chandarsekar எழுதியவை | நவம்பர் 20, 2008

நிதர்ஸனம்

நான் வீட்டை அடையுமுன்னர் அம்மாவின் குரல் என்னை வரவேற்றது.

“வாடா சந்துரு, வாயைத் திற” என்று நீராவி எஞ்ஞினில் கரி அள்ளிக் கொட்டுவதைப்போல என் வாயில் சர்க்கதையை ஸ்பூனால் அள்ளிப் போட்டாள்.
“என்னம்மா விஷேஷம்” என்றேன் முகத்தில் இருந்த சர்க்கரையை துடைத்துக்கொண்டு.
“உங்கப்பாவுக்கு ஜியெம் அவார்ட் கிடைச்சிருக்குடா” அம்மாவின் குரல் இரயில்வே காலனியெங்கும் எதிரொலித்தது.

அம்மா எப்போதும் இப்படித்தான். எதையும் அடக்கி வாசிக்கத் தெரியாது. நான் போனவருடம் பத்தாவது வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றபோது அம்மா செய்த கலாட்டாவில் பக்கத்துவீட்டு தினேஷ் அண்ணன் IASல் தேர்வு பெற்றது சாதாரண நிகழ்ச்சியாகிப் போனது.

அப்பாவுக்கு ‘ஜியெம்’ அவார்ட்! அம்மாவின் சந்தோஷம் என்னையும் தொற்றிக்கொண்டது. அம்மாவின் கையைப் பிடித்துக் குலுக்கினேன்.
“அப்பா எங்கேம்மா?”
“உள்ளே தான் இருக்கார். ஏதோ ஆபீஸ் வேலை” என்றாள் சற்று சலிப்புடன்.
அப்பா எப்போதும் இப்படித்தான். எப்போது பார்த்தாலும் ஏதோ ஆபீஸ் வேலைதான். நான் அவரை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

“ஏம்பா, உங்கள் ஆபீஸில் உங்களைவிட்டா வேலை செய்ய யாரும் இல்லையா?”
“நான் எனக்காக வேலை செய்யறேன்டா. எனக்கு வேலை செய்வது பிடிச்சிருக்கு”
“அது சரி. வீட்டுவேலையும் கொஞ்சம் பாருங்க” – இது அம்மா.
“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே” என்பார் அப்பா. அம்மா மோவாய்கட்டையை இடித்துக் கொண்டு போவாள்.

அப்பா அடிக்கடி ஏதாவது அவார்ட் வாங்கிக்கொண்டு வருவார். ஐம்பது, நூறு, அதிகபட்சமாக இருநூறு. இவையாவும் அப்பா வீட்டுக் இனிப்பாகத்தான் கொண்டு வருவார்.
“அம்மா என்னம்மா திடீரென்று ஸ்வீட்?”
“அப்பாவுக்கு ஏதோ அவார்ட் கொடுத்தாங்களாம். அந்த பணத்துக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தார்”

ஆனால் ‘ஜியெம்’ அவார்ட் அப்படியில்லை. மிகப் பெரிய கெளரவம். இந்த அவார்ட் கிடைப்பது மிகவும் கஷ்டம். அப்பா சொல்லியிருக்கிறார். அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். அவருக்கு அவார்ட் கிடைத்தது பெரிய விஷயம் இல்லைதான். இருந்தாலும் இது மிகப் பெரிய கெளரவம். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அப்பா உள் அறையில் – ஏதோ ஆபீஸ் வேலை.
“கங்ராஜூலேஷன்ஸ் அப்பா”
“தேங்ஸ்டா”
“நீங்க கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு பலன்” என்றேன் பெரிய மனுஷன் போல.
“அதிர்ஷ்டமும் கூட. என்னைவிட எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இன்னமும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சிருக்கு”.

அப்பாவிடம் இது தான் எனக்கு பிடிக்காத விஷயம். தான் ஒரு பெரிய ஆள் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டார். ஈகோவே இல்லாத மனுஷன்.

எனக்குத் தெரிந்து அப்பா போல யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக தெரியவில்லை. கோடி வீட்டில் இருக்கும் ராமநாதன் மாமா வேலைக்குப்போயே நான் பார்க்கவில்லை. அவரும் அப்பா போல ஒரு ஆய்வாளர் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் வீட்டில் தான் வாசம். இரயில்வேயில் இருக்கும் சலுகைகள், விடுப்புகள், வசதிகள், வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி.

“என்ன மாமா, ஆபீஸ் போகலையா?”
“இல்லேடா சந்துரு. மாமி தூரம். ஆத்துல இல்ல. நான்தான் சமைக்கணும். அதான் சியெல் போட்டிருக்கேன்”.

இன்னொருநாள்.
“மாமா, நீங்க போகலையா? அப்பா ஏதோ இன்ஸ்பெக்ஷன்னு லைன்ல போயிருக்கார்”
“காலம்பர இருந்தே தலை கிர்ர்ருனு இருக்குடா சந்துரு. அதான் ‘ஸிக்’ பண்ணிட்டேன்”
“அது சரி. உடம்பு சரியில்லன்னு இப்ப எங்க போயிண்டிருக்கீங்க?”
“மதியம் முறுக்கு சுட்டுத் தரேன்னா மாமி. அது தான் மாவு அரைக்க போயிண்டிருக்கேன். துணி வேற ஏகப்பட்டது இருக்கு. ஊர வச்சிருக்கேன். வந்து தொவைக்கணும். தலைக்கு மேல வேல இருக்குடா. நான் வரேண்டா சந்துரு”

இந்த ராமநாதன் மாமாவுக்கு ஜன்மத்துக்கும் ‘ஜியெம்’ அவார்ட் கிடைக்காது.

ஜியெம் அவார்ட் ஃபங்ஷன். அப்பாவைப்போல நிறையப்பேர் அவார்ட் வாங்க வந்திருந்தார்கள். அவர்களுடன் கூட அவர்கள் நண்பர்கள்… உறவினர்கள்… பெண்கள் பட்டுச் ்சேலை அணிந்துக் கொண்டு ஒரு திருமண விழா போல… அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. அப்பாவைப் பார்க்கப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது. நிறையப் பேர் அப்பாவிடம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். கை குலுக்கினார்கள். அப்பா சற்று கூச்சப்படுவதாகத் தோன்றியது. அப்பாவும் எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அப்பாவின் பெயரை வாசித்ததும் விழாத் தலைவரிடம் இருந்து விருது பெற நடந்தபோது அவர் செய்த பணிகளைக் குறித்தும் அவருக்கு ஏன் விருது தரப்படுகிறது என்றும் வாசித்தார்கள். அனைவரும் கரகோஷம் செய்தார்கள். அப்பாவின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம். நான் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய சக்தியெல்லாம் திரட்டி கைதட்டினேன். அப்பா கரம் கூப்பி நன்றியுடன் விருது பெற்றுக் கொண்டார். என்னுடைய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்தது.

அப்போதுதான் அடுத்த விருது பெற ராமநாதன் ஆய்வாளர் என்று வாசித்ததும் என்னால் நம்ப முடியாமல் மேடையைப் பார்க்க சரிதான். கோடிவீட்டு ராமநாதன் மாமா தான். அவருடைய கணிகளைகுறித்து வாசித்ததை என்னால் கேட்க முடியவில்லை. என் காதில் ஏதும் விழவில்லை. என்னால் நம்பஇயலாமல் மேடையை பார்த்துக் கொண்டிருந்தேன். ராமநாதன் மாமா பரிசை பவ்யமாக பெற்றுக்கொண்டு நகர்ந்தார். நான் நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சந்தோஷம் வடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ‘ஜியெம் அவார்ட்’ ? ராமநாதன் மாமாவுக்கு?

வீட்டுக்கு திரும்பும்போது அடக்கமாட்டாமல் அப்பாவிடம் கேட்டேன்.
“அப்பா, ராமநாதன் மாமாவுக்குக்கூட ஜியெம் அவார்டா? எனக்குத் தெரிந்து அவர் வேலையே செய்யமாட்டாரே அப்பா”

“இது மூன்றாவது முறை” என்றார் அப்பா.

chandarsekar எழுதியவை | நவம்பர் 19, 2008

எழுத நினைத்த கதை

எல்லோரும் எழுதும்போது நான் மட்டும் விதிவிலக்கா? என்தான் நான் எழுத ஆசைப்பட்டேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்துகிறார்கள். அதில் எழுத தீர்மானித்தேன்.

எதைப் பற்றி எழுதுவது? “போலியோ தடுப்பு மருந்து போடுவதின் அவசியம்” குறித்து எழுதலாமா அல்லது “கண் தானம்”, “இரத்த தானம்”, “சிறுகுடல், பெருங்குடல் தானம்” போன்ற இன்ன பிற தானங்கள் குறித்து எழுதலாமா என்று யோசித்தேன். ஏதாவது மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள அறிவிப்பு பலகையில் இருந்து எழுதிக்கொண்டு வந்துவிடலாம். சுலபமான வேலை. ஆனால் முந்தைய இதழ்களில் இவையாவும் வெளியானது ஞாபகம் வந்தது. தீவிரமாக யோசித்தபோது தான் யாருமே எழுதத்த தயங்கும் விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றியது.

சற்றேறக்குறைய தீர்மானித்து என் மனைவியிடம் சொன்னபோது “உங்களுக்கு ஏன்தான் இவ்வாறு புத்தி போகிறதோ” எ்னறு என் குமட்டில் குத்தாத குறையாக நொடித்துக் கொண்டாள். இதற்கெல்லாம் அசருபவனா நான்? நான் தீர்மானித்தால் தீர்மானித்தது தான்!

சற்று நேரத்திற்கெல்லாம் ‘என்னடா இது’ என்று கேட்டுக்கொண்டே வந்த என் அப்பா ‘எது’ என்று சொல்லாமலேயே ‘எக்கேடு கெட்டுப்போ!’ என்பது போல போய்விட்டார்.

சமையலறைக்குள் நுழைந்தேன். “அம்மா, கொஞ்சம் காபி கொடேன். எழுத நிறைய யோசனை செய்யவேண்டியிருக்கிறது” என்றேன். அம்மா காபி கலந்துக்கொண்டே, “ஏண்டா, இந்த கதை, கண்றாவியெல்லாம் உனக்கெதுக்குடா?” என்றாள். நான் ஏதும் பேசாமல் காபியைக் குடித்துவிட்டு நகர்ந்தேன்.

“அப்பா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேம்பா” என்று கத்திக்கொண்டு வந்த என் பத்துவயது அருமை புத்திரனின் குரல் திடீரென்று “ஐயோ” என்று மாற திரும்பிப் பார்த்தேன். என் மனைவி அவன் காதை திருகிக் கொண்டிருந்தாள். கதை எழுதும் என் தீர்மானம் வலுவுற்றதை உணர்ந்தேன். நான் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது!

மேஜையில் பேப்பர் பேனா. அருகில் இருக்கையில் நான். “நகரும் கை எழுதுகிறது. எழுதியதுமே நகருகிறது” என்றாரே கலில் ஜிப்ரான். அதுபோல என் கை பேனா பிடித்து பேப்ப்ர் மேல் நகர எத்தனிக்கையில் எங்கிருந்தோ வந்தாள் என் தங்கை.
“அண்ணா, நான் கேள்விப்பட்டது உண்மையா” என்றாள் மொட்டையாக.
“நீ என்ன கேள்விப்பட்டாய்?” என்றேன் நானும் வம்படியாய்.
“கண்ட கண்ட குப்பையெல்லாம் ஆபீஸ் பத்திரிகையில் எழுதி பேரைக் கெடுத்துக்காதே” என்றாள். “ஏற்கெனவே உன் பேர் சரியில்லை” என்ற த்வனி இருந்தது அவள் குரலில்.

“நான் எழுதுவது தப்பா” என்றேன் பரிதாபமாக.
“நீ எழுதுவதை தப்பென்று சொல்லல. ஆனா கண்ட கண்ட விஷயங்களை எழுதி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்காதேன்னு தான் சொல்றேன்” என்றாள். “உன் ஆபீஸில்தான் என் ஃபிரண்டோட அண்ணனும் வேலைப்பாக்கிறார் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் முத்தாய்ப்பாக.

இதை ஏன் என்னிடம் சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் சரி, நான் எழுதுவதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை!

‘சரி. வீட்டில் எழுதினால்தானே இத்தனை கலாட்டாவும். ஆபீஸில் பெரியதாக என்ன குப்பை கொட்டுகிறோம். அங்கே வைத்துக் கொள்வோம் கச்சேரியை’, என்று தீர்மானித்தேன்.

வருகை பதிவேட்டில்கையொப்பம் இடுவது தவிர வேறு எதற்கும் பேனா எடுக்காத நான் பேனாவும் கையுமாக உட்கார்ந்திருந்தது என் சக அலுவலரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

“என்ன சார், ஏதோ எழுதறீங்க?” என்றார். குரலில் சற்று நக்கல் இருந்தாற் போலிருந்தது.
“இல்ல, நம்ப ஆபீஸ் கையெழுத்து பிரதிக்கு…” என்று இழுத்தேன்.
அப்போதுதான் நான் எழுதியிருந்த தலைப்பை்ப பார்த்தவர், என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு சரேலென விலகினார். நான் கவலைப்படவில்லை. தலைப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றாமல், பரீட்சைக்கு வந்த படிக்காத மாணவன் போல வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“சார், குமுதம் வாரஇதழில் இருந்து உங்களுக்கு போன்” என்று எ்னனுடைய முதன்மை அலுவலர் என்னை விளித்தார். என்னால் நம்ப முடியாமல் தொலைபேசியை எடுக்க, “நீங்க உங்கள் அலுவலகத்தில் நடத்தும் கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்ததை எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவர் படித்து, மிகவும் நன்றாக எழுதியிருப்பதாக மிகவும் சிலாகித்தார். நீங்க எங்களு்ககு ஒரு கதை எழுத வேண்டும். தொடர்கதையாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்” என்றார்.
“சார், குமுதம் வார இதழில் இருந்து உங்களுக்கு போன்” என்று என்னுடைய முதன்மை அலுவலர் என்னை விளித்தார். என்னால் நம்ப முடியாமல் தொலைபேசியை எடுக்க, “நீங்க உங்க அலுவலகத்தில் நடத்தும் கையெழுத்துப் பிரதியில் எழுதியிருந்ததை எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவர் படித்து, மிகவும் நன்றாக இருப்பதாக சிலாகித்தார். நீங்க எங்களுக்கு ஒரு கதை எழுத வேண்டும். தொடர்கதையாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்” என்றார்.
“சார், நான் வந்து…” என்பதற்குள், அவரே மீண்டும், “நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது. கல்கி ராஜேந்திரன் உங்களை அப்ரோச் பண்ணுவார். விகடன் பாலசுப்ரமணியன் கூட உங்களை நேரில் பார்க்ணும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆணால் நீங்க எங்களுக்குத்தான் முதலில் எழுதவேணும்”, என்றார். நான் பதில் சொல்லும் முன்னர் பக்கத்து மேஜைக்காரர் “தொப்”பென்று ஃபைலைப் போட்ட சத்தத்தில் கனவு கலைந்தேன்.

‘அட கனவா’ என்று வியந்தேன். இதெல்லாம் நிஜமாகப்போகிறது என்று நினைத்தபோது, “சார்… சார்…” என்ற குரல். “ஆ!” நிஜமாகவே ஃபோனா! ஒருவேளை விகடன் ஆபீஸில் இருந்தா?” என்று நினைத்தபோதுஈ என்னுடைய முதன்மை அலுவலர், என்னை அழைத்துக்கொண்டு வந்தார்.
“வாங்க சார்!” என்றேன், சம்பிரதாயமாக.
“நீங்க ஏதோ எழுதுவதாக கேள்விப்பட்டேன்” என்றார் நேரிடையாக.
“ஆமா சார். நம்முடைய கையெழுத்துப் பிரதிக்காக…” என்றேன்.
“அதெல்லாம் வேண்டாம். ந்னறாக எழுதத் தெரிந்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார் அதிரடியாக.
“சார் நான்குர் நன்றாக எழுதுவேன்” எ்னறேன் அழாதகுறையாக.
“எது? இதுவா?” நான் எழுதிவைத்திருந்த தலைப்பைக் காட்டினார். சற்று கேலியாக சிரித்தது போல இருந்தது. போய்விட்டார்.
என்னுடைய எழுத்துக்கு, எழுதும் முன்னனரே இருக்கும் எதிர்ப்பு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இன்னமு் எழுதியபிறகு எப்படி இருக்குமோ என்று பயமாக இருந்தது. என்னைப்போன்ற எழுத்தாளர்களை இந்த உலகம் புரிந்துக்கொள்ளப் போவதில்லை என்ற அலுப்புடன் தலைப்பு மட்டிலும் எழுதியிருந்த காகிதத்தை கசக்க மனமில்லாமல் அப்படியே குப்பைகூடையில் வீசினேன்.
‘கில்லி விளையாடுவது எப்படி?’ என்ற அந்த தலைப்பு என்னைப் பார்த்து, “ஸில்லி” என்பது போல இருந்தது.

chandarsekar எழுதியவை | ஓகஸ்ட் 11, 2008

காக்கைகள்

“மீனாட்சி… மீனாட்சி…”
பூஜையில் இருந்த சங்கரைய்யர் குரல் கொடுத்தார். மீனாட்சிக்கு அவர் அழைப்பதற்கான காரணம் தெரியும். பூஜை அறையும் சமையலரையும் பக்கம் பக்கத்தில். ஜன்னலின் வெளியே பார்த்தாள். எப்போதும்போல காக்கைகள் அருகில் இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்தது..
“மீனாட்சி… மீனாட்சி…” மீண்டும் சங்கரைய்யர் இரைந்தார்.
“இதோ வரேன்னா” மீனாட்சி பூஜை அறைக்கு விரைந்தாள்.
“பாத்தியா மீனாட்சி. எப்போதும்போல நான் பூஜை ஆரம்பிச்சதும் இந்த காக்கைகள் வந்துட்டது” சங்கரைய்யர் குரலில் ஒரு பரவசம் தெரிந்தது.
மீனாட்சி ஆமோதித்தாள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. தினம் பூஜை ஆரம்பித்ததும்
சங்கரைய்யர் காக்கைகளை பார்த்துவிட்டு குரல் கொடுப்பார். இது அவர் தினமும் சிலாகிக்கும் நிகழ்ச்சி. இந்த காக்கைகள் வருவது அவருடைய பூஜாபலன் என்கிற அசையாத நம்பிக்கை.
சில சமயம் சங்கரைய்யர் அழைக்கும் போது மீனாட்சி கைக்காரியமாக இருப்பாள். சட்டென வர இயலாமல் உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் போச்சு. பிலுபிலுவென பிடித்துக்கொள்வார்.
“காக்கா தானேன்னு அலட்சியமா நினைக்காதேடி, மீனாட்சி. காக்காக்கள் எல்லாம் நம்மோட பித்ருக்கள். சனீஸ்வரன் வாகனம் மட்டுமில்லேடி, விநாயகனும் அதுதான். காக்கா இல்லேன்னா நமக்கு காவேரி ஏதுன்னேன்?”
இதற்குத்தான் என்ன கைக்காரியமாக இருந்தாலும் போட்டுவிட்டு மீனாட்சி ஓடிவருவாள்.
“எனக்கும் இந்த காக்காக்களுக்கும் ஏதோ பந்தம் இருக்குபோல. இப்படி ஒரு நாளா இரண்டு நாளா இத்தனை வருஷம் இந்த காக்காக்கள் வருதுன்னா, ஏதோ ஒரு விட்டகுறை தொட்டகுறை இருக்குடி”
இந்த காக்கைகள் மூலமாக தன்னுடைய ஜபங்கள் இறைவனை அடைவதாக நம்பினார். சில நாள் இந்த காக்கைகள் வர சற்று நேரமானாலும் மிகவும் நிலைக்கொள்ளாது போவார். பூஜைமீது நாட்டம் குறைந்து போகும்.
சிலசமயம் சங்கரைய்யர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்.
“என்னோட ஜன்மம் அடங்கினால் தான் இந்த காக்கா வரது நிக்கும்” என்றார் ஒருநாள். மீனாட்சிக்கு பகீலரன்றது.
“ஏன்னா இப்படி அச்சானியமா பேசறேள்?” என்றாள் அழமாட்டாகுறையாக.
“இவை வெறும் காக்காக்கள் இல்லேடி. நம்ப பந்துக்கள். நம்ப பந்துக்களைத் தேடி நான் போனா அவை ஏன் என்னத்தேடி இங்கே வரணும்?”
மீனாட்சி அவருடன் தர்க்கம் பண்ண தைரியம் இல்லாமல் விலகிப் போவாள். தர்க்கத்துக்கு சளைக்காதவர். இறுதியில் மனசை கலங்கடித்துவிடுவார்.
சங்கரைய்யருக்கும் இந்த காக்கைகளுக்கும் உள்ள உறவு சொல்லி மாளாது!
அன்று இரவு படுக்கும்போ சங்கரைய்யருக்கு கடும் காய்ச்சல்.. டாக்கரிடம் போவது மட்டும் அவருக்கு பிடிக்காத விஷயம். என்னதான் உடம்பு படுத்தினாலும் டாக்டரிடம் போவதற்குமட்டும் உடன்படமாட்டார். இத்தனைவருஷம் அவர் டாக்டரிடம் எதற்காகவும் போனதில்லை.

“ஏன்னா, டாக்டரை வரச்சொல்லட்டா?” மீனாட்சி விம்மினாள்.
“துளசி தீர்த்தத்துக்கு மிஞ்சிய டாக்டர் உண்டா என்ன? இந்த உடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆகாது பயப்படாதேடி, மினாட்சி”
“இல்லேன்னா, உடம்பு இந்த கொதி கொதிக்கிறதேன்னா”
“நன்னா படுத்து எழுந்தா சரியாயிடும்டி”
சரியாகவில்லை. ராத்திரி பூராவும் சங்கரைய்யர் அனத்திக்கொண்டே இருந்தார். ஜுரம் எந்த துளசி தீர்த்ததுக்கும் கட்டுப்படாமல், உடம்பு கொதித்துக்கொண்டே இருந்தது. மீனாட்சி அவர் படுக்கை பக்கத்திலேயே தூங்காமல் உட்கார்ந்து மிகவும் சோர்ந்துப் போனாள்.
விடிந்தும் விடியாததுமாக சங்கரைய்யர் எழுந்துக் கொண்டார். இன்னமும் உடம்பு சூடாகத் தான் இருந்தது.
“பூஜைக்கு எல்லாம் எடுத்து வையடி. நான் குளிச்சிட்டு வந்துடரேன்” அவரால் திடமாகக்கூட பேச இயலவில்லை. இடையிடையே இருமல் வேறு.
மீனாட்சி பயந்துப் போனாள். “வேணாம்னா. இன்னைக்கு பூஜை பண்ணலேன்னா பரவாயில்லைனா” என்ற அவளைப்பார்த்து அந்த ஜுரத்திலேயும் ஒரு முறை முறைத்தார்.
“குளிச்சிட்டு வரேன். எல்லாம் எடுத்து வை” என்றார் ஆணித்தரமாக.
“பச்சத் தண்ணிலேயா குளிக்கப்போறேள். உங்களுக்கு்தான் உடம்பு சரியில்லையே. நான் கொஞ்சம் வெண்ணி வெச்சுத்தரேன்னா” மீனாட்சி கெஞ்சினாள்.
“பிராமணனுக்கு பச்சதண்ணி ஆகாதுன்னு சொன்ன மொத ஆள் நீதான்” சங்கரைய்யர் குளிக்கச் சென்றுவிட்டார்.
சங்கரைய்யர் குளித்துவிட்டு வரும்போது உடம்பு அளவுக்கு அதிகமாக நடுக்கமாக இருந்தது. நடக்கக்கூட சற்று தள்ளாடினார். மீனாட்சி எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள்.
சங்கரைய்யர் பூஜை செய்துக்கொண்டிருக்க, அருகில் மீனாட்சி கண்களை மூடிக்கொண்டு அவருக்கு குணமாக பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.
சற்றேரக்குறைய அரைமணி நேரம் கழித்து சங்கரைய்யர் “ மீனாட்சி” என்று பலவீனமாக கூப்பிட்டார். அருகில் இருந்த மீனாட்சி மிகவும் பயத்தில் இருந்தாள். “என்னன்னா” என்றாள். அவள் குரல் மேலெழும்பவில்லை.
“இன்னிக்கு ஒரு காக்காகூட வரலை பாத்தியா?” சங்கரைய்யர் அப்படியே கண்கள் நிலைகுத்த தரையில் சரிந்தார்.
மீனாட்சிக்கு பகீரென்றது.
தினமும் காக்கைக்கு வைக்கும் கவளம் சாதம் சமையலறை ஜன்னலில் இன்றைக்கு வைக்காதது ஞாபகம் வர தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

chandarsekar எழுதியவை | ஓகஸ்ட் 8, 2008

நான்? அவனில்லை!

எனக்கு ஆனந்தராஜை நிறைய வருடங்களாகத் தெரியும். நானும் அவனும் ஒரே அலுவலகமாயினும் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள். எங்களை இணைத்தது இருவருக்குள்ளும் இருக்கும் கணிணி குறித்த ஆர்வம் தான். ஆனால் எனக்கு கணிணி மீது பிரியம் என்றால் ஆனந்தராஜுவுக்கு கணிணி மீது பைத்தியம். கணிணி குறித்து அவனுக்குத் தெரிந்தது நிறைய. இதனாலேயே என்னுடைய கணிணி குறித்த சந்தேகங்களுக்காக நான் ஆனந்தராஜை அடிக்கடி சந்திப்பது வழக்கம். எத்தனையோ முறை தெளிந்த எண்ணங்களுடன் போய் ஆனந்தராஜை சந்தித்து கேள்விகளுக்கு விடைபெற்று (?) குழம்பிய வண்ணம் திரும்பியிருக்கிறேன். இருப்பினும் எனக்கும் ஆனந்தராஜூவுக்கும் கணிணிக்கும் அப்பாற்பட்ட ஒரு பிரியம் இருப்பதென்னவோ நிஜம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கும் ஆனந்தராஜூவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம். ஓய்வுபெற வருடங்களை மாதங்களை எண்ணிவிட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவன் நான். ஆனந்தராஜோ 35 வயது ­ளைஞன். (இதனாலேயே ஆரம்பம் முதல் ‘அவன், இவன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்). அவனுடைய பரந்த நெற்றியும் (நெற்றி எங்கே முடிகிறது தலை எங்கே ஆரம்பிக்கிறது என்பதே தெரியாது) நீண்ட நாசியும் அறிவார்ந்த கண்களும் அவனை சற்றே வயதானவனாகக் காட்டியதால் எங்களுடைய சிநேகிதத்தை யாரும் வயது காரணமாக வித்தியாசமாகப் பார்த்ததில்லை. நானே கூட ஆரம்பத்தில் அவனுடைய உருவத்தைப் பாத்து வயதானவன் என்று நினைத்துக் கொண்டு,
“எப்ப சார் உங்க ரிடையர்மெண்டு?”
“அதுக்கென்ன சார், இப்பதானே 35 வயசாவுது”
“நிஜமாகவா? சார், சாரி தப்பா நினைச்சுக்காதிங்க”
“அதனாலென்ன சார். நீங்க வேணும்னா கேட்டிங்க?”
எனக்கு இன்னும் கூட ஆனந்தராஜூவின் வயது குறித்த சந்தேகம் இருக்கிறது.
ஒரு நாள் ஆனந்தராஜ் என்னைத்தேடி வந்தான்.
“என்ன ஆனந்து இந்தப் பக்கம்?”
“நம்ப ஆபீஸ்ல நடத்தற “சிறகு” பத்திரிக்கைகு எதாவது எழுதலாம்னு…” என்று இழுத்தான்.
“சரி. எழுது!” என்றேன்.
“அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு…”
எனக்கு உடனே சற்று தலைகனம் ஏற்பட்டது. என்னைப்போன்ற ஒரு எழுத்தாளனை அனைவரும் தேடி வருவது சகஜம் தான் என்று தோன்றியது. நானும் ஏதோ எழுதி தருகிறேன். சிறுகதை என்ற பெயரால் ­ இதே “சிறகு” பத்திரிக்கையில் வெளியாகியிருக்கிறது. போனால் போகிறது என்று வெளியிடுகிறாகள் போலும். (“சிறகு” தவிர வேறு எங்கும் என்னுடைய எழுத்தாற்றல் போணியாகுமா என்பதும் சந்தேகம் தான்!) இருந்தாலும் ‘பரவாயில்லை நன்றாகத்தான் எழுதுகிறேன் போல’ என்று நினைத்துக் கொண்டேன். என்னுடைய நண்பனுக்கு எழுதுவதில் இருக்கும் சந்தேகத்தை போக்குவது என் கடமை. அவனுக்கு என்னுடைய எழுத்தாற்றலை பிரஸ்தாபிக்க முற்பட்டேன்.
“அதாவது நீங்க எழுதற ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு…” என்று ஆரம்பித்தவனை அவன் இடைமறித்தான்.
“ஏன் சார் விஷயமே இல்லாமல் எழுத முடியாதா?”
அவன் அவ்வாறு கேட்டதும், நான் ஏதோ ஒரு மாயசுழலில் மாட்டிக்கொண்டிப்பது புரிந்தது. என்னை கிண்டல் பண்ணுகிறானா? “சிறகு” பத்திக்கையை கிண்டல் பண்ணுகிறானா?. இல்லை நிஜமாகவே கேட்கிறானா? என்று எனக்கு மிகுந்த சந்தேகம் ஏற்பட்டது.
“லாண்டரி கணக்கு, பால் கணக்கு இப்படி எழுதனும்னா கூட விஷயம் வேண்டும் ஆனந்து. விஷயமே இல்லாமல் எழுதனும்னா ஏதாவது கிறுக்கினால் தான் உண்டு” என்றேன் எரிச்சலில்.
அவனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். அவனுடைய முகம் தெளிவானது போல தோன்றியது. என்னிடம் இருந்து சரேலென விலகி வேகமாக நடந்தான்.
இந்த விஷயத்தை நான் மறந்தே போனேன் மீண்டும் என்னைத்தேடி ஆனந்தராஜ் வரும் வரையில்.
“சார், “சிறகு” படிச்சீங்களா?” என்றான் என் மேஜை மீதிருந்த “சிறகு” பத்திரிகையை காட்டி. சற்று முன்னர் தான் அந்த மாத “சிறகு” பத்திகையை நான் படிக்க கொடுத்துச் சென்றிருந்தார்கள். எனக்கும் இந்த வார குமுதம், விகடன், குங்குமம் படிக்க வேண்டியிருந்ததால் மெதுவாகப் படித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனந்தராஜ் “சிறகு” பற்றி கேட்டதும் எனக்கு முந்தைய நிகழ்ச்சி ஞாபகம் வர சற்று பயமாகக்கூட இருந்தது. நல்லவேளையாக ‘க்ளுக்கடளுக’ என்ற சத்தங்களுடன் காபேய்ய் என்ற குரல் கேட்க சட்டென்று கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு காபி வாங்கும் சாக்கில் விலகினேன். மீண்டும் எப்படி கதை எழுதுவது என்று சொல்லிக் கொடுத்து எரிச்சலடையத் தயாரில்லை.
நான் காபி சாப்பிட்டுவிட்டு காலார நடந்து செல்லலாம் என்று கழிவறை பக்கம் சென்றபோது மீண்டும் ஆனந்தராஜை பார்த்தேன். அங்கிருந்த கண்ணாடியைப் பாத்து ஏதோ கையை நீட்டி பேசுவது போலிருந்தது. அல்லது என்னுடைய பிரமையா? என்னைப் பாத்ததும் நீட்டிய கையை தலை கோதுவது போல செய்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவனை பார்த்து,
“காபி சாப்டாச்சா?” என்றேன் எதையாவது கேட்க வேண்டுமே என்ற நினைப்பில். பதிலுக்கு அவன் ஏதோ முணுமுணுத்தது எனக்கு சரியாகக் கேட்கவில்லை.

மற்றொரு நாள் சற்றேரக் குறைய ஒரு மாதம் கழித்து ஆபீஸ் வராண்டாவில் ஆனந்தராஜை பார்த்தேன். தனக்குத்தானே கையை நீட்டி மடக்கி ஏதோ பேசிக் கொண்டு போனவனை கூப்பிட்டு,
“என்ன ஆனந்து. ஏதோ கணக்கு போட்டுக் கொண்டு போற?” என்றேன்.
“ஒன்றுமில்லை சார். சும்மா..” என்று அவன் சொல்லிவிட்டு போய்விட்டான்.
நான் ஆனந்தராஜை கடைசியாகப் பாத்தது அப்போது தான்.
நான் ஓய்வு பெற்று ஒரு மாதம் கழித்து பாஸ் வேண்டி அலுவலகம் வர நோிட்டது. அலுவலகம் நுழைந்ததுமே ஒரு ஆள் என்மேல் சற்றேரக் குறைய மோதிக் கொண்டு போனான். சரியாக வாராத தலையுடனும் ஷேவ் செய்யாத முகத்துடனும் தாறுமாறாக சட்டை பேண்ட் அணிந்துக் கொண்டு தனக்குத்தானே சத்தமாக ஏதோ பேசிச்கொண்டு போன அவனை எனக்கு வந்த எரிச்சலில் அறைய வேண்டும் போலிருந்தது. என்ன அலுவலகம் இது?. வாசலில் நூறு பேர் காவலாளிகள் இருந்தும் இது போன்ற பைத்தியக்காரர்களை எப்படி அனுமதிக்கிறாகள் என்று கோபமாக இருந்தது.

“வணக்கம் சார். எப்படி இருக்கறீங்க?” என்று என் சிந்தனையை கலைத்தார் ஒருவர். ஆனந்தராஜூ வுடன் வேலைப்பாப்பவர் இவர்.
“நல்லாயிருக்கேன் சார். ஆனந்தராஜ் எப்படி இருக்கிறார்? அவரைப் பார்ப்பதற்குத்தான் போய் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“என்னது, ஆனந்தராஜா? இப்போது உங்கள் மேலே மோதிக் கொண்டு போனாரே. பாக்கலை?
நான் அதிர்ந்துப் போனேன்.

chandarsekar எழுதியவை | ஓகஸ்ட் 8, 2008

இன்று காலை விடியும்போது…

இன்று திங்கட்கிழமை காலை விடியும்போது நான் நினைக்கவேயில்லை இன்றைய பொழுது இப்படியாகுமென்று. அனைத்து நாட்களைப்போலத்தான் இன்றைய பொழுதும் விடிந்ததும் காபியும் செய்தித்தாளுமாக – கணவரைக் கொன்ற பெண், காதலனுடன் ஓடிப்போன மனைவி, மாமியாரைக் கொன்ற பெண், பெண்ணைக்கொன்ற கள்ளக்காதலன், கஞ்சா கடத்தியப் பெண் என்று தான் எல்லா நாட்களைப்போல, அனைவருக்கும் விடிவது போலத்தான் என் பொழுதும் விடிந்தது. காலைஉணவு முடித்து ஆபீஸூக்கு கிளம்பும் முன்தான் இன்று வண்டியை serviceக்கு விட தீர்மானித்தேன்.

நான் தினமும் என்னுடைய இரு சக்கர மோட்டார் வாகனத்திலேயே ஆபீஸூக்குச் சென்று வருவது வழக்கம். ஆபீஸ் இருப்பது சரியாக 20 கி.மீ தூரம். போக எனக்கு ஆகும் நேரம் 40 நிமிடங்கள். (20 கி.மீ போக 40 நிமிடங்களா என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. சராசரி 30 கி.மீ வேகம் ஒரு வேகமா என்று அங்கலாய்பது புரிகிறது. ஐயா, சென்னை சாலைகளைப் பற்றி உங்களுக்குச் தெரியவில்லை. என்னுடைய இந்த வேகம் பேயோட்டம். என்னுடைய நண்பர்கள் நான் வண்டியோட்டும் வேகத்தைப் பார்த்து யாரும் என் வண்டியில் என்னுடன் வருவதேயில்லை!) போக வர மொத்தம் 40 கி.மீ. எனக்கு பழகிப்போய்விட்டது.

இன்று காலை என்னுடைய வண்டியை serviceக்கு விட தீர்மானித்தது தான் நான் செய்த முதல் தவறு. நேற்று ஞாயிற்றுக்கிழமை வண்டியை serviceக்கு விட்டிருக்கலாம். எந்தவித தொல்லையும் இல்லாமல் மாலை போய் வண்டியை எடுத்து வந்திருக்கலாம். விதி யாரை விட்டது? காலை அடையாறு (அங்குதான் authorized service center இருக்கிறது) போகும்போதே சாலைகள் எல்லாம் வழிய வழிய எல்லா வாகனங்களும் போய்கொண்டிருக்கும்போதே எச்சரிக்கை அடைந்திருக்கலாம். இல்லை. வாகனங்கள் நடுவே புகுந்துபுகுந்து போய் பழக்கப்பட்டவனாகையால் இந்த traffic jam எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஒரு வழியாக (நிஜமாகவே நிறைய one way traffic) service centre போய் வண்டியைவிட்டுவிட்டு நீண்ட நாட்களுக்குப்பிறகு ஆபீஸ் செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு அடையாறு – பிராட்வே என்று எழுதி காலியாக வந்த ஒரு பஸ்ஸில் மிகுந்த சந்தோஷத்துடன் ஏறினேன். (அதுவரையில் பிதுங்கி வழியும் இந்த பஸ்களில் எப்படி பயணம் செய்யப்போகிறோம் என்று மிகவும் பயந்திருந்தேன்!) அவரது இருக்கையில் அமர்ந்து இருந்த கண்டக்டரிடம் ஓடும் பஸ்ஸில் மிகவும் பிரயத்தனப்பட்டுப்போய் ‘பிராட்வேக்கு ஒரு டிக்கட்’, என்றேன். ஏறஇறங்கப் என்னைப் பார்த்த கண்டக்டர் “அப்படீயே குதிச்சி எதிர்க்கப்போய் நின்னுக்க” என்றார். சற்றுநேரம் விழித்த எனக்கு புரிந்தது. அடாடா, நான் எதிர்பக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறியிருக்கவேண்டும். க்ஷணநேரம் ஒரு சிக்னலில் பஸ் நிற்க நான் அவசரகதியில் இறங்கி எதிர்திசைக்கு ஓடினேன்.

மீண்டும் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு வழிய வழிய ஒரு பஸ் வந்தது. என் அருகில் இருந்தவரிடம் முன்எச்சரிக்கையாக இந்த பஸ் பிராட்வே போகுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர் போகும் என்று சொல்லிக்கொண்டே பஸ்ஸை பிடிக்கஓட அவர்பின்னால் நானும் ஓடினேன். ஒரு வழியாக பஸ்ஸில் காலை வைக்க இடம்கண்டுபிடித்து உள்ளே அனைவரின் எரிச்சலுக்கிடையில் மிகவும் கஷ்டப்பட்டு என்னைத் திணித்துக்கொண்டேன். நல்லவேளையாக என்கையில் பை, பெட்டி ஏதும் இல்லாதிருந்ததால் நிற்க அவ்வளவாக கஷ்டப்படவில்லை.

……………………..தொடரும்

« Newer Posts

பிரிவுகள்