிறேன்.
“இனிமேல் இது போல படம் பாக்கணும்னா சொல்லு சந்துரு. நான் வரேன். இரவு காட்சியானாலும் சரி”

***


மறுவினைகள்

 1. கலக்கறன்னு சந்துருன்னு சொல்ல முடியாது . நல்லா இருக்கு சந்துருன்னு சொல்லலாம்.

  //என் சம்பளத்தை நம்பியிருக்கும் … 10வது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் என் தம்பியைப் பற்றி//

  இந்த K. பாலசந்தர் டைப் குடும்பம் தவிர்த்திர்க்கலாம்.

 2. நன்றி திரு ரவி. ஏதோ எழுதுகிறேன். முடிந்தால் garment factory பக்கம் போய் பார்க்கவும். இது போல k. பாலசந்தர் டைப் குடும்பக்கதைகளை நிறைய கேட்கலாம். இது போல உங்கள் comments மிகவும் வரவேற்கிறேன்.

 3. சந்துரு,

  சுஜாதாவை ஒரு தடவை நேரில் சந்த்தித்து ஒரு கதையை
  கொடுத்து படிக்க செய்தேன். “”இது டெண்டர் நோட்டீஸ். கதை பேப்பர் எங்கே” என்றார் .

  காஞ்சு கயிராகி coir board சேர்மேன் ஆனேன்.

  நான் முடிந்தவரை கடைப்பிடிப்பது:

  குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் . முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில். சின்னதாக்கி ஒரு சிறிய விசில் .பிறகு இறக்கிவிட வேண்டும்.

  எடுப்பு,தொடுப்பு,முடிப்பு வேண்டும்..

  எடுப்பில் கதா பாத்திரம் அறிமுகம் ,

  தொடுப்பில் ஒரு முடிச்சு/முரண்பாடு/பிரச்சனை ,

  கடைசியாக முடிப்பில் முடிச்சு/முரண்பாடு/பிரச்சனை அவிழ்ப்பது.

  எடுப்பு,தொடுப்பு, முடிப்பு வந்து கதை கச்சிதமாக இருக்கும்.

  எப்படி எழுதினாலும் மேல் உள்ள SOP வந்துவிடும்.

  கதையில் நான் தவிர்ப்பது. மிகை ,பிரச்சாரம், அசட்டுத்தனம் ,ஓவர் மெலோடிராமா

  சுஜாதா சொன்னது:-

  ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை. நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு தரப்படவேண்டும் .இதில்தான் பல சிறு கதைகளின் தரம் போய் விடுகிறது .

  நல்ல சிறுகதையில் பிரச்சாரம் போதனை கிடையாது. நம் வாழ்கையில் நல்லவை கெட்டவைகள் இரண்டும் கலந்து உள்ளது. ஆதாரமாகவே மனித மன அமைப்பில் முரண்பாடு இருக்கின்றது.

  வாசகன் ஒரு நல்ல சிறு கதையில் ஒன்றும் போது அவன் தன் மனத்தின் ஆதாரமான முரண்பாடுகளிலேயே மறுபடி வாழ்கிறான்..எல்லோரிடமும் ஆபாசங்களும் உன்னதங்களும் கலந்தே உள்ளது

  நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு தரப்பட வேண்டும். ”இதோ பார் வாழ்வின் அபத்தம் ” இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” கதைக்கு உள்ளே வந்து “மைக்” பிடித்தால். கதை Documentary ஆகி விடும்.”

  வாசகனே உணர வேண்டும்.

  ___________________________

  தலைவா! நா நாலு கதை எழுதி விட்டேன். நீங்க வந்து ஏதாவது சொன்னாதான் திருத்திக்க முடியும். வாங்க!

  Please comment on “Sujatha”s paragraph

 4. கதை தொடர் கதையோ என நினைக்க வைத்தது.

  ரவிஷங்கர்…..ஒரு பதிவுக்கான விஷயத்தை இப்படிப் பின்னூட்டத்தில் போட்டிருக்கிறீர்கள்?
  அன்புடன் அருணா

 5. //தலைவா! நா நாலு கதை எழுதி விட்டேன். நீங்க வந்து ஏதாவது சொன்னாதான் திருத்திக்க முடியும். வாங்க!//

  இதில் ஏதும் உள்குத்து இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

  //Please comment on “Sujatha”s paragraph//

  கதை பற்றிய என்னுடைய கருத்து என்னவென்றால் it should be a good reporting. அவ்வளவுதான். இதில் எழுதுபவனுக்கு தீர்மானிக்கும் உரிமை கிடையாது. report செய்தவுடன் எழுத்தாளனுடைய வேலை முடிந்தது. கதையயின் வெற்றியை தீர்மானிமானிப்பது நீங்கள் report செய்த விதத்தை பொருத்தது. இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

  //நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு தரப்பட வேண்டும்.//

  100% ஒத்துக்கொள்கிறேன்.

  தங்களுடைய தகவல்களுக்கு என்னுடைய நன்றி!

 6. This short story captures beautifully the dilemma faced by a middle class
  othrodox girl who is forced to live life for others.

  Her promise to see the movie may last till he invites her again to see a movie. Invariably she will again give a promise to see the next movie.
  This scenario continues….

  My humble request to Ravishankar,

  Kindly refrain from giving a brief on how to write a story in another blog.
  You can post a detailed brief in your blog. Comments in any blog must be related to the concerned posting.

  A.Hari

  Hari

 7. வருகைக்கு நன்றி திரு ஹரி. தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: