chandarsekar எழுதியவை | மே 6, 2010

திருட்டு பயம்

ஏறத்தாழ 100 கிலோ மீட்டர்கள், திண்டிவனம் தாண்டி விழுப்புரம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது தான் எனக்கு அந்த சந்தேகம் தோன்றியது, “வீட்டை சரியாகப் பூட்டினோமா” என்று. உடனே என்னை பதட்டம் தொற்றிக்கொண்டது.  காரில் எனது பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு பயணத்தை அநுபவித்துக்கொண்டிருந்த என் மனைவியைக் கேட்டேன். காத்துக் கொண்டிருந்தமாதிரி என் மனைவி என்னை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்.  “எந்தக்காலத்தில் நீங்கள் யாரை நம்பினீர்கள். நீங்களே எல்லாம் செய்யனும்னு நினைச்சா இப்படித்தான்” என்றாள். எனக்கு ‘ஏண்டா அவளிடம் கேட்டோம்’ என்று ஆகிவிட்டது. பின்னால் அமர்ந்திருந்த என் இரு மகன்களிடம் கேட்டேன். “யார் வீடு? ஏன் அதைப் பூட்டவேண்டும்? ஏன் பூட்டவில்லை? பூட்டாவிட்டால் என்ன?” என்ற ரீதியில் கேள்விகளை அடுக்க, இவர்களிடம் கேட்பதில் பயனில்லை என்று உணர்ந்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே வீட்டு சாவி என் சட்டை பேண்ட் பாக்கெட்டில் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. இப்போது என் முன்னால் இருந்த மிகப் பெரிய கேள்வி ‘காரை முன்னால் செலுத்துவதா இல்லை திரும்பிப் போய் வீட்டைப் பார்ப்பதா’ என்பது தான்.    போதாதகுறைக்கு முந்தையநாள் பில்டருக்கு கொடுப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்தேன். வாங்கிக்கொள்வதாகச் சொன்ன பில்டர் இன்று காலைவரை வரவில்லை.  அது வேறு ஞாபகத்துக்கு வந்தவுடன் பகீர் என்றது.  எங்கள் வீட்டில் பொதுவாகவே பீரோவைப் பூட்டுவதில்லை. இதை வேறு என் மனைவியிடம் சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்ள தயாரில்லை. மெளனமாக இருந்தாலும் என் மனது அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

வீடு பாதுகாப்பாக இல்லை என்ற மிகப் பெரிய உபாதையைத் தாங்கிக்கொண்டு மேலும் பயணப்பட முடியாது என்று தோன்றியது. திரும்ப வீட்டுக்குப் போய் நன்றாகப் பூட்டப்பட்டு பாதுகாப்பாக இருந்தால் என் மனைவியும் என் மகன்களும் என்னை கண்களால் எரித்தே கொன்று விடுவார்கள் என்று தோன்றியது.

கும்பகோணத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் போய் வரவேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் ஆறுமாத பிரார்த்தனை. ஒரு வீடு கட்டிக்கொண்டு குடியேறவேண்டும் என்பது எங்களின் வாழ்நாள் ஆசை. எவ்வளவு காலம் தான் வாடகை வீட்டில் இருப்பது? வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேமித்து, மனைவியின் நகைகளை விற்று….

“என்னங்க எல்லா நகையும் வித்துடப்போறீங்களா?”

“ஆமாமா, அப்பதான் கொஞ்சமாச்சும் தேறும்”

“இல்லீங்க இந்த நெக்லஸ் பரம்பரைபரம்பரையா எங்க குடும்பத்துல இருக்கு அதான்”

“நல்லா யோசனைப்பண்ணிப் பாரு. நாம இருக்கற நிலமையில நகையை விக்கலைனாலும் அடகு வைச்சாலும் பணம் பத்தாம போயிடும்”

“சரீங்க. அப்படியே பண்ணுங்க. ஆமா நிலம் எங்கன்னு சொன்னீங்க?

“தாம்பரம் தாண்டி படப்பை தாண்டி. அரை கிரவுண்டு நிலம். அதில 850 அடிக்கு வீடு கட்டித்தரதா பிரபோசல்”

“படப்பையா நீங்க ஏதோ கடப்பைன்னு சொன்னதா ஞாபகம்”

“கடப்பைன்னு எல்லாம் தமிழ்நாட்டுல இடம் கிடையாது.  ஆந்திராவுலதான் கடப்பான்னு ஒரு இடம் இருக்கு”

“மாப்பிள்ளே, கடப்பா கல்லு வேண்டாம் நல்ல மொசைக் தரை போடுங்க வீட்டுக்கு” என்றார் விடுமுறைக்கு வந்திருந்த மாமனார்.

“மீதி பணத்துக்கு என்ன பண்ண போறீங்க?”

“பேங்க்ல லோன் கேட்டு இருக்கேன்.  பாக்கலாம்”

“நீங்க எங்க வேலைல இருக்கிறீங்க?” என்றார் வங்கி அலுவலர்.  நான் சொன்னேன்.

“உங்க அலுவலகத்திலேயே உங்களுக்கு வீட்டு லோன் தருவாங்களே?” என்றார் மறுபடியும்.

“தருவாங்க சார், ஆனா அது பத்துமான்னு தெரியல. உங்க பேங்க் ஏஜண்ட்தான் 85 சதவீதம் வரைக்கும் லோன் கிடைக்கும்னு சொன்னாரு” என் குரலில் இருந்த தொய்வை என்னாலேயே உணர முடிந்தது.

பல்வேறு முடிவில்லா கேள்விகளும், கைகளில் அடங்காத காகிதங்களுக்கும் இடையே கணக்கில்லாத கையெழுத்துகளுக்கு பிறகு அறைகுறையாக ஒரு தொகை வங்கி லோன் ஸான்க்ஷன் ஆனது. அந்த வங்கிக் கடன் ஒப்புதலுக்காக  காத்திருந்த போது ஏற்பட்டது தான் இந்த கும்பகோணம் வேண்டுதல்.

அதற்கு பிறகு வீடு உருவானது ஒரு தனிக்கதை.  பக்கத்தில் ஒரு வீடு. கொஞ்சம் தள்ளி 2 வீடுகள். கடைக்காலுடன் நின்று போன ஒரு வீடு.  கட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீடு. பாதி கட்டப்பட்ட நிலையில் நின்றுப் போன ஒரு வீடு.  இவ்வளவு தான்.

“என்னங்க அக்கம் பக்கம் அதிகமாக வீடு எதுவும் இல்லையே” என்றாள் என் மனைவி சற்று கவலையுடனும் அதிக பயத்துடனும்.

எனக்கும் அந்த கவலை இருந்தது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இன்னும் கொஞ்சம் நாளில் நிறையப்பேர் வீடு கட்டி குடிவந்து விடுவார்கள் பாரு” என்றேன். இன்னும் சில வருடங்களுக்கு இப்படியேத்தான் இருக்கப்போகிறது என்று என் மனதுக்குள் நிச்சயமாகத் தெரிந்தது.

எனது பக்கத்து வீட்டுக்காரர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.  நேற்றுக் காலைத்தான் அவர் சொந்த ஊருக்கு ஏதோ விஷேஷம் என்று புறப்பட்டுச் சென்றார்.  போவதற்கு முன்னர்,

“சார் எங்க ஊர் குலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்கல் வைக்கப் போறோம்.  இன்னிக்கு சாயந்தரம் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல எல்லோரும் புறப்படறோம்.  வீட்டை நல்லா பூட்டிடுவோம் இருந்தாலும் போவ வர ஒரு கண் வைச்சிகிடுங்க!”

“நல்லபடியா போய்வாங்க. நாங்களும் ஒரு இரண்டு நாள் கழிச்சி கும்பகோணம் வரை போய்வரதா ப்ளான். சும்மா இரண்டு நாள் தான். வந்துடுவோம்”

“அப்படியா சார்.” அவர் முகத்தில் யோசனை தெரிந்தது.  “இருக்கட்டும் சார். பெரிய திண்டுக்கல்  பூட்டு போட்டு பூட்டிடுவேன். இங்க எல்லாம் திருட்டு பயம் கிடையாது.  நானும் அஞ்சி வருஷமா இங்க இருக்கேன்.  வரேன் சார்”  அவர் போய்விட்டார்.

சரி. பக்கத்துவீட்டுக்காரர் வந்த பிறகு எங்களுடைய கும்பகோணம் பயணத்தை வைத்துக்கொள்ள எண்ணினேன். என் மனைவியிடம் சொன்ன போது,

“பசங்களுக்கு நாளன்னிலேர்ந்து 3 நாளுக்கு லீவாம்.  நாம அந்த லீவுல கும்பகோணம் போயிட்டு வந்திரலாம்.  ஒரு இரண்டு நாளுக்கெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. அதுவும் நாம் கிளம்பற அன்னிக்கு மறுநாள் காலைல பக்கத்துவீட்டுக்காரர் வந்துடறார்.  ஓரு ராத்திரி தானே” என்றாள்.

அதுவும் சரியென பட்டது எனக்கு. ஆணால் இப்படி கதவைப் பூட்டினேனா என்பதே சந்தேகத்திற்கு இடமாகும் படி…

ஆக பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் பண்ணினாலும் உபயோகம் இல்லை. சட்டென்று ஒரு ப்ளாஷ் அடித்தால் போல, என்னுடைய நண்பன் கிருஷ்ணனுக்கு போன் செய்தால் என்ன என்று தோன்றியது.

கிருஷ்ணன் என் குரலை கேட்டதும் உற்சாகமானான்.  “எப்படிடா இருக்கே” என்றான் அதீத மகிழ்ச்சியுடன்.

நான் சுருக்கமாக வீட்டை பூட்டினேனா இல்லையா என்கிற என் சந்தேகத்தை விவரித்தேன்.

சட்டென மெளனமானான் என் நண்பன்.  “ரொம்ப சாரிடா.  நான் இப்ப டெல்லியில் இருந்து உன் கிட்ட பேசிட்டு இருக்கேன்.  இன்னிக்கு காலைல ஃஃபிளைட்ல தான் ஆபீஸ் விஷயமா வந்தேன்.  என் வேலை முடியறத்துக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்.  ரொம்ப சாரிடா”.  அவன் குரலில் உண்மையான கரிசனம் தெரிந்தது.

என்னுடைய முக்கியமான நண்பர்கள் நாலைந்து பேருக்கு போன் செய்தேன். என்னுடைய போதாத காலம் அனைவரும் வெவ்வேறு இடத்திலும் வெவ்வேறு வேலைகளிலும் இருந்தார்கள்.

வேறு வழிதோன்றாமல் ஆண்டவன் விட்ட வழி என்று காரை முன்னோக்கி செலுத்தியபடி இருந்தேன்.  ஆபத்பாந்தவனாக அப்போதுதான் ஒரு போலீஸ் ஸ்டேஷனை பார்த்தேன்.  பேசாமல் போலீஸில் ரிபோர்ட் செய்தால் நல்லது.  அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காரை நிறுத்தினேன்.  வாசலில் நடிகர் வடிவேலு போன்று ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் தன் கண்ணாலேயே ‘என்ன?’ என்று விசாரித்தார்.

“ஒரு கம்ளைண்ட் குடுக்கணும்” என்றேன்.

“உள்ளே ரைட்ல ரைட்டர் சார் இருப்பார் அவர்கிட்ட குடுங்க” என்றார் எந்த ஒரு ஸ்வாரஸ்யமும் காட்டாமல்.

“உள்ளே ஒரு போலீஸ்காரர் இடது கையில் சிகரெட்டும் வலது கையில் பேனாவுமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்தான் ரைட்டராக இருக்க வேண்டும்.

“சார்.. சார்…” என்ற என் குரலைக் கேட்டதும் இடது கையில் இருந்த சிரரெட்டை அப்படியே உள்ளங்கையில் மறைக்க முயன்று, என்னைப் பார்த்ததும் ‘இவனுக்கெல்லாம் சிகரெட்டை மறைப்பது அனாவசியம்’ என்ற பார்வையுடன், “என்ன வேணும்” என்றார்.

“சார் என் வீட்டுக்கு செக்யூரிட்டி வேணும்”

“அப்படியா ரைட்டிங்ல குடுங்க.  எந்த ஏரியா?” என்றார் ‘எங்கேயும் இந்த ஆளைப் பார்த்ததில்லையே’ என்பது அவரது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“படப்பை சார்”

“படப்பையா அது எங்க இருக்கு?”

“தாம்பரம் பக்கத்துல சார்”

“சரி, அதுக்கு எதுக்கு இங்க வந்தீங்க?”

“இல்ல சார் வந்து…” என்று இழுத்துவிட்டு கதையைச் சொல்வதற்குள் என் உற்சாகம் வடிந்து விட்டதை உணர்ந்தேன்.  என் கதையை கேட்டதும் என்னை ஒரு பூச்சியைப் பார்ப்பது போல பார்த்தார் அந்த ரைட்டர்.  பிறகு, என்னைப் பார்த்து,   ” ஏன் சார் நீங்க எல்லாம் படிச்சவங்கதானே.  நீங்களே இப்படியெல்லாம் பண்ணா படிக்காதவனை என்ன சொல்றது? வீட்டப் பூட்டாம வந்துடறது. அப்பறம் திருடு போயிடிச்சி கொள்ளை அடிச்சிட்டான்னு எங்ககிட்ட வந்து உயிரை எடுக்கறது.  போலீஸ்னா என்னானு தான் நினைச்சிட்டு இருக்கிறீங்க?” என்று ஆரம்பித்து ஒரு அரை மணி நேரம் என்னை பின்னி எடுத்தார்.  நான் ‘ஏண்டா போணோம்’ என்றாகிப் போனேன். என் நல்ல காலம் எங்கேயோ போயிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வரவே, என்னைவிட்டு விலகினார்.  நானும் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வெளியே ஓடிவந்துவிட்டேன்.

இதற்குப் பிறகு, ஆனது ஆகட்டும் என்று என் கும்பகோணம் பயணத்தை தொடர முடிவுசெய்தேன்.  கும்பகோணத்தை அடையும் போது மாலை மணி மூன்றாகிவிட்டது.  ஒரு ஹோட்டலுக்கு சென்று பசியாறிவிட்டு உடனே கோவில்களுக்கு சென்று வருவது என்று தீர்மானித்தேன்.  மனைவியும் மகன்களும் நீண்ட பயணத்தால் களைப்புற்றிருந்தாலும் எனக்காக வர முடிவு செய்தார்கள்.

சாரங்கபாணியிடமும் சக்ரபாணியிடமும் நான் நன்றிசொல்ல வந்தது மறந்துபோய் வீட்டைப் பாதுகாக்க வேண்டிக்கொண்டேன்.  பிறகு இராமசாமி கோவிலுக்கும் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் போய் வருவதற்குள் இரவு 8 மணி ஆகிவிட்டது.

என் மனைவி இன்றிரவு தங்கிவிட்டு நாளைக்கு திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், மன்னார்குடி என்று பெரிய லிஸ்ட் வைத்திருந்தாள்.  நான் அவளிடம் தீர்மானமாச் சொல்லிவிட்டேன்.

“கும்பகோணம் வந்தோம். சில கோவில்களைப் பார்த்துவிட்டோம்.  அடுத்தமுறை மீண்டும் வந்து நிதானமாக எல்லா கோவில்களையும் பார்த்துக் கொள்வோம்.  இப்போது நாம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினா விடிவதற்குள் வீடு போய் சேர்ந்து விடுவோம்” என்றேன்.  என் மனைவியும் என் மகன்களும் என்னைப் பார்த்த பார்வையில் அதீத எரிச்சல் தெரிந்தது.  இருப்பினும் நான் விடுவதாக இல்லை.

சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்டோம். இரவு பயணமாதலால் மிகுந்த எச்சரிக்கையோடும் நிதானமாகவும் காரைச் செலுத்தினேன்.  வேகமாக எதிரே வந்த லாரிகளும் பஸ்களும் என்னை முந்திச் சென்ற வாகனங்களும் என்னை மிகவும் பயமுறுத்தின.  இருப்பினும் நான் மிகுந்த கவனத்தோடு காரை ஓட்டினேன்.  எனக்கு ஏற்பட்ட களைப்பை போக்கிக் கொள்ள இரண்டு இடங்களில் காரை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.  மனைவியும் என் மகன்களும் களைப்பால் தூங்கிப் போயிருந்தார்கள்.

நான் செங்கல்பட்டைத் தாண்டியதும் ஒருவித உற்சாகம் என்னை தொற்றிக் கொண்டது.  வண்டலூர் லெவல் கிராஸிங் கேட்டில் சிறிது நேரம் காத்திருந்த போது ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக கடந்து போனது. நான் படப்பையை அடைந்து என் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினேன்.  என் கார் வீட்டு வாசலை அடைந்த போது பொழுது  புலரத் தொடங்கியிருந்தது.

ஒரு வித படபடப்புடன் வாசல் கதவை தொட்டவுடன் திறந்துக் கொண்டது.  ஹாலில் விளக்கெரிந்துக்கொண்டிருந்தது. ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.  எனக்கு யாரோ உள்ளே இருக்கிறார்களோ என்று பயமாக இருந்தது. உள்ரூமிலும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எல்லா ரூமிலும் போய் பார்த்தேன்.  யாரும் இல்லை.  பீரோவைத் திறந்துப் பார்த்தேன்.  நான் வைத்திருந்த பணம் ஐம்பதாயிரமும் இருந்த ஒன்றிடண்டு வெள்ளி பாத்திரங்களும்  பத்திரமாக இருந்தது.  ஆக கவனமறதியாக விளக்குகளையும் ஃபேனையும் நான் அணைக்காமல் போனது யாரோ ஆள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது.

ஏறத்தாழ பொழுது விடிந்து விட்டிருந்தது. பக்கத்து வீட்டில் டாக்ஸி நிற்கும் சத்தம் கேட்டது.  நாகர்கோவில் போயிருந்த பக்கத்துவீட்டுக்காரர் வந்துவிட்டார் போலும். எனக்கு நடந்ததை அவரிடம் கூறினால் சிரிப்பார் என்று தோன்றியது. எனக்கே நடந்ததை நினைக்கத் தமாஷாக இருந்தது. நான் சிரித்துக் கொள்ளவும் பக்கத்து வீட்டிலிருந்து “ ஐயோ திருடன்.. திருடன்..” என்று சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்கு ஓடினேன்.

பூட்டும் தாழ்ப்பாளும் உடைந்து கிடக்க, வீடெல்லாம் அனைத்து பொருட்களும் இரைந்துக் கிடக்க, அவருடைய பீரோ அகலமாக திறந்து கிடந்தது.  அவருடைய விலையுயர்ந்த பொருட்கள் களவாடப் பட்டிருந்தது தெள்ளத் தெளிவாக புரிந்தது. நாகர்கோவில்காரர் கீழே விழுந்து புலம்பிக்கொண்டிருக்க அவருடைய  மனைவிபெருங்குரலெடுத்து அழ அவருடைய பெண்குழந்தைகள் விஷயம் தெரியாமல் தேம்பிக்கொண்டிருந்தார்கள்.

நான் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.


மறுவினைகள்

  1. SOME PEOPLE LOCK ALL THE DOORS EXCEPT THE BACK DOOR.

  2. உண்மை தான். தங்கள் வருகைக்கு நன்றி!

  3. ரெம்ப நாள் கழிச்சி எழுத ஆரம்பிச்சியிருக்கீங்க. கதை நன்றாக இருக்கின்றது.

  4. மிக்க நன்றி தங்கள் வருகைக்கு. நானும் தினமு்ம் எழுதவேண்டும் என்று தான் நினைக்கிறேன். நினைப்பதோடு சரி. தங்கள் வருகை எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: