chandarsekar எழுதியவை | திசெம்பர் 11, 2008

விறகு

“காலம்பர ஒருக்கா.. மதியம் ஒருக்கா அட்டனென்ஸ்ல கையெழுத்த சுத்தனமுனா முடிஞ்சது சோலி. அப்புறம் கேக்கறத்துக்கு நாதியில்ல. சென்ட்ரல் இல்ல மூர்மாக்கட்ட காலம்பர சுத்திட்டு வந்து சாப்டுட்டு பர்மா பஜார் பாரீஸ்கார்னரை சாயந்தரம்னு சுத்திட்டு வந்தோம்னா பையை தூக்கிட்டு கிளம்பிறவேண்டியது தான். சமயத்துல போன் பில்லு, கரண்டு பில்லு கட்றதுனு, பேங்க் போறதுன்னு ஏதுனா சொந்த வேலை இருக்கும் அதை முடிச்சுக்க வேண்டியது. கறிகாய் வாங்கறது துணிமணி எடுக்கறதுனு எல்லாம் நேரத்தோட முடிச்சி வைச்சிகினும்னா சாயந்தரம் 5க்கு ‘டாண்’ணு கிளம்ப சௌகர்யமா இருக்கும். பசங்க இந்த பேப்பரை பாத்துக்குடு அந்த பேப்பரை எழுதிக்கொடுன்னு ஃபைலை நீட்னா மாட்டிக்கிட கூடாது. அதுக்கு வெவரமான பசங்க இருக்காங்க. அவுங்ககிட்ட தள்ளி உட்டுடனும். மாட்டிக்கிட்டோம் அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு நீண்டுகிட்டே போயிடும். சாக்கிரதையா இருக்கணும். அதுக்குத்தான் முதல்லே பேப்பரை கொண்டுவரச்சேயே ‘அதா கிஸ்டன் பாக்கரான்னு நினைக்கேன்.. என்னா அவருது இல்லையாம்மா அப்போ ராமனை கேட்டுபாத்தியா’ன்னு சுத்தல்ல வுட்டோம்னா நாம்ப ஊரைச்சுத்த நேரம் கிடைக்கும் இல்ல அவ்வளவுதான் ஃபைலைத்தான் சுத்திசுத்தி வரணும். வாரத்துல அஞ்சி நாள் இப்படி அப்படி சோலி. சனி ஞாயிறு லீவு. எப்பனா ‘டர்ன்னு டூட்டி’ன்னு எழவெடுப்பானுக. ஒரு ரெண்டு மணிநேரம் இருந்துட்டு கடைய கட்டிட வேண்டியதுதான். ஆனா தவறாம ஒரு சிஆர் க்ளெய்ம் பண்ணிடணும்”.
நான் இந்த அலுவலகத்தில் புதிதாக அலுவலக உதவியாளனாக சேர்ந்தபோது சந்துரு சாரிடம் வேலை கற்றுக்கொள்ள பணித்தார்கள். சந்துரு சாருக்கு முப்பது வருட சர்வீஸ். அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது தான் முதல் பாராவில். ஓன்று மட்டும் புரிந்தது. வேலை கிடைப்பதுதான் கடினம் பார்ப்பது அல்ல என்பது. சந்துரு சார் சொன்னது ஏதும் புரியாமல் மலைப்பாக இருந்தாலும் ஒன்று மட்டும் புரிந்தது. இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் செத்தான்.
“என்னா பாக்குற இந்த நாலு ஃபைலை எடுத்து உன் டேபிள்ள வைச்சுக்கோ. டேபிள் வெத்தா இருக்கக் கூடாது.”
“என்ன ஃபைல் சார்் இது? நான் என்ன பண்ணனும்?” என்றேன்.
“யாருக்குத் தெர்ியும். ரொம்ப நாளா என் டேபிள்ள இருந்தது. பாத்தியா இதுக்குத்தான் புதுசா வர பசங்களுக்கு வேலை சொல்லி தரதில்லை” என்று சத்தமாக சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டார்.
நான் ஆவல் மிகுதியால் ஒரு ஃபைலின் நாடாவை பிரித்ததுதான் தாமதம் கிளம்பிய தூசியில் அடுக்கடுக்காக தும்பல்கள். என் வரிசை ஓரமாக கண்களை மூடிக்கொண்டு இருந்த ஒருவர் என்னை எரிச்சலுடன் பார்த்தவுடன் ஃபைலை மூடி வைத்துவிட்டேன். மணி 10 ஆகிவிட்டிருந்தது. சாயந்தரம் 5 வரை எப்படி நேரத்தைக் கடத்த போகிறோம் என்று கவலையாகக் கூட இருந்தது. என்ன செய்வதென அறியாமல் பையில் வைத்திருந்த குமுதம் இதழை மேஜைக்கு அடியில் மறைத்து வைத்து குற்ற உணர்வு குறுகுறுக்க மனம் லயிக்காமல் படிக்க ஆரம்பித்தேன். அவ்வபோது திருட்டுத்தனமாய் யாரும் என்னை கவனிக்கிறாகளா என்று வேறு பார்த்துக் கொண்டேன். யாரும் என்னை சட்டைசெய்யவில்லை. ஒரு வழியாக நான் அந்த குமுதம் இதழை படித்து முடிக்கவும் சந்துரு சார் வரவும் மணி சரியாக ஒன்று பத்தாகியிருந்தது. அதுவரையில் காலியாக இருந்த அலுவலக அறை உணவு இடைவேளையின் போது மட்டும் நிரம்பியது எனக்கு வினோதமாக இருந்தது. சந்துரு சார் என்னை அவர் இருக்கைக்கு கூப்பிட்டார். சந்துரு சாருடன் ஒருவர் இருந்தார் சின்னவயது SPB போல.
“சார் பேரு. சங்கர் நல்லா பாட்டு படிப்பார். TMS படிக்கறது போலவே இருக்கும். ஒருக்கா TMS தான் படிச்ச பாட்டைத்தான் ரேடியோவுல போடறான்னு நினைச்சாருன்னா பாத்துக்கோயேன். என்னா ஒன்னுஅவர் TMS ன்னா இவரு OMS” நான் விழிப்பதைப் பாத்துவிட்டு அதான்பா old Monk என்றார்.
அந்த மதிய இடைவேளைக்குள் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தினார் சந்துரு சார். அடிக்கடி இரத்ததானம் கொடுக்கும் சிவமணி, கவிதைகள் எழுதும் கோவை கவிக்கோ, துக்ககதைகளாக எழுதி அனைவரையும் கண்ணீர் கடலில் தள்ளும் ஞானசெல்வம், கதையா அல்லது கட்டுரையா என்பது யாருக்கும் புரியாமல், ஏன் அவருக்கே புரியாமல் எழுதும் அருமைராஜ், தான் எழுதுவது தான் கதை மற்றவகளுக்குகெல்லாம் உதை என்று நினைக்கும் சுந்தர், தான் எழுதியதை அனைவரும் படித்தே ஆகவேண்டும் என்று கடுப்படிக்கும் உமா, இந்தக் காலத்தில் கூட பாட்டிக்கதை எழுதும் முனிரா என்கிற முனிர்… நான் அசந்தே போனேன். இத்தனை அசமஞ்சமான அலுவலகத்தில் இவ்வளவு திறமையா! அன்று முழவதும் எனக்கு பிரமிப்பாகவே இருந்தது. ‘இத்தனை திறமை வீணாகப் போய்க்கொண்டிருக்கிறதா’ என்று மீண்டும் மீண்டும் எனக்குள் மறுகிப்போணேன்.
மறுநாள் முதல்வேலையாக அலுவலகம் வந்ததும் வராததுமாக சந்துரு சாரிடம் போணேன்.
“சார், எனக்கு ஒரு சின்ன யோசனை” என்று இழுத்தேன்.
“என்ன?” என்றார் வெற்றிலையை மடித்து வாயில் திணித்தபடி. “ஷீக்ரம் ஷொள்ளு நா வெழிய போவணும்” என்றார் வெற்றிலை எச்சிலை வழியவிட்டபடி.
“சார் நேற்று எனக்கு அறிமுகப்படுத்திய அத்தனை பேரும் ஏதாவது ஒருவிதத்தில் திறமைசாலிகளாக இருக்கிறாகள். ஆனால் அவகள் திறமையெல்லாம் வீணாகப் போகிறது” என்றேன் ஏக்கத்துடன்.
சந்துரு சார் பார்த்த பார்வையில் இவன் என்ன சொல்ல வருகிறான் என்ற ஆர்வம் தெரிந்தது. நான் மேலும் தொடர்ந்தேன். “ஆகையால் ஒரு கையெழுத்துப் பிரத்ி ஆரம்பித்து எல்லோருடைய படைப்பையும் அடக்கி நம் அலுவலகத்தில் சுற்று விடலாம்” என்று முடித்தேன்.
சந்துரு சாருக்கு கொஞ்சம் ஸ்வாரஸ்யம் ஏற்பட்டது அவர் முகத்தில் தெரிந்தது. அவசரமாகச் சென்று வெளியே எச்சிலை துப்பிவிட்டு வந்து, “என்ன சொன்ன சொல்லு சொல்லு” என்றார். அவருடைய உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. “சார், நீங்க தான் இந்த பத்திரிகைக்கு ஆசிரியர்.” என்றதும் ஏக குஷி ஆகிவிட்டார். “எல்லோரையும் வரச்சொல்றேன் மதியம் நாம் இதுபற்றி விளக்கமாகப் பேசலாம்” என்று போய்விட்டார்.
எனக்கு மனதுக்குள் மிகவும் உற்சாகமாக இருந்தது. பத்திரிக்கையை எப்படியெப்படி வடிவமைக்கலாம் என்னென்ன விதமாக வெளியிடலாம் என்று மனதுக்குள் உருவகப்படுத்திக் கொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாட்டு தட்டு, டிபன்பாக்ஸ் சத்தம் கேட்டதும் தான் மதிய உணவு இடைவேளையானதை உணந்தேன். நான் சாப்பிட்டுவிட்டு என் இருக்கைக்குத் திரும்பும்போது என்னுடைய இருக்கையைச் சுற்றி அநேகர் அமர்ந்திருந்தது எனக்கு ஆச்சாியமாக இருந்தது. திடீரென எனக்கு ஒரு ‘கதாநாயக அந்தஸ்து’ ஏற்பட்டதாக உணந்தேன். சத்தியமாக இந்த உற்சாகத்தை இத்தனை போிடம் நான் எதிர்பார்க்கவில்லை. “முதலில் நாம் நம்முடைய பத்திரிகைக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பெயாிலேயே தீ பறக்க வேண்டும்” என்றேன்.
சற்றும் தாமதிக்காமல் பெட்ரோல் என்றார் அருமைராஜ். அவரைத்தொடந்து ATFவில் ஆரம்பித்து napthaவரை எல்லோரும் சொல்ல முற்பட நான் அவசரமாய் தலையிட்டேன். “நான் சொன்னது ஜ்வாலை… பெயர் சொல்லும்போதே மண்டையில் பொடேர் என்று தாக்குவது போல இருக்கவேண்டும்” எப்படி சொல்வது என்று எனக்கே புரியவில்லை.
மீண்டும் அருமைராஜ் ‘விறகு’ என்றார். எனக்கு அந்த தலைப்பு சாியானதாகவும் அதே நேரத்தில் குழப்பமாகவும் இருந்தது. அதற்குள் உமா, “ஹா.. ஹா. தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு ஒவ்வொரு இதழுக்கும் நாம கட்டு 1 சுள்ளி 1..2..3.. ன்னு போட்டுக்கலாம்” என்றவுடன் அனைவரும் ஒருமித்து ஆமோதிக்கவே என்னால் எதுவும் சொல்ல இயலாமல் போய்விட்டது. ஆக பத்திரிகை தலைப்பு ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவுடன் மற்றபடி உள்ளே என்னென்ன எழுதுவது என்று தீமானிக்கக் கோரினேன்.
“ஒரு நாளைஞ்சி கதையை போட்டுக்கலாம். கோவை கவிக்கோ கிட்ட சொன்னா சும்மா கவிதையை வரைஞ்சி தள்ளிடமாட்டாரு? அதை போட்டுக்கலாம். நாமகிரி என். சுரேஷ்னு ஒருத்தர் பக்கத்து செக்க்ஷன்ல இருக்கார். அந்தகாலத்துல விகடன் குமுத்துல வந்த ஜோக்கெல்லாம் நிறைய சேர்த்து வைச்சிருக்கார். அத அங்கங்க அவரோட சொந்த ஜோக்குன்னு போட்டுக்கலாம்” என்றார் ஞானசெல்வம்.
“ஒரு முப்பது பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றேன் நான். “இதெல்லாம் செஞ்சியும் பக்கத்துல இடம் இருந்தா என்ன பண்றது?”
“அதனால என்ன இப்ப. சின்ன சின்ன சந்துல படித்ததில் பிடித்தது அப்படி ஏதுனா போட்டுக்கலாம்” – இது உமா.
“படிச்சதுல புடிச்சது புடிச்சதுல இடிச்சது ன்னு என்னென்னவோ சொல்றீங்களே அப்படினா என்னபா?” என்றார் சந்துருசார். “அப்படினா நீங்க நிறைய படிக்கிறீங்க…” என்று சொல்ல முற்பட்டவனை இடைமறித்து, “இல்லையே நான் ஏதும் படிக்கறதில்லையே” என்றார் சந்துரு சார். “இல்ல சார் ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம். அப்படி நீங்க படிச்சதுல ஏதுனா புடிச்ச விஷயம் இருந்தா அதை போட்டு இடத்தை ரொப்பிடுவோம். உங்களுக்குப் புடிச்சதுனா எல்லோருக்கும் புடிக்கணும் புடிச்சி ஆவணும்” என்றேன்.
சந்துரு சாருக்கு உற்சாகம் பிறந்தது. “நான் சின்ன வயசுல கல்கியோட சிவகாமியின் சபதம் படிச்சேன் அதை போட்டுக்கலாமா” என எனக்கு தூக்கிவாரி போட்டது.
“சார் நீங்க என்னதான் எடிட்டராக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகத் தொியல? சிவகாமின் சபதம் நாலு வால்யூம் சார்” என்றேன் பதறிப் போய்.
“ஏதோ அரை பக்கம்னா பரவாயில்லை. ஒரு பக்கமே கொஞ்சம் அதிகம்”
“நான் படிச்சதுல புடிச்சது அதுதான்பா” என்றார் சந்துருசார் நிராகரிக்கப்பட்டதில் சோகமாக.
“இதெல்லாம் சார். இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஓடும்? அடுத்த இதழுக்கு கதை கவிதை கட்டுரைக்கு என்ன பண்றது?” என்றார் அருமைராஜ் உண்மையான காசனத்துடன்.
“இதென்ன பொிய விஷயம். ஒரு கதை போட்டி வெச்சிடலாம். நிறைய பேர் கதை எழுதுவாங்க. நாளைஞ்சி இதழுக்கு போட்டு ஒப்பேத்திடலாம்” என்றேன் நான். இது எல்லோருக்கும் நல்ல யோசனையாக பட்டது போலும். “என்ன தலைப்பு கொடுக்கலாம்?” என்றேன் மேலும்.
“கணிதம்-னு வெச்சுக்கலாம்” என்றார் சிவமணி.
எனக்கு ஏதும் புரியாமல் “அப்படினா?” என்றேன்
“டெய்லி பக்கத்து ஸெக்ஷன்ல ஒரு பொண்ணை கணக்குப் பண்றாரே அதை சொல்றார்” என்றார் சந்துரு சார்.
“அட நீங்க சும்மா இருங்க சார். தினம் தினம் ஆபீஸர் வீட்டுக்கு கறிகாய் வாங்கிட்டுப் போய் கணக்கு பண்ணுவாரே அதைச் சொல்றா போல” என்றார் இன்னொருவர். சிவமணி ஒரு எரிச்சலான பார்வை பார்த்துவிட்டு மௌனமானார்.
“கணிதம்-னு ஒரு தலைப்பா?” என்று நான் மீண்டும் இழுத்தேன். “இருந்தாலும் தலைப்பு நல்லா இருக்கிறாமாதித்தான் இருக்கு…” என்று முடிக்கும் முன்னர், உமா “நான் ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்” என்றார். “கதை பேரு ஆறாம் பிரிவு”
“என்னது ஆறாம் பிரிவா? கதையைச் சொல்லுங்களேன்” என்றேன் ஆவலுடன்.
“ஒரு விதவை அம்மா. அவங்களுக்கு ஆறாம் வகுப்பு வரை படித்து பள்ளியை தொலைத்த மகன். அம்மாவிடம் ஒருநாள் மசால்தோசை சாப்பிட வேண்டும் என்று சொல்கிறான். விதவை தாய்க்கு மனது கஷ்டமாக இருக்கிறது. மகனுக்கு சொல்கிறார் நாளைக்கு தான் வீட்டுவேலை பார்க்கும் எஜமானியின் கணவர் ஒரு ஓட்டல் திறக்கிறார். அங்கு எல்லாம் கிடைக்கும். என்கிறார்.
“அம்மா இட்லி கிடைக்குமா?”
“கிடைக்கும் ராஜா”
“தோசை?”
“ம்..ம்..”
“பூரி?”
“உண்டு..உண்டு..”
“வடை…பொங்கல் எல்லாம் கிடைக்கும் நான் கேட்டு வாங்கித் தரேன் என்று சொல்கிறார் அந்த விதவைத் தாய். அப்போது வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது. யாரென்று பார்த்தால் ஓட்டல் திறக்கப்போகும் எஜமானியின் கணவர். அந்த விதவைத்தாய் பதைபதைத்துப்போய் ‘வாங்க எஜமான் வாங்க. எங்கே இவ்வளவு தூரம். நீங்கள் அழைத்திருந்தால் நானே ஓடோடி வந்திருப்பேனே’ என்கிறார். ‘நாளைக்கு திறப்புவிழா நடக்கிற நம்ப ஓட்டலை கழுவித் தள்ளணும் அதுக்காக உங்களை கூப்பிட வந்தேன். வந்தபோது உங்க பையன் ஓட்டல் பலகார பேரையெல்லாம் வாிசையா சொல்றதை கேட்டேன். அதனால அவனை நம்ப ஓட்டலிலேயே சர்வரா சேத்துகலாம்னு முடிவு செஞ்சிட்டேன்’ அப்படின்றார்” என்று சொல்லிவிட்டு, “கதை எப்படி இருக்கு?” என்றார் உமா.
“அது சாி. இதுல கணிதம் எங்க வந்தது? அதென்ன ஆறாம் பிரிவு?” என்று கேள்விகளை அடுக்கினேன்.
“அந்த பையன் ஆறாம் வகுப்புவரை படித்தவன்னு தான் முதல்லேயே சொன்னேனே அவன் படித்த ஆறாம் வகுப்பில் கணிதம் ஒரு பாடம்” என்றார் உமா கேள்வி கேட்ட என்னை எரிச்சலுடன் பார்த்தபடி.
“கதை நல்லாஇருக்கு உமா. உங்களுக்குத் தான் முதல் பாிசு” என்றார் சந்துரு சார்.
“என்ன சந்துரு சார் போட்டின்னா நிறைய கதையை படிச்சி தேர்ந்தெடுத்து தானே ஒரு கதைக்கு பாிசு குடுக்கணும். ஒரே கதையை கேட்டுட்டு எப்படி பாிசு கொடுக்கலாம்?” என்றேன் நான்
அப்படி கேட்டவுடன் சந்துரு சாருக்கு கோபம் வந்துவிட்டது.
“கதை கட்டுரை பத்தின ஞானம் எல்லாம் எனக்கு இருக்கு. எனக்கு நீ சொல்லித் தராதே. நான் சுஜாதா கதையெல்லாம் படிச்சவுடன் சொல்லிடுவேனாக்கும்” என்றார். ‘எக்கேடு கெட்டுப் போங்கள்’ என்று விட்டுவிட்டேன்.
உமாவுக்கு முதல் பரிசு என்றதும் முனிர், “நான்கூட நல்லா கதை எழுதுவேன். என்னோட கதையை கேட்கறீங்களா?”
“சாி”. என்றார் சந்துரு சாருக்கு அனைவரும் அவாடம் கதை சொல்லவே ஏக குஷியாகிவிட்டது.
“சொல்லுங்க..சொல்லுங்க. உங்களுக்குத்தான் இரண்டாம் பாிசு” என்றார் கதையை கேட்காமலேயே. எனக்கு மேலும் துணுக்குற்றது. பேசாமல் வேடிக்கை பார்க்கலானேன். முனீரா கதை சொல்ல ஆரம்பித்தார். “ஒரு கூலி வேல செய்யற அம்மா சார். அன்னிக்கு கூலி அம்பது ரூபா கிடைக்கிது. அப்போ வரும்போது சிக்கன் சாப்ஸ் தயார்னு ஒரு போர்ட் பாக்கராங்க. ஒரு சாப்ஸ் வாங்கினா ஒரு சாப்ஸ் இனாம்னு எழுதியிருக்கு. அம்பது ரூபா கொடுத்து ஒரு சிக்கன் சாப்ஸ் சாப்டுட்டு இன்னொன்னு பார்ஸல் கட்டிகினு வீட்டுக்கு வந்து பாத்தா வூட்ல பொண்ணு சிக்கன் பாக்ஸ் வந்து படுத்துக்குனு இருக்கா. அடக்கமுடியாத அழுகையோடு இந்த சிக்கன் சாப்ஸையும் அந்த அம்மாவே சாப்டுராங்க” என்று சொல்லிவிட்டு “எப்படிசார் என் கதை” என்றார் சந்துரு சாரைப் பார்த்து.
சந்துரு சார் “கதை நல்லா இருக்குமா. ஆனா சிக்கன் சாப்ஸ் க்கு பதில் மட்டன் கபாப்னு போட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்றார் நாக்கு சப்பு கொட்டியபடி.
“நான் ஏன் சிக்கன் சாப்ஸ்னு போட்டேனா சிக்கன் சாப்ஸ் கேட்ட பொண்ணுக்கு சிக்கன் பாக்ஸ் வந்த கொடுமையை இந்த உலகத்துக்குச் சொல்லனும்னு தான்” என்றார் முனீரா விஸ்தாரமாக. “நான் சிக்கன் சாப்ஸ்ஸின் அருமையும் சிக்கன் பாக்ஸ்ஸின் கொடுமையும்னு இலக்கிய மன்றத்துல கூட பேசி இரண்டாம் பாிசு வாங்கியிருக்கேன் சார்” என்றார்.
“ஏம்மா இரண்டாம் பாிசு?”
“அதுல கலந்துக்கிட்டவங்களே இரண்டு பேர் தான் சார்”
நான் யாருக்கும் தொியாமல் தலையில் அடித்துக் கொண்டேன். “சாி.. சாி.. யாரெல்லாம் கதை எழுதரீங்களோ சீக்கிரம் எழுதி கொடுங்க. நானும் முதல் பக்கம் ‘துவாரம்’னு எழுதனும்” என்றேன்.
“என்னது ‘துவாரம்’னு நீங்க எழுதாங்களா? அதென்னது தலையங்கமா?” என்றார் சந்துருசார்.
“தலையங்கம்னு சொல்லலாம். அப்பப்ப நடக்கற நடப்பை பத்தி சுனாமி கும்பகோணம் மஹாமகம் அப்படீனு எதாச்சும்” என்றேன்.
“தலையங்கம் எல்லாம் நான்தானே எழுதனும்? நான் தானே எடிட்ட? இதெல்லாம் சாிவராது. நீங்களே பத்திகை நடத்துங்கோ” என்று சொல்லியபடி வெற்றிலைபாக்கு பெட்டியுடன் கிளம்பிவிட்டார் சந்துரு சார்.
நான் சற்றும் மனம் தளரவில்லை. என்னை சுற்றி இருப்பவகளுக்கும் சந்துரு சார் போனது பொிய இழப்பாகத் தொியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் கதை வெளியாகும் ஆர்வம். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக கதை கட்டுரை கவிதை என்று எழுதி குவித்து விட்டார்கள். அவற்றை தொகுத்து முதல் இதழை படப்பிரதி செய்த போது மிகவும் மலைப்பாக இருந்தது. எல்லோரும் “விறகு எப்போது சார் ரீலீஸ்” என்று கேட்டது மிகவும் உன்னதமாக இருந்தது. அட்டைப் படத்தை வடிவமைத்தேன். “கட்டு 1 சுள்ளி 1” என்று எழுதியபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. படப்பிரதி செய்து வந்ததும் முதல் பிரதியை சந்துரு சாருக்குத்தான் கொடுத்தேன். வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டவர் முதல் பக்கத்தில் ஆலோசகர்: சந்துரு சார் என்று எழுதியிருந்ததை பார்த்து மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். பத்திரிகையை புரட்டிப் பாத்தவர் “நல்லா வந்திருக்குப்பா” என்று மனம் திறந்து பாராட்டியது மனதுக்கு நிறைவாக இருந்தது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: