சாதல் என்பது பிறர்க்குறியதாதலால்
அன்பே வா! காதல் செய்வோம்!!
அன்புள்ள அம்மா அப்பாவுக்கு,
பரிதாபத்துக்குரிய உங்கள் மகள் எழுதிக் கொள்வது. இந்த உலகத்தில் காதலிப்பது என்பது ஏழேழு ஜன்மத்துக்கும் பாவம் என்பது தெரியாமல் காதலித்த பாவத்திற்காக உயிரைவிட தீர்மானித்து விட்டேன். உலகத்தில் உள்ள எல்லா பெற்றோர்களைப் போல கௌரவத்தையும் இறந்து விட்ட பின் என் உடலையும் கட்டிக் கொண்டு அழுங்கள். நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் பொறுப்பல்ல.
பரிதாபத்துக்குறிய அபலை.
“இது போதுமா ஆனந்த். வேற எதுனா எழுதணுமா?”
“போதும் கவிதா. கையெழுத்துப் போட்டுக் கொடு. போஸ்ட் பண்ணலாம்.”
இதேபோல ஆனந்தும் எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினான். ஏறத்தாழ இதே போல அவன் பெற்றோருக்கு. கவிதாவுக்கு திடீரென்று வேர்த்தது. ஆனந்தையே வெறிக்கப் பார்த்தாள். அவனிடம் சாகப்போகிற பயமே ஏதும் இல்லை. அனைத்துக்கும் துணிந்தவன் போல முற்றும் துறந்த முனிவன் போல ஏதொரு பதட்டமும் இல்லாமல்.
*******
“நாம எப்போ கல்யாணம் செஞ்சிக்கப்போறோம் ஆனந்த்?”
“நாம கொஞ்சம் different இல்லையா அதனால..”
“அதனால?”
“நாம குழந்தை பிறந்தபிறகு கல்யாணம் பண்ணிக்கிலாம்னு..அதனால..”
“அதனால?”
“அதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பிக்கலாமா?”
சற்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சற்று லேட்டாக புரிந்துக் கொண்டு
“செருப்பு பிஞ்சிடும்” என்றாள் செல்லக் கோபத்தோடு.
“அதுக்குத்தான் படுக்கையில் செருப்பு போடக்கூடாது” என்றான் விடாமல்.
******
“என்ன கவிதா பயமாக இருக்குதா?”
“நாம தற்கொலை செய்துக் கொள்ளத்தான் வேண்டுமா ஆனந்த்? உயிரோட போராடி பார்த்தால் என்ன?”
“பைத்தியம் போல உளராத கவிதா. உன்னை விடு. நாம காதலித்தப் பாவத்துக்காக உன்னோட குடும்பம் நாசமா போகணுமா? என்னோட அப்பாவைப் பத்தி உன்கிட்ட எவ்வளவு சொல்லியிருக்கேன். பணம் பத்தும் செய்யும் கவிதா. கொலைகூட. உங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிடுவார் என் அப்பா. உனக்கு அவருடைய வேரொரு முகத்தை பற்றித் தெரியாது. இவ்வளவு நேரம் இதெல்லாம் பேசிதானே இந்த முடிவுக்கு வந்தோம். சரி விடு. உனக்கு பிடிக்கலைனா வேணாம். ஆனா நாம இந்த ஜன்மத்துலே ஒன்னு சேறது முடியாத விஷயம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறது முடியாததுனால சேர்ந்து சாக முடிவெடுத்தோம். இப்போ நான் மட்டும் தான் தனியா சாகணும் போல…”
“இல்ல ஆனந்த். நானும் நீயும் சேந்து சாகலாம். வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதபோது சாகும்போதாவது நம்மோட காதலின் அர்த்தம் புரியட்டும்.”
*****
“நம்ப கல்யாணம் ரொம்ப simpleஆ இருக்கணும் ஆனந்த். just a register marriage and a reception”
“ஏன் பிரம்மாண்டமான கல்யாணம்னா வேணாமா?”
“வேணும்தான். ஆனா எங்க வீட்டையும் உங்க வீட்டையும் நினைச்சாதான் பயமா இருக்கு!”
“அதெல்லாம் கவலைப்படாதே. ஒரு குழந்தையோட போய் நின்னா எல்லாம் சாியாப் போகும்!”
“உன்கிட்ட எனக்கு பிடிக்காததே அதுதான். உன்கிட்ட எதுபத்தி பேசினாலும் – குழந்தை பிறக்கறதுலே தான் போய் முடியும்”
“உன்கிட்ட எனக்கு பிடித்ததே அதுதான்” என்றான் ஆனந்த்.
*****
“சரி வா! சாகலாம்!!”
“எங்கே?”
“முட்டுக்காடு பக்கத்தில் ஒரு பாலம் இருக்கு. அடியில் கடல் தண்ணீர். ஒரு பத்தாள் ஆழம் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு ஈ காக்கா இருக்காது”
“ஈ காக்கா எல்லாம் தான் நாம செத்துட்டப்புறம் வருமே” என்றாள் சோகமாக.
“அது சரி உனக்கு நீச்சல் தெரியுமா?” என்றான் ஆனந்த் திடீரென.
“உங்களுக்கு?”
“நீச்சல்னு எழுதினா படிக்கத் தெரியும்”
“உங்களுக்கே தெரியாது. எனக்கு எப்படித் தெரியும்?”
“சரிதான். city girl. சென்னை ரோடுல மழைகாலத்துல நீச்சல் அடித்தால் தான் உண்டு”
ஆனந்த் அவனுடைய கடிதத்தை ஒரு கவரில் வைத்து ஒட்டி அவனுடைய வீட்டு விலாசம் எழுதினான். அவளும் அஃதே. அங்கே பக்கத்தில் ஒரு தபால் பெட்டி இருந்தது. ‘அடுத்த தபால் எடுக்கும் நேரம் காலை 8 மணி’ என்று இருட்டில் கஷ்டப்பட்டு படித்தான் ஆனந்த். இரவு மணி 10 ஆகிவிட்டிருந்தது. வீதியில் இரெண்டொருவர். இவர்களை யாரும் சட்டை செய்யவில்லை.
“இன்னமும் 10 மணி நேரம் கழித்துத் தான் நம்முடைய விதி எல்லோருக்கும் தெரியும். கவிதா இந்த கடிதங்களை நீயே தபால் பெட்டியில் போட்டுவிடு” என்று இரண்டு கடிதங்களையும் கவிதாவிடம் கொடுத்தான் ஆனந்த்.
*****
“நம்ப கல்யாணப் பத்திக்கை ரொம்ப grandஆ இருக்கணும் ஆனந்த்”
“கல்யாண பத்திகையில் எதுக்கு grand?”
“என்னோட friends எல்லாம் invitationஐ பாத்து அசந்துடணும்
“அவங்க அசந்து போறத்துக்கு வேற விஷயம் வைச்சுருக்கேன்”
“என்னது?” என்றவள் சற்று நேரம் கழித்து புரிந்தவுடன் “சீ!” என்றாள்.
*****
கவிதாவுக்கு மனம் கனத்தது. அவளால் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுகையாக வந்தது. சுரிதார் துப்பட்டாவில் கண்களை துடைத்துக் கொண்டாள். கையை தபால் பெட்டிக்குள் நுழைத்து அப்படியே சற்று நேரம் நின்றுக் கொண்டிருந்தாள்.
“என்ன கடிதங்களை போட்டுவிட்டாயா?”
துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டு தன்னுடைய கைகளை விரித்துக் காட்டினாள்.
“ஆச்சு! எல்லாம் ஆச்சு” என்றாள் சற்று அழுகுரலுடன்.
ஆனந்துடன் மோட்டார்பைக்கில் போனபோது அந்த நேரத்தில்கூட ஆனந்தமாக இருந்தது. அவனின் அருகாமையும் manlyயான அவனின் deodrant வாசனையும் அவளை அந்த நேரத்திலும் மிகவும் ஈர்த்தது. ஏதோ கதை சொல்வாகளே சாகும்போது தேன்துளியை ருசித்தவனைப் பற்றி. அதுபோல.
அந்த பதினொருமணி ராத்திரிவேளையில் அந்த பாலம் அம்போ என்று அனாதையாக யாருமில்லாமல் இருந்தது. பாலத்துக்கடியில் நீர் மோதுவது digital stereo effectல் பிரம்மாண்டமாக சற்று பயமாகக் கூட இருந்தது. ஆனந்த் சற்று நேரம் கவிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
*****
“நம்ப குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் ஆனந்த்?”
“என்ன? என்ன சொன்ன?” என்றான் ஆனந்த் அதிர்ந்துப் போய்.
“ஆமா. ஆனந்த். இன்னும் 8 மாசத்துல நீங்க அப்பா ஆகப் போறீங்க”
“அப்படீங்கற?”
“நம்ப கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல நடந்தாத்தான் நல்லது ஆனந்த். இல்லேன்னா நமக்கு அசிங்கமாயிடும்”
“என்ன அசிங்கம்?”
“அது சரி. கல்யாணப் பொண்ணு pregnant ஆ இருந்தா பாக்றவங்க என்ன சொல்வாங்க?”
“அதுவும் சரிதான்”
*****
“என்ன ஆனந்த் என்னையே பாத்துக்கிட்டிருக்கே?”
“ஒன்னுமில்லை கவிதா. இன்னும் கொஞ்சநேரத்தில் நாம அவ்வளவுதான்”
“நாம பிரியப் போறோம் இல்லை… அதுதான் எனக்கு கவலையா இருக்கு”
“என்ன சொல்ற கவிதா?”
“ஆமா! நாம கடல்ல விழுந்தவுடன் உங்களுக்கு ஒரு அலை எனக்கு இன்னொரு அலை”
“நாம பிரியப் போறதில்லை கவிதா. சேர்ந்தேதான் சாகப்போறோம்” என்றவன் மோட்டாபைக்கின் side-box ஐ திறந்து ஒரு நைலான்கயிறை எடுத்தான். கவிதா அவனை ஆச்சாியம் + கேள்விக்குறி கலந்த முகபாவனையோடு அவனை நெருங்கினாள்.
“இந்த கயிற்றால் நம்மை நாம் கட்டிக்கொள்ளப் போகிறோம். இரண்டுபேரும் சேர்ந்தேதான் சாகப்போகிறோம்”
கவிதா முகத்தில் ஆச்சாயம்+குழப்பம்+பயம் அனைத்தும் அந்த இருட்டிலும் டாலடித்தது.
“நான் ரெடி. நீ ரெடியா?” என்றான் ஆனந்த்
கவிதாவுக்கு அந்த இரவு நேரத்திலும் வேர்த்தது. மனதுக்குள் ஆண்டவனை ப்ராத்தித்துக் கொண்டாள். அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டாள். மனம் மிகவும் கனமாகிப் போனது. எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் அழுதாள். ஆனந்த் அவளை அணைத்துக் கொள்ள வந்தாள். வேண்டாம் என்று விலகினாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக
“சரி. நான் ரெடி”
“இந்த கயிற்றால் நீயே நம்மிருவரையும் கட்டிவிடு கவிதா”
கவிதா குழப்பத்தோடு ஆத்திரத்தோடு +கவலையோடு+ பயத்தோடு கயிற்றால் தன்னையும் அவனையும் சேர்த்துக் கட்டினாள். ஆனந்தோடு பழகிய நாட்கள் சுற்றிய இடங்கள் எல்லாம் நினைவுக்கு வர இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருவரும் மெல்ல நகர்ந்து பாலத்தின் விளிம்புக்கு வந்தார்கள். மேலே இருந்து கீழே குதித்தார்கள்.
குதித்த அவர்கள் அந்த 27 அடி உயரத்திலிருந்து கடலின் மேல் மட்டத்தில் ‘தட்’ என்று மோத சரியாக 1.3 வினாடிகள் பிடித்தது. அவகள் விழுந்ததன் ஒலிஅலைகள் 79 அடி சுற்றளவு தூரத்துக்கு பரவியது. கீழே விழுந்ததும் கடலடியில் 12 அடி செங்குத்தாக சென்றார்கள். விழுந்த இடத்தில் இருந்து நீர்வட்டங்கள் தோண்றி 23 அடி ஆரம் அளவு பொிதானபின் காணாமல் போக ஏறத்தாழ 16 வினாடிகள் ஆயிற்று.
கவிதாவின் தலைமுடி தண்ணீர் அடியில் பரவி அலைந்தது. சற்று மூச்சு திணறுவது போல தோன்றியது. கவிதா கட்டியிருந்த கயிறு மிகவும் பலவீனமாக இருந்தது. அவள் தன்னை விடுவித்துக் கொள்ள ஏதும் பிரயத்தனம் செய்யாதது ஆனந்துக்கு சற்று வியப்பாகக்கூட இருந்தது. கடலில் குதித்தவுடன் அற்பாயுசில் போய்விட்டாளா? அவள் உடல் கனமடைந்து அவனையும் இழுத்துக் கொள்ளும் முன்ன தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். சற்று சிரமப்பட்டாலும் ஆனந்துக்கு தனது கைகளை விடுவித்துக் கொள்ள முடிந்தது. விடுவித்துக்கொண்ட கைகளை தன்னுடைய பாண்ட் பாக்கட்டில் நுழைத்து சிறிய கத்தியை எடுத்தான். சற்று உடலை வளைத்து ஒரு தேர்ந்த gymnast போல கால்கட்டை வெட்டினான். கவிதாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு மெல்ல மேலெழும்பி கடல் மேல் மட்டத்துக்கு வந்து காற்றை சுவாசித்தபோது அப்பாடா என்றிருந்தது ஆனந்துக்கு. இந்நேரம் கவிதா கடலடியில் போயிருப்பாளா? திரும்பிக்கூட பார்க்கத் தோணவில்லை ஆனந்துக்கு. காயம் ஆனதும் கழட்டிவிட என்னவெல்லாம் நாடகம் ஆட வேண்டியிருக்கிறது!!!
கவிதாவுடைய friend யாரது? ஆங்… ஷீலா முதலில் வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் rest. காலையில் முதல் வேலையாக போஸ்ட்மேனைப் பாத்து லெட்டரை வாங்கணும். முதலில் வீடு. கொஞ்சம் நேரம் தூக்கம். ஆனந்த் பாலத்தின் மேலிருந்த மோட்டார் சைக்கிளை உதைத்து start செய்தபோது சற்று உற்சாகமாக உணந்தான். என்ன ஒரு planning. என்ன ஒரு execution!
ஈர உடம்பில் காற்று வருடியது சற்று சுகமாக இருந்தது. இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கக்கூட இல்லை. நாளைக் காலையில் தினத்தந்தியில் ஒரு பத்தி செய்தி. பிறகு ஒரு மாதம் தாடியுடன் திரிந்துவிட்டு அதையே french cut ஆக மாற்றிவிட்டு… ஆங் ஷீலா!
ஆனந்துக்கு சற்று சந்தோஷமாக இருந்தது. விசிலடித்த படி வீடு போய் சேர்ந்தபோது மணி 1 ஆகி விட்டிருந்தது. தலையை துவட்டிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தவுடன் ஆனந்தை தூக்கம் தழுவிக் கொண்டது. கனவில் கவிதா தோன்றி அது..! படத்தில் வரும் பேய் ஸ்நேகாவைத் துரத்துவது போல முட்டைக் கண்களுடன் விரட்டிக்கொண்டு வந்தாள். ஆனந்த் வேகமாகப் ஓடிப்போய் மூச்சு வாங்க வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான். கவிதா விடாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்க திடீரென முழித்துக் கொண்டான். கதவை தட்டும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. கனவா இல்லை நிஜமா என்று புயாமல் சற்றுநேரம் இருந்தான். கதவு தட்டும் சத்தம் வலுக்கவே மெதுவே எழுந்துப் போய் கதவை திறக்க வெளியே போலீஸ்…
நல்லா இருந்தா சொல்லுங்க … மேலே தொடரலாம்…
அன்புடன்
சந்தர்
By: சந்தர் on திசெம்பர் 18, 2008
at 4:39 பிப
சந்துரு,
நல்ல சஸ்பென்ஸ்.விறு விறுப்பு மெய்ண்டன் ஆகியிருக்கு. முதலில் ஒரு காதல் கதையாகத் தொடங்கி க்ரைமாக மாறுகிறது. கடைசி பாரவை எடுத்து விட்டு கிழ் உள்ள் வரிகளை மட்டும் போடுங்கள். “sharp” ஆக முடியும்.
// வேலை இவ்வளவு கச்சிதமாக முடிந்தது என்று ஆனந்துக்கு சந்தோஷமாக இருந்தது படுக்கையில் சாய்ந்தவுடன் ஆனந்தை தூக்கம் தழுவிக் கொண்டது. அழ்ந்த தூக்கத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தான் . மணி மூணு. எழுந்துப் போய் கதவை திறக்க வெளியே போலீஸுடன் …… கவிதா ஈரம் காயாமல்.//
எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்.
By: K.Ravishankar on திசெம்பர் 18, 2008
at 5:00 பிப
நன்றி திரு ரவிஷங்கர்.
//வெளியே போலீஸுடன் …… கவிதா ஈரம் காயாமல்.//
நான் யோசித்திருப்பது வேறு. ஏறத்தாழ நெருங்கி விட்டீர்கள்.
எழுத்துப் பிழைகளை கவனிக்கிறேன்.
By: chandarsekar on திசெம்பர் 18, 2008
at 5:25 பிப
ஓஓஓஓஓஓஒ………….தொடர் கதையா………….
By: K.Ravishankar on திசெம்பர் 18, 2008
at 7:06 பிப
//ஓஓஓஓஓஓஒ………….தொடர் கதையா………….//
நல்லா இருந்தா சொல்லுங்க … மேலே தொடரலாம்…
By: chandarsekar on திசெம்பர் 19, 2008
at 1:20 பிப
ரெம்ப சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.
இருந்தாலும் கொலையை முதலில் நான் எதிர்பார்க்கவில்லை .
வாழ்த்துக்கள்.
By: kunthavai on திசெம்பர் 21, 2008
at 1:24 பிப
Superb! தொடருங்கள் ப்ளீஸ்!
By: Shakthiprabha on திசெம்பர் 21, 2008
at 3:21 பிப